கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் நம்மை பரிசுத்தமான ராஜரீக ஆசாரியக்கூட்டமாக அழைத்துள்ளார். தேவன் தம்முடைய வேலையைச் செய்ய கீழ்ப்படியும் இருதயம் உள்ளவர்களை அழைக்கிறார். தமது வேலைக்கு தேவையானவர்களை பெயர்சொல்லி அழைக்கிறார். தேவன் தம் முடைய ஜனத்தை மீட்க மோசேயை, ஆரோனை, பெசலேயலை, அகோலியாவை, தெபோராளை, எஸ்தர், மொர்தேகாய், நெகேமியா, தானியேல் என்று பல மனிதர்களை காலா காலங்களில் அழைத்து, தன்னுடைய ஜனத்தை அழிவிலிருந்து மீட்டார். இந்த காலத்திலும் வரப்போகும் அழிவிலிருந்து குடும்பங்களையும், தனிப்பட்ட மனிதர்களையும், சபையையும், தேசத்தையும் மீட்க மனிதரைத் தேடிக் கொண்டிருக்கிறார். நீ தேவன் தேடும் மனிதனாக மாறவிருப்பமா? எஸ்.4:14 வசனத்தில், “நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும் படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத்தெரியும்,…” என்று மொர்தெகாய் எஸ்தர் ராஜாத்திக்கு சொல்லிய செய்தியை தேவன் உன்னிடம் கேட்கிறார்.
தேவன் உன்னை இரட்சித்து சபையில் வைத்திருப்பது எதற்காக? அந்தகார இருளில் உள்ள ஜனங்களை மீட்பதற்காகவே. வருங் கோபத்துக்கு தப்புவதற்கு ஒவ்வொரு மனிதனுக்கும் உதவி செய்ய வேண்டும்.
தேவன் தன்னுடைய வேலைக்கு தகுதியானவர்களை அழைப்பார், அழைக்கப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்களாகவும், தாழ்மையுள்ளவர்களாகவும் அவருடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும். அழைத்த நபரை தகுதியுள்ளவராக்குகிறார். ஞானத்தினாலும் தேவ ஆவியினாலும் நிரப்பிப் பயன்படுத்துகிறார். நமக்கு அவர் வேலையைச் செய்ய திறமையை கொடுப்பவர் தேவனே. நாம்மேன்மைபாராட்டஒன்றுமில்லை. அழைப்புக்கு கீழ்ப்படியும் இருதயம் இருந்தால் வரங்களையும், தாலந்துகளையும் கொடுத்து பயன்படுத்துவார். அழைப்புக்கு கீழ்ப்படிபவர்களுக்கு வாழ்வின் மேன்மையும் உயர்வும் அவரால் வரும்.
தனி மனிதனின் வாழ்வு எப்படி கட்டப்பட வேண்டும்? என்று தேவன் எதிர்ப்பார்க்கிறார் என்று பார்ப்போம்!
1. சரீரமாகிய ஆலயம் கட்டப்பட வேண்டும்
1கொரி.3:16,17 வசனங்களில் “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவிஉங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்” என்கிறார். நம்முடைய சரீரங்களை பரிசுத்தமாக கட்டிக்காக்க வேண்டும். துர் இச்சைகளுக்கு இடமாக உடலை பேணக்கூடாது. ஒருவனும் தன்னை வஞ்சியாத படி தேவனுக்கு பிரியமாக வாழும்படி மோகம், இச்சை, காமவிகாரம், விபசாரம், வேசித்தனம், பரிகாசங்கள் போன்ற மாம்சத்தின் கிரியைகளை விட்டு விட வேண்டும். பழைய மனிதனின் கிரியைகளை அழித்துப்போட்டு பரிசுத்தாவியானவர் தங்கும் ஆலயமாககட்ட வேண்டும். ஒவ்வொரு மனிதரையும் வசனத்தின் மூலமாக போதித்து பவுலைப் போல தேவனுடையமாளிகையாக கிறிஸ்துவின் மேல் கட்டி எழுப்ப வேண்டும்.
போடப்பட்ட அஸ்திபாரமாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் கட்ட வேண்டும். பொன், விலையேறப்பெற்றகல் போன்றவற்றால் கட்ட வேண்டும். வேலைப்பாடு வெளிப்படும் நாளில் நாம் ஆதாயப்படுத்தும் மக்கள் தேவனில் நிலைத்திருந்தால் கூலியைப் பெறுவோம். தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையு ம்கிறிஸ்துவுக்காக ஆலயமாக கட்டி எழுப்ப வேண்டும்.
2. அலங்கம் கட்டப்பட வேண்டும்
நெகே.2:17 வசனத்தில், “எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனிநிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக்கட்டுவோம் வாருங்கள்” என்றார் நெகேமியா.
ஒழுங்கற்ற, கட்டுப்பாடற்ற, மதிலிழந்த, தனி மனிதனின் வாழ்வு கட்டப்பட வேண்டும். பலமான விதத்தில் கட்டப்பட வேண்டும். மதில்கள் மேல் பாதுகாப்புக்காக ஜாமக்காரர் நியமிக்கப்பட வேண்டும். ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அலங்கம் போல இருப்பது எவையென்றால் குடும்ப ஜெபம், தனி ஜெபம், வேதவாசிப்பு வேண்டும். பலமான ஜெபம், வேத அறிவு, சபை விசுவாசிகளுடன் அந்நியோனியம், கூட்டுறவு, பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில் உறுதியுடன் நிலைத்திருப்பது போன்றவை பலமான மதில்களாக ஒரு தனி மனிதனை காக்கிறது.
ஜாமக்காரரை நியமித்து ஒழுங்கு செய்ய வேண்டும்
எபிரெயர் 6:4,5,6,7 வசனங்களில் நாம் இவ்வாறு வாசிக்கிறோம், “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரம ஈவைருசி பார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். எப்படியெனில், தன் மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக் கேற்றபயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும்” (வசனத்திற்கு ஏற்ற பலனை வாழ்வில் கொடுக்க வேண்டும்) மேலும் உன்.4:12 “என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்” என்கிறார்.
1. அடைக்கப்பட்ட தோட்டம் என்பது வெளிப் பார்வைக்கு உள்ளே உள்ளவை தெரியாது. தனிப்பட்ட மனிதனின் அந்தரங்கம் பரிசுத்தமாக காக்கப்பட வேண்டும். நாவு காக்கப்பட வேண்டும். செவிகள் பரிசுத்தமாய் காக்கப்பட வேண்டும். சிந்தை காக்கப்பட வேண்டும். ஒழுங்கு நெறியைக்கைக் கொள்ள வேண்டும்.
2. மறைவு கட்டப்பட்ட நீரூற்று: தீட்டுப் படுத்தப்படாதது மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படாதது, கறைபடாதது, பிரிக்கப்பட்டது. பரிசுத்தமான வாழ்க்கை வாழ வேண்டும்.
3. முத்திரிக்கப்பட்ட கிணறு: தேவனுக்காய் பிரித்தெடுக்கப்பட்டது. தேவனுக்குச் சொந்தமானது. சரீரமாகிய ஆலயம் பாதுகாக்கப்பட வேண்டும். அதிகாலை ஜெபம், வேத வாசிப்பு, ஜெபம், தியானம் தேவை. மதில் சுவர்களைக் கட்ட தடைகள் ஏற்படும். அலங்கம் பலமாகவும், உறுதி யாகவும், உயரமாகவும் இருப்பதால் தான் பாதுகாப்பு உண்டு.
4. ஆலயம் அலங்கரிக்கப்பட வேண்டும்
1பேதுரு 3:4 வசனத்தில், “அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலு முள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது.” அழியாத அலங்கரிப்பாகிய சாந்தம், அமைதலுள்ள ஆவி அவசியம். 2பேதுரு 1:4 வசனத்தில், தேவனுடைய பிள்ளைகள் இச்சையினால் உலகத்திற்கு உண்டான கேட்டுக்குத் தப்ப வேண்டும். திவ்விய சுபாவத்துக்கு பங்குள்ளவர்களாகும் பொருட்டு மகாமேன்மையும், அருமையுமானவாக்குத்தத் தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தேவனுடைய பிள்ளைகள் ஒழுங்குள்ளவர்கள் என்று காணப்பட வேண்டும். மோசே – சாந்த முள்ளவன், தாவீது – இருதயத்துக்கு ஏற்றவன், தானியேல் – பிரியமானவன் என்று நற்சாட்சி பெற்றவர்களாக காணப்பட்டனர்.
தனிப்பட் டவாழ்க்கையில் – மதில்கள் எழுப்பப்பட வேண்டும், அலங்கரிக்கப்பட வேண்டும், திவ்விய குணங்களால் அலங்கரிக்கப்பட வேண்டும். உள்ளான மனிதன் நாளுக்கு நாள் பெலன் அடைந்து மறுரூபப்பட வேண்டும்.
மற்றவர்களை போஷிக்கிறவர்களாகமாற வேண்டும்
ஆதி.45:6,7 வசனத்தில், தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாக பஞ்சம் உண்டாயிருக்கிறது. இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும் பெரிய இரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார்.
தேவனுடைய பிள்ளைகள் ஆகாரத்தால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். மற்றவர்களை போஷிக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும். களஞ்சியங்களாக இருக்க வேண்டும். யோசேப்பு, யாக்கோபின் சந்ததியார் பூமியிலிருந்து அழிக்கப்படாமல் ஆதரிக்கப்படவும், பெரிய இரட்சிப்பினால் அழிவிலிருந்து விடுவிக்க எகிப்துக்கு அனுப்பப்பட்டான்.
நாம் தேவனுடைய வார்த்தையால் அநேகரை போஷிக்கக்கூடிய வேத அறிவினால் நிரப்பப்பட வேண்டும். மேலும் சரீரபிரகாரமான தேவைகளையும் சந்திக்ககூடியவர்களாக நாம்மாற வேண்டும். ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்களாக இருப்பவர்கள் அழிவதில்லை.
அன்பு நண்பரே! தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை கட்ட எப்படி உதவ வேண்டும்? என்பதை வாசித்தீர்கள். நாம் நம்முடைய ஆலயமாகிய சரீரத்தையும், மற்ற மனிதர்களின் வாழ்க்கையையும் பொன்னினாலும் விலையேறப் பெற்றகற்களினாலும் கட்டி எழுப்ப வேண்டும். நாம் கட்டினது நிலைத்தால் தேவனிடம் கூலியைப் பெறுவோம். நம் முடைய பாதுகாப்புக்காக மதில்கள் உள்ளவர்களாகவும், ஜாமக்காரரைப்போல் விழிப்புள்ள கிறிஸ்தவ வாழ்க்கை வாழ வேண்டும். சாந்தம், அமைதலுள்ள ஆவியாகிய ஆவிக்குரிய குணங்களால் நமது ஆலயத்தை அலங்கரிக்க வேண்டும். வேத அறிவினால் நிரப்பப்பட்டு, அநேக ஆத்துமாக்களை போஷித்து வழி நடத்துகிறவர்களாகமாற வேண்டும். தேவன் நம் தனிப்பட்ட வாழ்க்கையையும் சபையையும் கட்டி மகிமைப் படுவாராக! அல்லேலூயா!




