கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவனுடைய பிள்ளைகள் உலக மக்களுக்கும், தேவனுடைய சபைக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர் பார்க்கிறார். அழிவின் பாதையில் செல்லும் ஜனங்களை மீட்பதற்காகவே நாம் தேவனுடைய பிள்ளைகளானோம். பரிசுத்த ஜாதியாகவும், அவரின் சொந்த குமாரரும், குமாரத்திகளுமாக தெரிந்து கொள்ளப்பட்டோம். தேவன் பரிசுத்தமான ராஜரீக ஆசாரியக் கூட்டமாக நம்மை மாற்றியுள்ளார். ஏன்? என்றால், நம்முடைய ஜனங்களுக்கு உதவி செய்வதற்காகவே. நியாயத் தீர்ப்புக்காக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனங்களை மீட்கவும், சுவிசேஷத்தின் நற்செய்தியை தீவிரமாக பரப்பவும் வரப்போகும் பெரிய அழிவிலிருந்து ஜனங்களை விடுவிக்கவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். எஸ்தர் 4:14 வசனத்தில், “நீ இப்படிப் பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும் படி உனக்கு ராஜ மேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும்…” என்று மொர்தெகாய் எஸ்தர் ராஜாத்திக்கு சொல்லி அனுப்பினான்.
அழிந்து போகும் ஜனங்களை மீட்கவும் ஆக்கினைக்குட்பட்டவர்களை விடுதலை செய்யவும் நாம் ஏற்படுத்தப்பட்டுள்ளோம். எஸ்தர் ராணியின் ஜெபம் என்னவென்றால், “என் ஜனங்களுக்குவரும் அழிவை எப்படி சகிக்க முடியும்?” இந்தக் காலம் எப்படிப்பட்டது என்ற அறிவு நமக்குத் தேவை. இந்தக் காலம் எப்படிப்பட்டது? தேசங்கள் நியாயம் தீர்க்கப்படுகின்றன. குடும்பங்கள் நியாயந் தீர்க்கப்படுகிறது. நாம் தேவ கோபாக்கினைக்கு நேராகப் போய்க் கொண்டிருக்கிற மக்களை மீட்க வேண்டும். நாம் எப்படி உதவ முடியும்? நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம். நாம் பரிந்து பேசி ஜெபிக்க வேண்டும்.
அழிந்து போகும் ஆத்துமாவுக்காக மன்றாடும் காலம்
ஆதி.18:22-32 வசனங்களில், துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக. நீதிமானையும் துன்மார்க்கனையும், சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக, சர்வலோக நியாயாதிபதி நீதி செய்யாதிருப்பாரோ? என்று ஆபிரகாம் அழிந்து போகும் சோதோமின் மக்களுக்காக மன்றாடி ஜெபித்தான். லோத்துக்காகவும், மக்களுக்காகவும் விண்ணப்பம் பண்ணி ஜெபித்தான். ஆபிரகாம் பரிந்து பேசினான். நாமும் பரிந்து பேசி மக்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
மீட்கும் காலம்
ஆதி.14:13,14 வசனங்களில், “தன்சகோதரன் சிறையாகக் கொண்டு போகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப்பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து…. சகல பொருள்களையும் திருப்பிக் கொண்டு வந்தான்”
சிறைப்பட்டு போன நம் சகோதரர்களை மீட்கும்காலம். மீட்கவேண்டுமானால் கிரயம் செலுத்த வேண்டும். 5 இராஜாக்கள் சோதோமிலும் கொமொராவிலும் உள்ள பொருள்கள் எல்லாவற்றையும் லோத்து அவன் வீட்டார் பொருள்களையும் சிறைப்பிடித்து கொண்டு சென்றனர். ஆபிரகாம் தன் வேலையாட்களுடன் சென்று கிரயம் செலுத்தியுத்தம் செய்ய சிறைமீட்டான். பிசாசின் அக்கினியாஸ்திரங்களை அழித்து சிறையிருப்பிலிருந்து ஜனங்களை மீட்கவேண்டும். அக்கினி யாஸ்திரம் என்பது அம்பின் நுனியில் விஷம் தடவி, தீப்பற்றக்கூடிய மருந்துபூசி தீ கொளுத்தி எதிரியின் கோட்டைக்குள் வீசுவார்கள். நாம் பரிசுத்த ஆவியில் நிறைந்து ஜெபித்து சிறையிருப்பிலிருப்பவர்களை மீட்க வேண்டும்.
சகோதரர்களின் மேன்மையைத் தேடும் காலம்
தானி.2:49 வசனத்தில், “தானியேல் ராஜாவை வேண்டிக் கொண்டதின் பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத் நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோ வென்றால் ராஜாவின் கொலு மண்டபத்தில் இருந்தான்.”
நாம் கர்த்தராலே உயர்த்தப்படுகிறோம். நாம் உயர்த்தப்படுவதின் நோக்கம் நம் உடன் சகோதரர்களை உயர்த்தும் படிக்கேதான். தானியேல் ராஜாவிடம் வேண்டிக் கொண்டு உடன் சகோதரர்களையும் மேன்மையான ஸ்தானத்தில் கொண்டு வந்து வைத்தான். நாமும் உடன் சகோதரர்களை உயர்த்த வேண்டும்.
திருச்சபையைக்கட்ட வேண்டிய காலம்
ஆகாய் 1:2 வசனத்தில், “இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்ற காலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” கி.மு.538ல் கோரேஸ் (எஸ்தர்ராணியின்மகன்) இராஜா ஒரு சட்டம் பிறப்பித்தான். தேவ ஆலயம் கட்ட வேண்டும் என்றார். கி.மு.536ல் செருபாபேல் என்பவன் தேவ ஆலயத்தைக் கட்ட எருசலேம் வந்தான். சமாரியர் தடுத்தனர். தேவ ஆலயம் 14 ஆண்டுகள் கட்டமுடியாமல் போயிற்று. அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. கட்டி முடிக்கப்படவில்லை. ஆகாய் சகரியா என்ற தீர்க்கதரிசிகள் எழும்பினார்கள். ஆகாய் 1:4 வசனத்தில், “இந்த வீடு பாழாய்க்கிடக்கும் போது, நீங்கள் மச்சுப் பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும் படியான காலம் இதுவோ?” இந்த வீடு பாழாய்க்கிடக்கும் போது… (6 வசனம்முதல் 9 வசனம்) 1. கொஞ்சம் அறுத்துக் கொண்டு வருகிறீர்கள், 2. புசித்தும் திருப்தியாக இல்லை, 3. குடித்தும் பரி பூரணமில்லை, 4. வஸ்திரம் உடுத்தியும் குளிர் விட வில்லை, 5. சம்பாதித்தும் பொத்தலானபையில் போடுகிறீர்கள், 6. எதிர்பார்த்தும் கொஞ்சமாக அறுத்துக் கொண்டுவந்தனர். கி.மு.520-516ல் மீண்டும் செருபாபேல் ஆலயத்தை கட்டிமுடித்தான்.
ஆலயத்தை எப்படிக் கட்ட வேண்டும்!
எபே.2:20,21ல் கூறப்பட்டபடி, “அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின் மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசு கிறிஸ்து தாமே மூலைக் கல்லாயிருக்கிறார்” மனுஷீகம் நிறைந்த இடத்தை விட்டு விட்டு தெய்வீகத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடத்தில் ஆராதிக்க வேண்டும்.
எதைக்கொண்டுகட்டவேண்டும்?
பொன், வெள்ளி, விலையேறப் பெற்ற கற்கள் கொண்டு கட்ட வேண்டும்.
அறுவடையின் காலம்
மத்.9:37, 38 “அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக் கொள்ளுங்கள் என்றார்.”
அறுப்புக்கு வேலையாட்களை அனுப்ப வேண்டுதல் செய்ய வேண்டும். எஜமானைப் பார்க்கவேண்டும். கதிர் அறுவடை செய்ய தேவ ஆவியின் பெலன் தேவை. இது அறுவடையின் காலம்.
இதை வாசிக்கும் அன்புநேயரே! எப்படிப் பட்ட காலத்தில் நீ உதவ வேண்டும்? எப்படி நாம் தேவ ஜனங்களுக்கு உதவ வேண்டும் என்று பார்த்தோம். அழிந்து போகும் ஆத்து மாக்களுக்காக பரிந்து பேசி ஜெபிக்கவேண்டும். சிறையிருப்பில் இருக்கும் நம் சகோதரர்களை மீட்க வேண்டும். சகோதரர்களின் மேன்மையைத் தேடும் காலம். மேலும் திருச்சபையைக்கட்ட வேண்டும். தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தேவ ஆலயமாக கட்டப்பட்டு சீயோனிலே தேவனுடைய சமூகத்தில் காணப்பட சபை பரிசுத்தமாக்கப்பட வேண்டும். இப்படிப் பட்ட காலங்களில் நாம் உதவியாயிருக்கும் படி தேவன் கிருபை செய்வாராக! ஆமென்.




