கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! நீங்கள் படும் ஒவ்வொரு பிரயாசத்திற்கும் இந்த உலகிலும் மறு உலகிலும் பலனுண்டு. “நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும்” என்று நீதிமொழிகள் 10:16ஆம் வசனத்தில் பார்க்கிறோம். நாம் பட்ட பாடுகளுக்குப் பலன் உண்டு என்ற மகிழ்ச்சி நமக்கு வேண்டும். இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் தங்கள் பிரயாசத்தின் பலனை தாங்களே அழித்துவிடுகிறார்கள். ஆனால் நாமோ விசுவாசத்தினால் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். நாம் பிரயாசப்படுவது ஜீவனை பிறப்பிக்க வேண்டும். பாவத்திற்கு மரித்தவர்களான நம்மை அவரை துதிக்க, ஜீவனைப் பிறப்பிக்க, ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க உயிர்ப்பித்திருக்கிறார். கர்த்தருக்குள் நாம் படும் பிரயாசங்கள் ஒருபோதும் விருதாவாக இராது (1கொரி.15:58). நற்கிரியை செய்யும்படி அழைக்கப்பட்ட நாம் தேவ சித்தப்படி, அவர் விரும்புகிறபடி கிரியைகளை நடப்பிக்க வேண்டும். மனுஷன் தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருப்பது தேவன் அவனுக்கு அளிக்கும் அநுக்கிரகம் (பிரசங்கி 5:19).
ஒழுங்கின்மையும் வெறுமையும் எங்கு இருக்கிறதோ அங்கே – ஒழுங்கை உண்டுபண்ண, சீர்ப்படுத்த, வெறுமையான இடத்தை நிறைவாக்க, செவ்வைப்படுத்த தேவன் உன்னை அழைக்கிறார். நீ ‘சிறுபிள்ளை’ என்று கூறாதே! உன்னை அனுப்புகிறவர் உன்னோடு இருக்கிறார். நீ பூமிக்கு உப்பாக இருக்கிறாய். உப்பு சிறியதே. ஆனால் அது இல்லாமல் சாப்பிடலாகாது. நீ வெளிச்சம். தேவன் உன்னதமான இடத்திலே உன்னை வைத்துள்ளார். உன் மூலமாக ஒரு பெரிய காரியத்தைச் செய்ய தேவன் விரும்புகிறார். ஆனால் நீயோ உன் இஷ்டப்படி, உன் நேரத்தில், உனக்குப் பிரியமானவர்களுடன் சேர்ந்து செய்வேன் என்கிறாய், ஆதலால் நீ தேவனால் பயன்பட முடியாதவனாய் இருக்கிறாய்.
நாம் எப்படி பிரயாசப்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு பிரயாசப்பட வேண்டும்
கர்த்தர் என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்ற எண்ணம் நமக்குத் தேவை. கடமையை உண்மையாய்ச் செய்ய கர்த்தருக்குப் பயப்படும் பயம் தேவை. கர்த்தருக்குப் பயப்படும் ஒரு மனிதனால் இலஞ்சம் வாங்க முடியாது. உபவாசித்து ஜெபித்து கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடு பிரயாசப்பட வேண்டும். கர்த்தரிடத்திலே பயபக்தியாயிருந்த ஈசாக்கு விதை விதைத்தான். கர்த்தர் அவனை ஆசீர்வதித்து நூறு மடங்கு பலனைக் கொடுத்தார் (ஆதி.26:12). கர்த்தருக்குப் பயப்படும் ஒரு மனுஷன் தன் கைகளின் பிரயாசத்தை அநுபவிக்கிறான் (சங்.128:1,2). கர்த்தருக்குப் பயப்படாத ஒரு மனிதனின் பிரயாசத்தை அந்நியர் கொண்டு போவார்கள். இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்குப் பயப்படாமல் பொல்லாப்பை செய்ததினிமித்தம் அந்நிய புத்திரர் அவர்கள் விதை விதைக்கும்போது அதன் பலனைக் கொண்டுபோய் விடுவார்கள் (நியா.6:1-3). கர்த்தருக்குப் பயப்படாததால் இன்று உன் பிரயாசங்கள் வட்டிக்கடைக்காரர்களுக்கும், மருத்துவர்களுக்கும் வீணாக செலவாகிறது. என் வருமானங்கள் பொத்தலான பையில் போடுவதைப் போல் இருக்கிறதே, வாழ்வில் கனிகளில்லையே என்று சொல்லும் நீ உணர்ந்து, கர்த்தருக்குப் பயப்படு.
இரண்டாவதாக, கர்த்தருடைய வழி எது என்று நிதானித்துப் பிரயாசப்பட வேண்டும்
தேவனுடைய கட்டளைகளின்படி, கற்பனைகளின்படி, பிரமாணங்களின்படி, தேவன் ஏவுகிறபடி பிரயாசப்படும் போது பலனுள்ளதாக இருக்கிறது. உன் சுய வழியில் சாயாதே! உன் இஷ்டப்படி நடவாதே, உன் வழியில் நடப்பதால் தான் இன்னும் நீ அடிபடுகிறாய் (ஏசாயா 1:5). தாவீது தேவ வழியை விட்டு பெலிஸ்திய வழியிலே உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வந்தபோது ஊசா அடிபட்டான். தேவ சாயல் பெற வேண்டுமானால் கர்த்தருடைய வழியில் மட்டுமே நடக்கவேண்டும். யோனா தேவ சித்தத்திற்கு செவி கொடாமல் தன் சுய வழியில் நடந்தபோது கப்பலில் கலக்கம், பயம், குழப்பம் உண்டானது (யோனா 1:10,11). “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்” என்று ஏசாயா 55:8 கூறுகிறது. தேவனுடைய வழியில் நாம் பிரயாசப்படும்போது பலன் உண்டாகிறது.
மூன்றாவதாக கர்த்தருடைய வார்த்தையின்படி பிரயாசப்பட வேண்டும்
ஒருமுறை சீமோன் பேதுரு இரா முழுவதும் பிரயாசப்பட்டும் ஒரு மீனும் அகப்படவில்லை. இயேசு சீமோனைப் பார்த்து, ஆழத்திலே தள்ளிக்கொண்டு போய் வலையைப் போடுங்கள் என்றார். உடனே சீமோன் தேவனுடைய வார்த்தையின்படியே ஆழத்திலே வலையைப் போட்டான். வலை கிழியத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தான் (லூக்.5:5). ஒருவேளை தேவனுடைய ஆலோசனைகள் நமக்கு விளங்காததாக இருந்தாலும், நாம் தேவ வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் உன் அனுபவத்தை, அறிவை நம்பிப் பிரயாசப்படும்போது தோல்வி உண்டாகிறது. ஆதலால் தேவ சத்தத்தைக் கேட்கத் தாழ்மையோடு அவருடைய பாதத்தில் காத்திரு. அப்பொழுது தேவன் உனக்கு உதவி செய்வார்.
இதுவரை எங்கள் பிரயாசங்களைத் திறமையை அனுபவங்களைக் கொண்டு பிரயாசப்பட்டோம். பலனில்லை. ஆனால் இனி உமது வார்த்தையின்படியே செய்வேன் என்று கூறுவோமா!
நான்காவதாக ஆவியானவரின் அநுக்கிரகத்துடன் பிரயாசப்பட வேண்டும்
“பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” என்ற (சகரியா 4:6)ல் பார்க்கிறோம். கர்த்தருடைய ஆவியானவரின் அநுக்கிரகத்துடன் பிரயாசப்படும்போது சோர்வு உண்டாகாது. இளைப்பாறுதல் கிடைக்கும். ஆசீர்வாதங்கள் உண்டாகும். ஆவியானவர் 24 மணிநேரமும் நமக்கு உதவி செய்கிறார், ஆலோசனை தருகிறார், நம்மை நடத்துகிறார். எனவே நாம் அவரைப் பயன்படுத்த வேண்டும். ஆவியானவரே நம்மை சரியாக நடத்துவார். ஆவியானவரின் துணை கொண்டு பிரயாசப்படுவதும் ஆவியானவரின் துணை இல்லாமல் பிரயாசப்படுவதும் தறிக்கும், இயந்திரத்துக்கும் உள்ள வித்தியாசம் போன்றது.
ஐந்தாவதாக தேவ ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து பிரயாசப்பட வேண்டும்
தேவ ஆலோசனைகளுக்குக் காத்திருந்து அவரது ஆலோசனையின்படி நடக்க வேண்டும். தேவனுடைய திட்டம் மகத்துவமானது, அவர் நடத்துவார், நம்மேல் தம் கண் வைத்து நமக்கு ஆலோசனை சொல்லும் கர்த்தர் நமக்கு உண்டு. இஸ்ரவேல் புத்திரர் தேவ ஆலோசனையைக் கேளாமல் முறுமுறுத்தப்படியால், தேவன் அவர்கள் கேட்டதைக் கொடுத்தார். ஆனால் அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார் (சங்.106:13-15). என்ன செய்வோம் என்று திகைத்து நிற்கும் சூழ்நிலையில் தேவ ஆலோசனைகளுக்குக் காத்திருக்க வேண்டும். தேவ மனிதரிடமும் தேவ ஆலோசனைகள் உண்டு. தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனின் மனைவி இரண்டு பிள்ளைகளையும் கடன்காரன் அடிமையாக்கிக்கொள்ள வந்தபோது எலிசா தீர்க்கதரிசியின் ஆலோசனையின்படி நடந்து கடனிலிருந்து விடுதலை பெற்றாள். அவள் ஜீவனம் பண்ணுவதற்கான மார்க்கமும் உண்டாயிற்று (2இராஜா.4:1-7).
வியாபாரம் செய்யும்போது தேவப் பிள்ளைகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும். அவிசுவாசிகளுக்கும் விசுவாசிகளுக்கும் பங்கேது? (2கொரி.6:15).
தேவன் தம்முடைய நாமம் தரிக்கப்பட்ட பிள்ளைகளை ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். நாம் தேவனுக்காகப் பிரயாசப்படும்போது அன்புடன் பிரயாசப்படுவது அவசியம். நம் பிரயாசத்தை மிகைப்படுத்தவோ புகழவோ கூடாது. கர்த்தருக்குள் பிரயாசப்பட்டால் நிச்சயமாகவே பலன் உண்டு.