கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
ஆதியிலே நோவாவின் நாட்களில் பூமியானது தேவனுக்கு முன்பாக சீர்கெட்டதாயிருந்தது. பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. தேவன் பூமியைப் பார்த்தார். இதோ அது சீர்கெட்டதாயிருந்தது. மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே கர்த்தர் மக்கள் மேல் கடுங்கோபம் கொண்டார். பூமியை அழித்துப்போட சித்தமானார். ஆனால் நீதிமானாய் இருந்த நோவாவையும், அவனது குடும்பத்தையும் தேவன் பாதுகாத்தார். தேவனின் கடுங்கோபம் நம்மேல் வராமல் இருக்க வேண்டுமானால் நாம் நீதிமான்களாக தேவனுக்குப் பிரியமானவர்களாக வாழ வேண்டும். தேவனின் சத்தத்தைக் கேட்டு அதின்படி வாழ வேண்டும்.
இஸ்ரவேல் புத்திரரிடம் தேவன் கூறியது என்னவென்றால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளையத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள் என்றார். மேலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளையமிறங்கி, லேவியர் வாசஸ்தலத்தைக் காவல் காப்பார்களாக என்றார்.
தேவனின் கடுங்கோபம் மக்கள் மேல் வர காரணமானவைகள் சில:
1. தகாத சிநேகம்:
2நாளா.19:2,3 “…யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான்” தகாத சிநேகத்தை தேவன் வெறுக்கிறார்.
2. முறுமுறுப்பு:
உபா.1:33,34ஆம் வசனங்களில் “இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற்போனீர்கள். ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு: உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை…” என்று கூறினார். மேலும் உபா.1:26,27ஆம் வசனங்களில் “…நீங்கள் போக மாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்” என்று முறுமுறுத்ததால் தேவனின் கோபம் அவர்கள்மேல் மூண்டது.
3. அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம்!
எண்.14:1ஆம் வசனத்தில் “அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள்.” திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். எண்.32:9,10ல் இருதயத்தைத் திடனற்றுப் போகப் பண்ணினார்கள். அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவரானார்.
4. மனமேட்டிமை:
2நாளா.32:25ஆம் வசனத்தில், எசேக்கியா தனக்கு செய்யப்பட்ட உபகாரத்திற்குத் தக்கதாக நடவாமல் மனமேட்டிமையானான் கடுங்கோபம் மூண்டது.
2நாளா.32:20,21ல் எசேக்கியாவும் வானத்தை நோக்கி அபயமிட்டார்கள். அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார். அவன் அதம்பண்ணினார். அப்படியே சனகெரிப் “செத்தமுகமாய்” தன் தேசத்துக்குத் திரும்பிப்போனான்.
5. தாழ்த்தவில்லை, இருதயத்தைக் கடினப்படுத்தினான்:
2நாளா.36:12,13ஆம் வசனங்களில் “தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்குமுன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை… இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்” 2நாளா.36:16ஆம் வசனத்தில், “…அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.”
6. கர்த்தருடைய வார்த்தையை கைக்கொள்ளாதே போனபடியால் கோபம் வரும்:
2நாளா.34:21 “…கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதே போனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான்”
யோசியா கர்த்தரைத் தேட ஆரம்பித்தான். தேசத்தை சுத்திகரித்தான். ஆலயத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டான். நியாயப்பிரமாணம் கண்டுபிடிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது. இராஜா அந்த வார்த்தைகளை கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து தன்னைத் தாழ்த்தினான். கர்த்தரிடத்தில் தான் விசாரிக்க ஆட்களை அனுப்புகிறான். தேவன் உல்தாள் என்னும் தீர்க்கதரிசி மூலம் பேசினார். நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொன்னார். உன் கண்கள் காணாதபடிக்கு பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள். 2நாளா.34:31,32ஆம் வசனங்களில் ராஜா தன் ஸ்தானத்தில் நின்று உடன்படிக்கை பண்ணி யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினாள். கர்த்தரை சேவிக்கும்படி செய்தாள். அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கர்த்தரைவிட்டு பின்வாங்கவில்லை. கற்பனைகளை கைக்கொள், தேவனுடைய கோபத்துக்குத் தப்பலாம்.
அன்பு நண்பரே! தேவனுடைய கடுங்கோபத்துக்கு தப்பும்படி நம்மை தாழ்த்தி, இருதயத்தை கடினப்படுத்தாமல் அவர் கட்டளைகளை கைக்கொள்வோம். அப்பொழுது பிழைப்போம். தங்கள் வழிகளை கெடுத்துக்கொண்ட நோவா காலத்து மக்களும், சோதோம் கொமரா மக்களும் கடுங்கோபத்துக்குப் பலியானார்கள். தகாத சிநேகம் முறுமுறுப்பு, பரியாசங்கள், மனமேட்டிமைகள் கொண்டார்கள். தேவனின் கடுங்கோபத்துக்கு நம்மை ஆளாக்கி விடுவோம். யோசியா இராஜாவைப்போல தாழ்த்தி கற்பனைகளை கைக்கொண்டால் நாமும் நம் பிள்ளைகளும் பிழைப்போம்! அல்லேலூயா!