ஒரிஜினல் நாட்டுக்கோழி முட்டை ஓரிடத்தில் கிடைப்பதாக என் நண்பர் சொல்ல, நானும் முட்டை வாங்க அந்த இடத்திற்குச் சென்றேன். என்ன அண்ணே! நாட்டுக் கோழி முட்டை மற்ற இடங்களில் ரூ.10/- ரூ.12/-க்கெல்லாம் கிடைக்குது. நீங்க என்னன்னா 15 ரூபாய் சொல்றீங்களே என்றேன்.
தம்பி! நாங்க எங்கள் பண்ணையில் சுமார் 400 நாட்டுக் கோழிகளை வளர்த்துப் பராமரித்து வருகிறோம். பிராய்லர் கோழியில் முட்டையிடுவதிலிருந்து குஞ்சு பொறித்தல் வரை எல்லாமே ஊசி தான்! அதே முறையை இப்போது நாட்டுக் கோழிகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நாங்கள் எங்கள் கோழிகளுக்கு எந்தவித ஊசியும் போடுவதில்லை. எங்கள் பண்ணையில் சேவலோடு கூடியே இயற்கையான கோழிகள் முட்டையிடுகின்றன.
“இப்ப விஷயத்துக்கு வர்றேன். நான் தர்ற முட்டையை முறைப்படி அப்படியே வைச்சிங்கன்னா குஞ்சு பொறிச்சிடும் பாத்துக்குங்க! ஆனா, நீங்க சொன்ன அந்த நாட்டுக்கோழி முட்டையிலிருந்து அடிச்சி சொல்றேன், குஞ்சு பொறிக்க வாய்ப்பே இல்லை” என்றார். ஏன்? என்று ஆர்வமாய் கேட்டேன். இயற்கையாய் கிடைக்கும் நாட்டு முட்டைக்குள் ஜீவன் இருக்கிறது என்றார். அந்த ஜீவனால்தான் குஞ்சுவை உருவாக்க முடியும். ஊசிபோட்டு கிடைக்கும் முட்டையில் ஜீவன் இல்லை என்றார்.
ஆம்! நாம் வைத்திருக்கும் பரிசுத்த வேதாகமம், பார்ப்பதற்கு எல்லா புத்தகங்களைப் போல எழுத்து வடிவில் காணப்பட்டாலும், அந்த வார்த்தைக்குள் ஜீவன் இருக்கிறது. தன்னை வாசித்து தியானிக்கிறவர்களை இயேசுவின் சாயலாக மாற்றும் ஆற்றலை தன்னில்தானே கொண்டுள்ளதென்பது நிதர்சனமான உண்மை. அதனால தம்பி! ஒவ்வொரு நாளும் வேதத்தை புரட்டிப் பார்க்க மறக்காதீங்க! கொஞ்ச நாளில் உங்க வாழ்க்கையையே வேதம் புரட்டிப் போட்டுவிடும். என்ன நான் சொல்றது!