வேத வசனத்தை தியானிக்கும்போது வல்லமையை தேவன் நமக்குத் தருகிறார். ஆவியின் அனலைத் தருகிறார். அதை நாம் காத்துக் கொள்ள வேண்டும். “வல்லமை தேவனுடையது” என்று சங்.62:11ல் பார்க்கிறோம். பரத்திலிருந்து கொடுக்கப்படும் இந்த வல்லமையை நாம் வேதத்தை வாசித்து அதை தியானிக்கும்போது பெற்றுக்கொள்கிறோம். பேதையை ஞானியாக்குவது இந்த வல்லமையே. (சங்.119:130). பெரிய வரம் பெற்ற ஊழியரும் வேத தியானம் இல்லாதபோது தவறுகிறார்கள். வேதத்தைத் தியானிக்கும்போது நம்முடைய உள்ளான மனிதன் வல்லமையாக பலப்படுகிறான்.
லூக்.8:11ல் இயேசு கூறிய உவமையில் விதை தேவனு டைய வசனத்தைக் குறிக்கிறது. விதை இல்லாமல் கனி உண்டாகாது. தேவனுடைய வசனத்தை வாசித்து அதை தியானிக்கும்போது, ஆவிக்குரிய கனிகள் நம்மிடத்தில் வெளிப்படுகிறது. தேவனுடைய வார்த்தை அக்கினி; அது உருக்குகிறது. தேவனுடைய வார்த்தையே சம்மட்டி; அது நொறுக்குகிறது. நாம் அவருக்குப் பிரியமான பாத்திரமாக வனையப்பட உருக்கப்பட வேண்டும்; நொறுக்கப்பட வேண்டும். நாம் பெலப்பட வேத வசனமாகிய ஞானப்பாலை அருந்த வேண்டும்.
வேத வசனத்தை தியானிப்பதால் உண்டாகும் ஏழு நன்மைகளை நாம் இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக – வேத வசனங்கள் நமக்கு உணர்வைத் தருகிறது
யூதர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்து கொன்றவர்கள். வணங்காக் கழுத்துள்ளவர்கள். ஆனால் இவர்கள் பெந்தேகொஸ்தே நாளில் பேதுரு கூறிய வேத வாக்கியங்களால் இருதயத்தில் குத்தப்பட்டார்கள், உணர்வடைந்தார்கள். தங்கள் பாவங்களிலிருந்து மனந்திரும்பியபடியாய் உணர்வடைந்தார்கள். வேத வசனங்கள் நமக்கு மனந்திரும்புவதற்கேதுவான உணர்வைத் தருகிறது (அப்.2:37). உணர்வில்லாத போது நம்முடைய இருதயம் இருளடைகிறது. வேத வசனங்களை தியானிக்கும்போது நமது அகத்தின் இருள் நீங்குகிறது.
இரண்டாவதாக – வேத வசனங்கள் நம்மைப் புதுப்பிக்கிறது
தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப் பட்டிருக்கிறீர்களே (1பேதுரு 1:23). வேத வசனங்கள் நம்மைப் புதிய மனுஷனாய் மாற்றுகிறது. தேவன் நம்மேல் சித்தங்கொண்டு சத்திய வசனத்தினாலே நம்மை ஜநிப்பித்தார் (யாக். 1:18). அதை தியானிக்கும்போது உண்டாகிறது. 2பேதுரு 1:4. பெரோயா பட்டணத்தார் தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்ததால் நற்குணசாலிகளாயிருந்தார்கள். நம்முடைய சுபாவங்களை மாற்றுவது வேத வசனங்களே. கண்ணாடியாகிய வேத வசனங்களைக் கொண்டு நம்மைச் சரி செய்ய வேண்டும். (அப்.17:11).
மூன்றாவதாக – வேத வசனங்கள் நம்மை விசுவாசிக்கச் செய்கிறது
விசுவாசம் கேள்வியினால் வரும். கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும் (ரோ.10:17). வேத வசனங்களைக் கேட்கும்போது நாம் விசுவாசத்தில் பெருகுகிறோம்.
சிறைச்சாலைக்காரனுக்கும் அவனுடைய வீட்டாருக்கும் பவுலும், சீலாவும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். அவர்கள் கர்த்தருடைய வசனத்தை விசுவாசித்தபடியால் இரட்சிக்கப்பட்டார்கள். அப்.16:32 வேத வசனங்கள் இரட்சிப்புக்கு ஏதுவான விசுவாசத்தை நமக்குக் கொடுக்கிறது.
நான்காவதாக – வேத வசனங்கள் நமக்கு ஜெயம் தருகிறது
மேற்க்கொள்ளக்கூடிய விசுவாசம் வேத வசனங்களை நமக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும்போது கிடைக்கிறது. பொல்லாங்கனை மேற்கொள்ளும்படி வேத வசனமாகிய ஆவியின் பட்டயத்தை கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் (எபே.6:17). வேத வசனத்தின் மூலமாக உண்டாகும் விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயமாகும் (1யோவான் 5:4). நாம் சோதனைகள், பாடுகள் நிறைந்த இவ்வுலகத்தை ஜெயிக்க வேத வசனங்களை வாசித்து அதை தியானிப்பது மிகவும் அவசியமாகும். கர்த்தருடைய வசனத்தின்படி நடக்கும்போது சகல பொல்லாத வழிகளுக்கும் நம்மை விலக்கிக் காத்துக்கொள்கிறோம் (சங்.119:101). சத்துரு நம்மை மேற்கொள்ள முடியாது.
ஐந்தாவதாக – வேத வசனங்கள் நம்மைப் பரிசுத்தமாக்குகிறது
வேத வசனங்கள் நம்மைக் கழுவி சுத்திகரிக்கிறது. நம்மைப் பாவம் செய்யாதபடி தடுக்கிறது. பாவ இச்சைகள் நம்மை மேற்கொள்ளாமல் காக்கிறது (சங்.119:11). பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குள் நமக்குச் சுதந்திரம் வேண்டுமானால் தேவனுடைய வசனத்துக்கு நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். சகலவிதமான துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு திருவசனமாகிய கலங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருக்க வேண்டும் (1பேதுரு 2:1-3). வாலிபர்கள் தங்களுடைய வழிகளை தேவனுடைய வசனத்தின்படி காத்துக்கொள்ளும்போது சுத்தமாக்கப்படுகிறார்கள் (சங்.119:9). பாவம் நிறைந்த உலகிலே நம்மைப் பரிசுத்தமாகக் காத்துக்கொள்வது இந்த வேத வசனங்களே.
ஆறாவதாக – வேத வசனங்கள் நம்மை சந்தோஷிப்பிக்கிறது
வேத வசனங்கள் இருதயத்தை மகிழ்ச்சியாக்குகிறது எரே.15:16. அவைகள் சந்தோஷத்தை நம்மில் நிலைத்திருக்கச் செய்கிறது, சந்தோஷத்தை நிறைவாக்குகிறது (யோவான் 15:11). கர்த்தருடைய வேதம் நம்முடைய மனமகிழ்ச்சியாயிராவிட்டால் நாம் துக்கத்திலே அழிந்து போயிருப்போம் (சங்.119:92). பாடுகள், துக்கங்கள், உபத்திரவங்கள் நிறைந்த இந்த உலகிலே நம்மை தேற்றுவது இந்த வேத வசனங்களே.
ஏழாவதாக – வேத வசனங்கள் நமக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறது
தேவ குமாரனை நாம் விசுவாசித்து நித்திய ஜீவனை அடையும் படியாக வேத வாக்கியங்கள் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. (யோவான் 20:7; 1யோவான் 5:13). பூமிக்குரிய கூடாரத்தில் பாரஞ்சுமந்து தவிக்கும் நமக்கு கைவேலையல்லாத நித்திய வீடு உண்டு என்ற நம்பிக்கை வேத வசனங்கள் மூலமாகவே கிடைக்கிறது. இந்த நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள சங்கீதக்காரன் தாவீது சொன்னதுபோல கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருக்கிறோமா? நாள் முழுவதும் உங்கள் தியானமாயிருக்கிறதா? (சங்.119:97). அவருடைய வசனத்தைத் தியானிக்கும்படி குறித்த ஜாமங்களுக்கு முன்னே நம் கண்கள் விழித்துக்கொள்கிறதா?
அவருடைய வேதத்திலுள்ள அதிசயங்களைப் பார்க்கும்படி நம்முடைய கண்கள் திறக்கப்படட்டும் (சங்.119:18).