நாம் ஏன் ஓட வேண்டும்?

Written by Pr Thomas Walker

July 21, 2006

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! நாம் தீவிரித்து ஓட வேண்டிய காலத்தில் இருக்கிறோம். இந்த உலகத்தையும் அதன் சுகபோகங்களையும் அனுபவிக்க வேண்டிய காலம் இதுவல்ல. “நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவ பக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு” என்று 1தீமோ.6:11ல் பவுல் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்துகிறார். நாம் எவைகளை விட்டு ஓட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாகஎகிப்தின் பாவ வாழ்வை வெறுத்து ஓட வேண்டும்
எகிப்து என்பது பாவத்திற்கு அடிமையாக வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது. இஸ்ரவேலர் எகிப்திலே அடிமை வாழ்க்கை வாழ்ந்தார்கள். கர்த்தர் அவர்கள் பெருமூச்சைக் கேட்டு, அவர்கள் பிதாக்களோடு பண்ணின உடன்படிக்கையை நினைவு கூர்ந்து, இஸ்ரவேல் புத்திரரை விடுவிக்க மோசே, ஆரோனைத் தெரிந்துகொண்டார். கர்த்தரால் உண்டான வாதைகளுக்குப் பின்பு பார்வோன் இஸ்ரவேலரை விடுவித்தான். ‘ஜனங்கள் ஓடிவிட்டார்கள்’ என்று பார்வோனுக்கு அறிவிக்கப்பட்டபோது அவன் அவர்களை பின்தொடர்ந்து போனான் (யாத்.14:5). பாவப் பிடியிலிருந்து விலகி ஓடும்போது சத்துரு பின்தொடர்வது நிச்சயம். அவன் தன் முழு பலத்தோடு விரட்டி வருவது உண்மை. இஸ்ரவேலர் எகிப்தை விட்டு ஓடிவந்த பின்பு, ‘ஏன் எங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தாய்’ என்று மோசேயை நோக்கி முறுமுறுத்தார்கள், சோர்ந்து போனார்கள். ஆனால், நாம் பாவத்தை வெறுத்து, தேவனையே சார்ந்துகொள்ளும்போது மகிமையான வெற்றியை நமக்குத் தருவார். இஸ்ரவேலரைப் பின்தொடர்ந்து வந்த பார்வோனின் சேனைகள் அனைத்தும் செங்கடலில் அமிழ்ந்து போனது (யாத்.14:27). கர்த்தர் இஸ்ரவேலருக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாக யுத்தம் பண்ணுகிறார் என்பதை எகிப்தியர் உணர்ந்தார்கள் (யாத்.14:25).

இரண்டாவதாகபதான் அராமிலிருந்து தாமதிக்காமல் ஓடவேண்டும்
ஊர் என்னும் கல்தேயர் நாட்டிலிருந்து ஆபிரகாம் புறப்பட்டுப்போகும் வழியில் வசிப்பதற்கு நல்ல வசதியான, செழிப்பான இடம் வந்தது. அதுதான் பதான் அராம். அது சுய திருப்தியுள்ள இடம். கர்த்தருடைய காரியங்களில் ‘போதும்’ என்ற எண்ணம் வருவது தவறு. தேவன் கூறிய இடம் வரும் வரை தொடர்ந்து ஓட வேண்டும். கானான் தேசம் போகப் புறப்பட்டவர்கள் ஆரான் மட்டும் வந்தபோது அங்கே தங்கிவிட்டார்கள் (ஆதி.11:31). அவன் தகப்பனாகிய தேராகு மரித்தபின்பு, ஆபிரகாம் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து கானான் நோக்கி பயணமானான். தேராகு என்பதற்கு தாமதம் என்பது பொருளாகும். நமது ஓட்டத்திலே தாமதம் கூடாது. ஆபிரகாமுடைய பேரனாகிய யாக்கோபு தரிசனம் இழந்து பதான் அராமிலே தன் மாமனார் வீட்டிலே இருபது வருடங்கள் தங்கிவிட்டான்.
பதான் அராமிலிருந்து வெளியே போக தேவன் யாக்கோபின் கூட்டைக் கலைத்தார். கழுகு, கூட்டைக் கலைக்கும்போது முதலாவது கூட்டின் மேல் போட்டிருக்கும் பஞ்சை எடுத்துவிடும். அப்பொழுது அதனடியில் உள்ள முள் குத்தும். அப்பொழுது கழுகுக் குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கும். தேவன் உன்னதமான வாழ்வு வாழ நம்மை பழக்குவிக்கிறார். கர்த்தர் யாக்கோபோடு பேசியபின்பு அவன் பதான் அராமிலிருந்து ஓடினான். (ஆதி.31:3;21)மூன்றாவதாகசோதோமின் பாவமனிதரை விட்டு ஓடவேண்டும் (ஆதி.19:17)
அக்கிரமக்காரர் மத்தியிலே லோத்து குடியிருந்தான். சோதோமின் பாவம் மிகவும் கொடியதாயிருந்தது (ஆதி.18:20). “அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை…” என்று 2பேதுரு 2:7,8ல் பார்க்கிறோம். கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே சோதோமின் அக்கிரமம் (எசே.16:49). அதனால் அக்கினியை வருஷிக்கப்பண்ணி சோதோமை அழிக்க தேவன் சித்தம் கொண்டார் (ஆதி.19:13). பாவம் பெருகின இடத்தில் தேவப்பிள்ளைகள் பரிசுத்தமாய் ஜீவிக்க முடியாது. அந்த இடத்தைவிட்டு ஓட வேண்டும். நமது மனநிலையில் சோதோமாகிய பாவ எண்ணங்களுக்குத் தப்பி ஓட வேண்டும். சோதோமை விட்டு மலைக்கு ஓடிப்போகும்படி தேவதூதர்கள் லோத்துவிடம் கூறுகின்றனர் (ஆதி.19:17). மலையின் வாழ்வு மேலான வாழ்வு; பரிசுத்தமான வாழ்வு; கிரயம் செலுத்தக்கூடிய வாழ்வு. ஆனால் லோத்து பக்கத்திலுள்ள ஒரு ஊரைத் தெரிந்துகொண்டான். இரண்டாம் தரமான வாழ்க்கையைத் தெரிந்துகொண்டான். நாமாகத் தெரிந்துகொள்ளும்போது தேவன் அழைக்கும் உன்னத வாழ்க்கைக்கு நாம் கடந்துசெல்ல முடியாது.

நான்காவதாகவேசித்தனத்தை விட்டு ஓடவேண்டும்
வேசித்தன ஆவி ஒருவனுடைய சுய சரீரத்தை அழிக்கிறது. ஒருவனுடைய வாழ்க்கை சக்கரத்தையே கொளுத்தி விடுகிறது. பாலிய இச்சைகளுக்கு விலகி ஓடவேண்டும். யோசேப்பு பாலிய இச்சைகளுக்கு விலகி ஓடினான் (ஆதி.39:12). அதனால் அபாண்டமாக பழி சுமத்தப்பட்டான். ஆனால் தேவன் அவனோடு இருந்தார். (ஆதி.39:23) அவன் எதைச் செய்தானோ அதை வாய்க்கப் பண்ணினார். யோபு “என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?” என்கிறார் (யோபு 31:1). வேசித்தனத்திற்கு விலகி ஓடுங்கள்… வேசித்தனம் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய் பாவஞ் செய்கிறான்.
உங்கள் சரீரம் நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? என்று பவுல் கூறுகிறார் (1கொரி.6:18,19). வேசித்தனம் செய்கிறவன் பரிசுத்த ஆவியானவருடைய ஆலயமாகிய அவருடைய சரீரத்தைக் கெடுத்துப்போடுகிறான்.
ஐந்தாவதாகவிக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடுங்கள்
எந்த ஒரு பொருளையும் தேவனைவிட நேசிக்கும்போது அது விக்கிரகமாகிறது. பொருளாசை விக்கிரகாராதனைக்கு ஒப்பிடப்பட்டுள்ளது (எபே.5:5). பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. அதை விட்டு ஓடவேண்டும். இயேசுவின் சீஷனாகிய யூதாஸ் பணப்பையை கையிலே வைத்துக்கொண்டு, இயேசுவுக்கு வரும் காணிக்கையை சுமப்பவனாயிருந்தான். ஆனால் அவனிடம் பொருளாசை காணப்பட்டது. (மத்.26:15) அதனால் அவன் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். பண ஆசைக்கு விலகி ஓடவேண்டும் (1தீமோ.6:11). கேயாசி நாகமானுடைய பொருட்களின் மேல் கண்ணோக்கமாயிருந்து அவன் பிறகே ஓடினான் (2இராஜா.5:20,21). எலிசாவுக்கு பின்பு தீர்க்கதரிசியாக அபிஷேகிக்கப்பட வேண்டியவன் பொருளாசையால் குஷ்டரோகியானான் (2இராஜா.5:27). முரட்டாட்டம் பண்ணுதல் விக்கிரகாராதனைக்கு சமமாகும் (1சாமு.15:32). விக்கிரக ஆராதனைக்காரர் தேவனுடைய ராஜ்ஜியத்தை சுதந்தரிப்பதில்லை (1கொரி.6:9). ஆகையால் நாம் விக்கிரக ஆராதனைக்கு விலகி ஓடவேண்டும் (1கொரி.10:14). முதல் மூன்று கற்பனைகள் தேவன் ஒருவரையே நாம் சேவிக்க வேண்டும் என்று நமக்குப் போதிக்கிறது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ விக்கிரகாராதனைக்கு விலகி ஓடினார்கள் (தானி.3:18). தேவன் அவர்கள் பிரதிஷ்டையை கனம் பண்ணினார்.


இதை வாசிக்கும் ஆரமையான தேவப் பிள்ளைகளே “விலகி ஓட வேண்டிய காரியங்களை” விட்டு பூரணமாய் விலகி நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடக்கடவோம்.

கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக.






Author

You May Also Like…

Share This