ஐயோ! ஏன் இந்தப் பாடுகள்?

Written by Reverent Selvakumar

May 23, 2021

சில நேரங்களில் பரிசுத்தவான்கள் படும் வேதனைகளைப் பார்க்கும்போது, இவர்களுக்கு ஏன் இத்தகையப் பாடுகள் என்று ஒருசேர நெஞ்சத்தில் வலியும் வேதனையும் காட்டாற்று வெள்ளம்போல் கரைபுரண்டு வருகிறது. துன்மார்க்கணும், ஊரையடித்து உலையில் போடுகிறவனும் மிடுக்காய், நெஞ்சை நிமிர்த்தி வருகிறார்களே என்ற எண்ணமும் அவ்வப்போது வந்துபோகாமல் இல்லை.
ஆனால், பரிசுத்தவான்கள் படும் எந்த வேதனையும் பாடுகளும் இம்மையிலும் மறுமையிலும் மகிமையைக் கொண்டுவராமல் இருப்பதில்லை, இருந்ததில்லை என்பதை திட்டமாய் வேதம் நமக்குப் போதிக்கிறது.
தானியேல் நேர்மையான அதிகாரியாய் மன்னனுக்கு உண்மையாய், உத்தம மாய் பணியாற்றி வருகிறார். இன்னொரு பக்கம் தேவனுக்கும் உண்மையாய் இருக்கிறார். ஆனால், அவர் மீது பொறாமை கொண்ட கயவர்கள் அவருக்கு எதிராய் சதித்திட்டம் செய்து வெற்றியும் பெற்றுவிடுகின்றனர். ஆம்! ஒருநாள் இரவில் எந்தக் குற்றமும் செய்யாமலே அநியாயமாய் சிங்கக்கெபியில் தள்ளப்படுகின்றார்.


அந்தநாள் இரவில் தானியேலுடைய பகைவர்கள் இதோடு தானியேலின் கதை முடிந்தது என்று சந்தோசப்பட்டு, குடித்து வெறித்து கும்மாளமடித்து வெற்றியைக் கொண்டாடி, இரவை மகிழ்ச்சியின் உச்சியில் கழித்திருக்கலாம்.தானியேலின் குடும்பத்தாரோ இவ்வளவு உண்மையாய் இருந்த தன்னுடைய தாசர் தானியேலை தேவன் மறந்து விட்டாரோ? ஐயோ! இந்த இரவில் சிங்கம் அவரைக் கடித்து குதறியிருக்குமே! வேதனையில் துடியாய் துடித்திருப்பாரே! என்று மனதில் கவலையிருள் சூழ இரவை துக்கத்தில் தூக்கமில்லாமல் கரைத்திருப்பார்கள்.ஆனால், அதுவரை அமைதிக் காத்த பரலோகம் தானியேலை சிங்கக் கெபியில் போட்ட மாத்திரத்தில் தன் ஆட்டத்தைத் தொடங்கியது. தூதனைக் கொண்டு சிங்கங் களின் வாய்கள் கட்டப்பட்டது. இரவில் நிம்மதியாய் தேவனை துதித்துவிட்டு சிங்கங்க ளோடு படுத்துறங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் பொழுது விடிந்தபோது காரியம் தலைகீழாய் மாறியிருந்தது.
மறுநாள் காலையிலே தானியேல் சிங்கக்கெபியில் உயிரோடு இருப்பதைக் கண்ட மன்னர், தானியேலின் தேவனுக்கு ஜனங்கள் எல்லாரும் பயந்து நடுங்க வேண்டும் என்று கட்டளைப் பிறப்பித்ததோடு, தானியேலையும் தன்னுடைய அரண்மனையில் உயர்த்தி வைத்தார் என்பதை நாமறிவோம். அதோடு அவருக்கு எதிராக சதிசெய்த பொல்லாதவர்களை அவர்களுடைய குடும்பத்தோடு சேர்த்து சிங்கக்கெபியில் போடச் செய்தார்.


ஆம்! பரிசுத்தவான்கள் படும் பாடுகளில் பரலோகத் திட்டமும் பொதிந்து காணப் படுகிறது. பரிசுத்தவான்கள் பகைவர்களின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்போது அதைத் தொடர்ந்து தேவனுடைய மகிமையும், பகைவர்களுக்கு நியாயத்தீர்ப்பும் கண்டிப்பாக வெளிப்படும். மேலும், பரலோக யுத்தத்தில் தேவனுடைய பட்சத்தில் நின்ற பரிசுத்தவான்களுக்கு பதவி உயர்வும் (Promotion) கண்டிப்பாக கிடைக்கும். ஆமென்! ஆமென்! ஆமென்!






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This