விசுவாசிகள் ஏன் ஜெபிக்க வேண்டும்?

Written by Pr Thomas Walker

February 4, 2020

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவ பிள்ளைகள் ஜெபிக்காமல் இருப்பது பாவமாகும். தேவனோடு தொடர்புகொண்டு காரியங்களை இலகுவாக முடிக்க ஜெபம் ஒரு ‘தொலைபேசி’ போல் பயன்படுகிறது. ஜெபம் பரலோகத்துக்கும் நமக்கும் நடுவிலுள்ள ஏணி போன்றது. ஜெபத்தின் மூலம் எந்த நேரத்திலும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தேவனோடு பேசலாம். தேவ பிள்ளைகளிடம் உள்ள மாபெரும் ஆயுதங்களில் ஒன்று விசுவாசம்; மற்றொன்று ஜெபம் ஆகும். விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளிகளை இரட்சிக்கிறது; அரண்களை நிர்மூலமாக்குகிறது. ஜெயம் கொடுக்கிறது.


தானியேல் ஒரு ஜெபவீரன். அவன் ஜெபவீரனாக இருந்தபடியால் அரசர்களுக்கும் ஆலோசனைக் கூற வல்லவனாக இருந்தான். தானியேல் தன்மேல் முகாந்தரமில்லாமல் குற்றஞ் சுமத்த பிரதானிகள் வகை தேடினபோதும் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி வந்தான் (தானி.6:10). அதிகமான நேரம் ஜெபம் பண்ணும்போது அது மிகவும் பெலனும் ஆசீர்வாதமுமாக இருக்கும். தேவ பிள்ளைகள் எப்பொழுதும் சோர்ந்துபோகாமல் ஜெபிக்க வேண்டும் (லூக்.18:1). ஜெபம் என்றாலே சோர்வு வரும். ஏனெனில் அதில் தேவனுடைய ஆசீர்வாதம் உண்டு. உடனே பதில் வராத ஜெபமும் உண்டு. ஆனாலும் சோர்ந்து போகாமல் ஜெபிக்க வேண்டும்.


இன்றைய உலகில் மூன்றுவிதமான கிறிஸ்தவர்களைப் பார்க்கிறோம். முதல் வகைக் கிறிஸ்தவர்கள் – சரீரப் பிரகாரமான கிறிஸ்தவர்கள். அவர்கள் மாம்சத்திற்குரியவைகளை சிந்திப்பார்கள்; தேடுவார்கள். இரண்டாவது வகைக் கிறிஸ்தவர்கள் – ஆத்துமக் கிறிஸ்தவர்கள். ஆத்துமாவிலுள்ள பெலனால் வாழ்பவர்கள்; நல்ல ஜீவியம் உள்ளவர்கள்; நற்கிரியைகளில் தேறினவர்கள்; நல்ல ஜெபவாழ்க்கை உள்ளவர்கள். பேருக்காக புகழுக்காக ஜீவிப்பவர்கள். உணர்ச்சி வசப்படுபவர்கள். மூன்றாவது வகைக் கிறிஸ்தவர்கள் – ஆவிக்குரிய கிறிஸ்தவர்கள். இவர்கள் மறைந்திருப்பார்கள். தேவன் என்னைப் பார்த்துக்கொண்டே இருக்கிறார், நான் அவருக்கு முன் எப்படி ஜீவிக்கிறேன் என்று நிதானித்தறிபவர்கள். தனி ஜெப வாழ்க்கை உள்ளவர்கள் தேவனை மட்டுமே பிரியப்படுத்துபவர்கள்.

நாம் எப்படி ஜெபம் பண்ண வேண்டும்?
**முதலாவதாக இடைவிடாமல் ஜெபம் பண்ண வேண்டும் (1தெச.5:17)
**இரண்டாவதாக ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும் (பிலி.4:6)
**மூன்றாவதாக எல்லா மனுஷருக்காகவும் ஜெபம் பண்ண வேண்டும் (1தீமோ.2:1)
**நான்காவதாக எந்த சமயத்திலும் ஆவியிலே ஜெபம் பண்ண வேண்டும் (எபே.6:18)
**ஐந்தாவதாக விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும் (மத்.26:41)

நாம் ஏன் ஜெபம் பண்ண வேண்டும்?
(1) ஜெபித்தால் மட்டுமே நாம் சோதனைக்குத் தப்ப முடியும் (மத்.26:41).
“ஜெபிக்கும் மனிதன் பாவம் செய்வதை நிறுத்துவான்; பாவம் செய்யும் மனிதன் ஜெபிப்பதை நிறுத்துவான்” என்று லியோனார்ட் ரேவன்ஹில் என்ற பக்தன் கூறுகிறார். “பகல் வேளையில் நீ சாத்தானை சந்திக்க விரும்பவில்லை என்றால் அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்பு முழங்காலில் உன் இயேசுவை சந்தித்துப் பேசு” என்பது ஊ.கூ.ஸ்டட் என்ற பக்தனின் கூற்று. உலகம், மாமிசம், பிசாசினால் உண்டாகும் சோதனைக்குத் தப்ப நாம் விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும். விழித்திருந்து ஜெபம் பண்ணவில்லையென்றால் சாத்தான் நம்மிடையே களைகளை விதைத்துவிட்டுப் போவான். நாம் விழித்திருந்து ஜெபித்து சாவுக்கேதுவானவைகளை ஸ்திரப்படுத்துவோமாக!

(2) ஜெபித்தால் மட்டுமே நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் (யாக்.1:17)
நன்மையான எந்த ஈவும் ஜோதிகளின் பிதாவிடம் இருக்கிறது. எல்லாம் சம்பூரணமாக அவரிடம் உள்ளது. நமது தேவைகள் சந்திக்கப்பட, ஆசீர்வாதங்களை அவரிடம் இருந்து சுதந்தரித்துக்கொள்ள நமது ஜெபத்தால் மட்டுமே முடியும். கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான். நாம் எதை அவருடைய சித்தத்தின்படி கேட்டாலும் தேவன் அதை நமக்குத் தருவார். தேவ சமூகத்தில் நமது குறைகளை உணர்ந்து நம்மைத் தாழ்த்தி, அவரைச் சார்ந்து ஜெபிக்க வேண்டும். அப்பொழுது நாம் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

(3) ஜெபித்தால் மட்டுமே நமது சந்தோஷம் நிறைவாகும் (யோவான் 16:23,24)
“அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்” (சங்.4:7) என்று எப்பொழுதும் தேவனை ஆராதித்துக்கொண்டிருந்த தாவீது பாடுகிறான். நாம் ஜெபிக்கும்போது உலகம் எடுக்கவும், கொடுக்கவும் கூடாத சந்தோஷத்தையும் சமாதானத்தையும் அவர் தருகிறார்.

(4) ஜெபித்தால் மட்டுமே ஆபத்துகள், மனிதர்களால் உண்டாகும் சோதனைகள், சத்துருவின் கண்ணிகளுக்கு நாம் தப்ப முடியும்
நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது ஆபத்தில் தேவன் நம்மோடிருந்து நம்மைத் தப்பிவிக்கிறார் (சங்.91:15).

(5) ஜெபித்தால் மட்டுமே நம் கவலைகள் மாற்றப்படும்
அவர் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நமது கவலைகளை அவர்மேல் வைத்துவிட வேண்டும் (1பேதுரு 5:7; சங்.55:22; சங்.34:6) நமது பாரங்களை, கவலைகளை நீக்குகிறார்; நமக்கு விடுதலை தருகிறார். எனவே நாம் நமது விண்ணப்பங்களை தேவனுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

ஏன் நமது ஜெபத்திற்கு பதில் கிடைக்கவில்லை?
1. இச்சைகளை நிறைவேற்றும்படி ஜெபித்தால் அந்த ஜெபம் கேட்கப்படாது. (யாக்.4:3)
2. தாழ்த்தி, தன்னை உணர்ந்து இரக்கத்துக்காக மன்றாடாவிட்டால் அந்த ஜெபம் கேட்கப்படாது. (2நாளா.7:14)
3. அவிசுவாசத்துடன் அறிக்கைசெய்து ஜெபித்தால் அந்த ஜெபம் கேட்கப்படாது.

ஜெபம் வல்லமையுள்ளது. தேவன் ஜீவிக்கிறார் என்பதை வெளிப்படுத்த நாம் ஜெபிக்க வேண்டும். தேவன் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்பதை உணர்ந்து நாம் ஜெபிக்க வேண்டும். திறப்பில் நின்று பரிந்துபேசி ஜெபித்த பக்தர்களைப் போல நாமும் ஜெபிப்போமா!






Author

You May Also Like…

Share This