“ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்றெழுது” (வெளி.2:29)
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு விசுவாசிகளை ஆவியானவர் ஆயத்தப்படுத்தும் காலம் இது. ஆவியானவர் விசுவாசிகளை சுத்திகரித்து வருகையில் எடுத்துக்கொள்வதற்கு வைராக்கிய வாஞ்சையாய் இருக்கிறார். வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆவியானவர் ஏழு சபைகளுக்கு அறிவுரை வழங்குகிறார். அது யோவான் வாழ்ந்த காலத்தில் உள்ள, ஏழு சபைகளாக இருந்தாலும், இந்த காலத்திற்கும் பொருந்தும். ஆகவே ஆவியானவர் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு, அதற்குக் கீழ்ப்படிவது நல்லது. கர்த்தர் சொல்லும் ஆலோசனைகளைக் கேட்டும், கீழ்படியாமல் போவது எத்தனை பரிதாபம்!
ஒரு சமயம் தேவ மனிதர் ஒருவர் ஜெபம் பண்ணிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரு தரிசனம் கண்டார். அந்தத் தரிசனத்தில் ஒவ்வொரு விசுவாசியின் வீட்டிலும் இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார் என்ற செய்தி சொல்லப்பட்டது. சில வீடுகளில், அந்த செய்தியைக் கேட்டும், கேளாதவர்கள் போல, அஜாக்கிரதையாய், பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தனர். ஆனால் சில வீடுகளில் அந்த செய்தியைக் கேட்டவுடன், சுறுசுறுப்படைந்து, ஏதோ பிரயாணத்திற்குப் புறப்படுவது போல, ஆயத்தப்பட்டார்கள்.
ஆம்! இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையும் ஒரு பிரயாணம் தான். அதற்கு ஆயத்தப்பட வேண்டுமல்லவா? வெளியூருக்குப் பிரயாணப்படுவதற்கு எத்தனை ஆயத்தம் செய்கிறோம்! அப்படியானால் இயேசு கிறிஸ்துவின் வருகையில் நாம் பறந்துசெல்ல எத்தனையாய் ஆயத்தப்பட வேண்டும்! கர்த்தருடைய ஆலோசனையைக் கேட்டும், கேளாதவர்கள் போல் இருக்க வேண்டாம். ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக் கடவன். இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார். ஆயத்தப்படுவோம்.
தேவனுடைய வீட்டிலே நியாயத்தீர்ப்பு
தேவன் தம்முடைய பிள்ளைகளை நியாயம் தீர்ப்பாரா? தேவன் தம்முடைய வீட்டை நியாயம் தீர்ப்பாரா? சற்று ஆச்சரியமாயிருக்கிறதல்லவா! கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை அழிந்துபோகும்படிக்கு நியாயம் தீர்ப்பதில்லை. அல்லது கெட்டுப் போகும்படிக்கு ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதில்லை. ஆனால், எல்லா மனிதருக்கும் நியாயத்தீர்ப்பு உண்டு. அந்த நாளில் தேவனுடைய பிள்ளைகளை உலகத்தாரோடு ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு சிட்சிக்கப்படுகிறோம் என வேதம் கூறுகிறது.
“நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்” (1கொரி.11:32)
தேவன் தம்முடைய பிள்ளைகளைச் சிட்சிப்பதுதான் இந்த நியாயத் தீர்ப்பு. இயேசு கிறிஸ்துவின் வருகையிலே பூமியின் சகல ஜனங்களையும் நியாயம் தீர்ப்பார். அதற்கு முன்பாக தமது ஜனங்களை கண்டிக்காமல் விடுவாரா? தேவன் தம்முடைய பிள்ளைகளை சிட்சித்து, பரிசுத்தப்படுத்தி தமது வருகைக்கு ஆயத்தப்படுத்துவார். ஆகவே, நாம் கர்த்தரால் சிட்சிக்கப்படும்போது, சோர்ந்துபோக வேண்டாம். அது நமது நன்மைக்காகவே என எண்ணுங்கள்.
“எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபி.12:11)
ஆகவே இரட்சிக்கப்படும்போது கலங்காதிருங்கள். கர்த்தரின் வருகை சமீபமாயிருப்பதால் தமது பிள்ளைகளை சிட்சித்து ஆயத்தப்படுத்த விரும்புகிறார். சோர்ந்துபோக வேண்டாம். உங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுங்கள். கர்த்தர் உங்களைச் சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி நிலைப்படுத்தி பலப்படுத்துவாராக.
நாம் நியாயந்தீர்க்காதபடிக்கு
“நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்” (1கொரி.11:31)
நாம் நியாயம் தீர்க்கப்படாதபடிக்கு என்ன செய்யவேண்டும்? நாம் நம்மை ஆராய்ந்து பார்க்க வேண்டும். வேத வசனத்தின் வெளிச்சத்திலே, நம்மை ஆராய்ந்து பார்த்து சீர்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
“தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” (சங்.139:23,24)
நமது இருதயத்தை ஆராய்ந்து பார்க்க கர்த்தருக்கு இடம் கொடுக்க வேண்டும். கர்த்தர் மனம்திரும்பச் சொல்லும் காரியங்களில் மனந்திரும்ப வேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் நமது பாவங்களை அறிக்கைசெய்து ஒப்புரவாக வேண்டும். இந்தக் காரியங்கள் நமக்கு தெரியாததல்ல. ஆனால், இந்த அடிப்படைக் காரியங்களை மறுபடியும் நினைவுபடுத்த வேண்டியது அவசியமாயிருக்கிறது.
“…அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்” (1யோவான் 1:7)
ஆகவே கர்த்தருடைய வசனத்தின்படி உங்களை சீர்படுத்திக்கொள்ளுங்கள். கர்த்தருடைய வசனத்தைப் பார்த்து நமது குறைகளை இயேசுவின் பாதத்தில் அறிக்கை செய்து மனம் திரும்பி சுத்திகரிக்கப்படுவோம்.
“ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்” (யாக்.1:21)
கிறிஸ்துவுக்குப் பிரியமாய் வாழ்வது என்பது, அனுதினமும் சிலுவை எடுத்து இயேசுவை பின்பற்றும் வாழ்க்கை. எனவே இயேசுவைப் பின்பற்றுபவன், வருகையில் அவரோடு இருப்பான். இயேசு கிறிஸ்துவின் வருகையிலே உண்மையுள்ளவர்களாய் அவருக்குப் பின் வருவார்கள். இயேசு சீக்கிரமாய் வருகிறார். அவரைப் பின்பற்றும் வீரர்களாய் காணப்படுவோம்.