யார் கர்த்தருக்கு ஊழியம் செய்யலாம்?

Written by Pr Thomas Walker

November 21, 2009

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
இன்றைய கிறிஸ்தவ உலகத்தில் ஊழியங்களும், ஊழியர்களும் பெருகி வருகின்றனர். தேவன் ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்கைக்கு தக்க பலனை அளிக்கப் போகிறார். ஒருவன் கட்டினது நிலைத்தால் கூலியைப் பெறுவான். ஒவ்வொரு ஊழியத்தின் தன்மையையும் தரத்தையும் தேவன் அக்கினியால் சோதித்த பின்னரே அங்கீகரிப்பார். யாக்கோபு தன் நிருபத்தில் இவ்வாறு கூறுகிறார். “என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக” (யாக்.3:1). அப்படியானால் யார் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியும்? ஒரு தேவ ஊழியன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நாம் தியானிக்கலாம். அப்போஸ்தலனாகிய பவுல் ரோமர் 12:11 வசனத்தில் “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” என்று கூறுகிறார். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் சுவிசேஷத்தை அறிவிப்பது நம்மேல் விழுந்த கடமை. தேவன், நாம் அவருக்கு ஊழியம் செய்வதை விரும்புகிறார். அவர் எஜமான். நாம் நம்மை அவருக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுக்க விரும்புகிறார். அவர் சொல்வதை மாத்திரம் செய்ய விரும்புகிறார்.
ரோம.6:22 வசனத்தில் “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்” என்று பவுல் கூறுகிறார். பிசாசுக்கும் பாவத்திற்கும் அடிமைகளாக நரக தண்டனைக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த நம்மை இயேசு தம்முடைய இரத்தத்தால் விடுதலையாக்கினார். விடுதலையைப் பெற்றபின், சுயாதீனமாக நம்முடைய சுய விருப்பம் போல வாழ்ந்தால், மீண்டும் சாத்தான் நம்மை அடிமைப்படுத்துவான். எனவே நாம் தேவனுக்கு அடிமையாக மாறினால் சாத்தானுக்கு நம்மேல் அதிகாரம் இல்லை. நிபந்தனையின்றி அன்பின் அடிமையாக தேவனுக்கு நாமாகவே ஒப்புக்கொடுத்தால் தேவன் நம் வாழ்வில் பரிசுத்தத்தை (பரிசுத்தமாக்குதலை) ஆரம்பிப்பார். தொடர்ந்து அன்பின் அடிமையாக வாழ்ந்தால் முடிவில் கிடைக்கும் பலன் நித்திய ஜீவன். தேவனுக்கு அன்பின் அடிமை எப்படி ஒப்புக்கொடுப்பது என்பதை விளக்குகிறேன். அமெரிக்காவில் அடிமைகளை (நீக்ரோக்களை) விற்று வந்த சந்தையில் ஒரு வயதான நீக்ரோ மனிதனை விற்பதற்கு ஏலம் போட்டனர். ஆனால் வரவர ஏலத்தின் மதிப்பு அதிகமானதும் யாரும் வாங்க முன்வரவில்லை. ஒரு பிரபு முன்வந்து அந்த வயதான நீக்ரோவை அதிக விலை கொடுத்து வாங்கினார். பின்னர் தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு சந்தையைக் கடந்ததும் ஒரு நான்கு ரோடுகள் பிரியும் இடத்தில் அவனை இறக்கிவிட்டு “நீ அடிமை அல்ல, நீ சுயாதீனன், நீ எங்கும் செல்லலாம்” என்று கூறி மெதுவாக குதிரையில் சென்று கொண்டிருந்தார். அந்த வயதான நீக்ரோ ஒரு விசை சிந்தித்துப் பார்த்தான். “நான் கறுப்பு மனிதன் வெள்ளைக்கார நாட்டில் சுயாதீனமாக வாழ யாரும் என்னை அனுமதிக்க மாட்டார்கள். மீண்டும் என்னைப் பிடித்து கொடூரமான யாருக்காவது விற்பார்கள். எனவே நான் என்னை விலைக்கு வாங்கி, சுதந்தரமாக அனுப்பிய பிரபுவிடமே அன்பின் அடிமையாக என்னை ஒப்புக்கொடுப்பேன்” என்று சொல்லி ஓடிப்போய் அந்த பிரபுவிடம் “அன்பின் அடிமையாக காலம் முழுவதும் வாழ தன்னை ஒப்புக்கொடுத்தான்” அந்த பிரபு அவனை தன் சொந்த சகோதரனைப் போல அன்பாக நடத்தினார். வயதான நீக்ரோ மனிதனுக்கும் நல்ல பாதுகாப்பும், அரவணைப்பும் கிடைத்தது.


இதைப் போலவே தேவனுக்கு நம்மை அடிமையாக ஒப்புக்கொடுத்து வாழ்ந்தால், சாத்தான் நம்மை நெருங்க முடியாது. நம் சுய விருப்பம் போல் வாழ்ந்தால், மீண்டும் சாத்தானின் அடிமைத்தனத்தில் சிக்கி தவிக்க நேரிடும். மனித சுபாவத்தின்படி ஒன்று அவன் தேவனை எஜமானாகப் பின்பற்றுவான். அல்லது சாத்தானின் அடிமையாக வாழ்வான். யாருக்கும் அடிமையாகாமல் சுயாதீனமான மனிதனாக வாழ முடியாது.
கர்த்தருக்கு ஊழியம் செய்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தியானிக்கலாம்!

 
முதலாவதாகதேவனை தியாகத்தோடு பின்செல்ல வேண்டும்
யோவா.12:26 வசனத்தில், “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்” தியாகத்துடன் தேவனைப் பின்செல்ல வேண்டும். எலிசா “…ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்” (1இராஜா.19:21) தான் செய்துவந்த தொழிலுக்கும் ஊழியத்துக்கும் சம்பந்தம் இல்லை. பழைய வேலையை விட்டுவிட்டு ஊழியத்துக்கு வந்தான். மேலும் மத்.8:19-22 வசனங்களில், “…வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்”. வேறொரு சீஷன் அவரை நோக்கி, ஆண்டவரே! முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம் பண்ண எனக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்றான். அதற்கு இயேசு, “மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா” என்றார். யோவா.6:67-69 வசனங்களில், “அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்”. பேதுரு, “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து…” என்று சீஷர்கள் இயேசுவை விசுவாசித்தும் அறிந்தும் மனப்பூர்வமாகப் பின்பற்றினார்கள்.

 
இரண்டாவதாகபயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்
சங்.2:11 வசனத்தில், “பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்” தேவனுக்குரிய கனத்தையும், மரியாதையையும், கண்ணியமாக செலுத்தி பின்பற்ற வேண்டும். நிர்விசாரம், அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. 2சாமு.6:7 வசனத்தில், “…கர்த்தருக்கு ஊசாவின் மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்” துணிகரமான பாவங்களுக்கு தண்டனை உண்டு. தோளில் ஆசாரியர்கள் சுமக்க வேண்டியது. துதித்தலுடன் அவர் சந்நிதி முன் வந்து சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்து பாட வேண்டும். பணிந்து, குனிந்து முழங்காலில் நின்று ஆராதனையும் ஜெபமும் செய்ய வேண்டும்.

 
மூன்றாவதாகஉத்தமமான வழியில் நடக்கிறவர்கள் தான் ஊழியம் செய்ய முடியும்
சங்.101:6ஆம் வசனத்தில், “தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும் படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்” உத்தமமான வழியில் நடக்கிறவர்கள்தான் ஊழியம் செய்ய முடியும். லூக்.1:17 வசனத்தில், “பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான்”. உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்காக ஆயத்தப்படுத்த வேண்டும். தேவ ஆவியில் நிறைந்தவர்களாய் தேவனுக்கு முன்பாக நடக்க வேண்டும். தன் சொந்த விருப்பப்படி வாழ்பவன் அவருக்கு ஊழியம் செய்ய முடியாது. 1சாமு.18:1 வசனத்தில், “…யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது” இதுபோல தேவனும் + தேவ ஊழியக்காரனும் இசைந்து உத்தமமாய் அவரைப் பின்பற்ற வேண்டும்.
அலெக்சாண்டர் டப் (Alexander Duff) என்ற (Scotland) ஸ்காட்லாண்டு மிஷனெரி இந்தியா மிஷனெரியாக 90 வயது வரை ஊழியம் செய்தார். “தேவன் எனக்கு உத்தரவு தராமல் நானே திரும்பி என் தாய்நாடு போவதாக இல்லை” என்றார். எஜமானனை உத்தமமாய் பின்பற்றும் வேலைக்காரனாய் காணப்பட்டார்.

 
நான்காவதாககர்த்தருக்கு ஊழியம் செய்பவர்களுக்கு பொருளாசை கூடாது
எபே.5:5; கொலோ.3:5 வசனங்களில் பார்த்தால் “விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை…” என்றும், “ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள்” என்றும் பவுல் கூறுகிறார். நம் நேரத்தையெல்லாம் பொருள் சேர்ப்பதில் செலவழித்தால் அது விக்கிரக ஆராதனையாக  மாறும். உன் உத்தியோகத்தோடு கட்டப்படாதே.

 
ஐந்தாவதாகஅன்பினாலே ஊழியம் செய்ய வேண்டும்
கலா.5:13ல் “சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்” Our driving force should be love. எதைச் செய்தாலும் கர்த்தருக்காக மனப்பூர்வமாய், தேவ அன்பினால் ஏவப்பட்டு செய்ய வேண்டும்.

 ஆறாவதாகபுது மனுஷனாக மாற்றப்பட்டவன் தான் ஊழியம் செய்ய வேண்டும்
ரோம.7:6 வசனத்தில், “…புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, …. நியாயப் பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்” பழைய மனுஷன் தேவ ஆவியினால் நடத்தப்பட முடியாது. பழைய மாம்சமானவனிடம் தேவ ஆவியானவர் ஊற்றப்பட மாட்டார். புது எண்ணெயால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். சங்.92:10 தேவ ஊழியம் நித்தமும் தேவ சமுகத்தில் காத்திருந்து புது எண்ணெயால் புதிய அபிஷேகத்தால் நிரப்பப்பட வேண்டும்.

 
ஏழாவதாகவெகு மனத்தாழ்மையுடன் ஊழியம் செய்ய வேண்டும்
அப்.20:19 வசனத்தில், “வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்”. பவுல் மிகுந்த மனத்தாழ்மையோடும், கண்ணீரோடும் ஊழியம் செய்ததாக குறிப்பிடுகிறார். மனத்தாழ்மையை அணிந்துகொள்ள வேண்டும். நம்மை நாமே வெறுத்து நம் சிலுவையை சுமந்து அனுதினமும் ஊழியம் செய்ய வேண்டும். பவுல் கமாலியேலிடம் கல்வி கற்ற சிறந்த அறிவாளி. பணம் படைத்தவர், ரோம் குடியுரிமை பெற்றவர். ஆனாலும் தேவன் அவரை அழைத்து, புறஜாதிகள் மத்தியில் ஊழியத்துக்கு அனுப்பியபோது கூடார வேலை செய்துகொண்டே ஊழியம் செய்தார். ஜாதி, இனம், குடும்ப பெருமை, கல்வி, பட்டம் எல்லாம் இயேசுவின் சிலுவைக்கு முன் ஒன்றுமில்லை. வில்லியம் கேரியைத் தேவன் இந்தியாவில் பல மொழிகளில் வேதாகமத்தை மொழிபெயர்க்க பயன்படுத்தினார். அவர் உயர்ந்த நிலையில் பேராசிரியராக, செராம்பூர் கல்லூரியில் செராம்பூர் கல்லூரியில் வேலைபார்த்து ஊழியம் செய்தபோது ஒருவர் பொறாமையினால், அவரைப் பார்த்து நீ ஒரு சாதாரண ளாடிந அயமநச (புது செருப்பு செய்பவர்) தானே என்று இழிவாக கூறியபோது அவர் புன்முறுவலுடன் “ஐ யஅ nடிவ ய ளாடிந அயமநச, ஐ யஅ தரளவ ய உடிbடெநச”. நான் சாதாரண பழைய செருப்பை தைப்பவன் தான். தேவன் என்னை இவ்வளவாய் உயர்த்த என்னிடம் தகுதி ஒன்றுமில்லை என்றார். தாழ்மையே அழியாத அலங்காரம்.

இதை வாசிக்கும் அன்பு நேயரே! உலகமெங்கும் போய் ஊழியம் செய்யுங்கள். சுவிசேஷத்தை பிரசங்கியுங்கள் என்று கட்டளை கொடுத்தவர் ஆண்டவர். நாம் எப்படி கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளையும் வேதத்தில் கூறியுள்ளார். தேவ பயத்துடனும், பரிசுத்தத்துடனும் ஊழியம் செய்வோம். இயேசுவைப் போல சாந்தமும், மனத்தாழ்மையுமுள்ளவர்களாய் தேவன் நமக்குக் கொடுத்தச் சிலுவையை சுமப்போம். தியாகத்துடன், சோதனைகளை சகித்து ஊழியம் செய்து வாடாத கிரீடத்தை பெறுவோம்! மாரநாதா!






Author

You May Also Like…

Share This