கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
வெளிப்படுத்தின விசேஷத்தின் முன்னுரையாக, இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள். காலம் சமீபமாயிருக்கிறது என்றார் யோவான். இந்த வாரம் ஒரு முறையாவது வெளிப்படுத்தின விசேஷத்தை வாசித்துப்பாருங்கள். சுவிசேஷத்தின் நிமித்தம் நாடு கடத்தப்பட்டு பத்மு என்ற தீவில் யோவான் தனியேவிடப்பட்டார்.
அப்பொழுது தேவன் இனிச் சம்பவிக்கப் போகிறவைகளை தம்முடையதூதனை அனுப்பித்தம் முடைய ஊழியக்காரனுக்கு வெளிப்படுத்தினார். வெளி .7:9,13 ஐ வாசிக்கும் போது “இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்த போது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன்…. அப்பொழுது, மூப்பர்களில் ஒரு வன்என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்” என்று எழுதப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.
மேலும், “ஆட்டுக் குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம்தரித்துக் கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது…” (வெளி.19:7,8) என்று எழுதப்பட்டுள்ளது. தேவனுடைய பிள்ளைகள் வெண் வஸ்திரம் தரித்தவர்களாகக் காணப்பட வேண்டும். தங்கள் வஸ்திரத்தைக் கவனமாய்ப் பார்த்துக் கொள்ள வேண்டும். கறைபடாதபடிப்பார். வெள்ளையில் சிறு அழுக்குப்பட்டாலும் தெரியும். நாம் தேவ நீதி, இரட்சிப்பு, நீதியின் வஸ்திரத்தை தரித்துக் கொள்ள வேண்டும். “நீதியைத் தரித்துக் கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது” என்று யோபு கூறுகிறார் (யோபு 29:14). “பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக் கொள்;” என்று கர்த்தர் கூறுகிறார் (ஏசாயா 52:1).
1. இவர்கள் யார்? முதலாவதாக: அழைக்கப்பட்டவர்கள்
வெளி.17:14 ல் “அவரோடு கூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர் களுமாயிருக்கிறார்கள்…” என்றும் எபி.11:8ல் “விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும் படி அழைக்கப்பட்ட போது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப் போனான்” என்றும் ரோம.8:29,30ல் “…தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன் குறித்திருக்கிறார்” என்றும் கூறப்பட்டுள்ளது. “…ஆதிகால முதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின் படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்” (2தீமோ.1:9).
2. தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்:
அழைக்கப்பட்டவர்கள் அநேகர் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் சிலர். இதில் எண்ணிக்கை குறைவதை நாம் காணலாம். அப்.9:15ல் “அதற்குக் கர்த்தர்: நீபோ; அவன் புற ஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்து கொண்ட பாத்திரமாயிருக்கிறான்” என்று பவுலைக் குறித்து அனனியாவிடம் கூறினார்.
3. உண்மையுள்ளவர்கள்:
லூக்.19:17ல், “எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்த மஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்குஅ திகாரியாயிரு என்றான்.”
உண்மை சொல்வது என்பது,
(அ) பொய் சொல்லாமல் இருத்தல்
(ஆ) தேவனிடத்தில் உண்மையாயிருத்தல் (Loyal to God)
தேவனைத் தவிர எதையும் நேசிக்காத தன்மை. கற்புள்ள கன்னிகையாக வாழ வேண்டும். “சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” மேலும் இயேசு சீஷர்களை நோக்கி, “பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்து கொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார்” (யோவான் 6:68,70). தேவனுக்குத் துரோகம் செய்யக்கூடாது.
4. ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப்பட்டவர்கள்:
“உலகத் தோற்ற முதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவ புஸ்தகத்தில் பேரெழுதப் பட்டிராத பூமியின் குடிகள்யாவரும் அதை வணங்குவார்கள்” (வெளி.13:8). இலண்டன் (London) பட்டணத்தில் உள்ள பெரிய நூலகத்தில் உள்ள புத்தகங்கள் சிறிதாக்கப்பட்டு, ஒரு computer இல் வைக்கப்படுவது போல் மாற்றப்பட்டுள்ளது. இது மனிதனின் கண்டுபிடிப்பு. ஆனால் தேவன் நம் நினைவுகளைக் கூடபதிவு (Record) பண்ணுகிறவர்.
5. கறைபடாத வஸ்திரம் உள்ளவர்கள்:
“ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சில பேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண் வஸ்திரந்தரித்து என்னோடே கூட நடப்பார்கள்” (வெளி.3:4). “மாம்சத்தால் கறைப் பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்” (யூதா 23). “விருந்தாளிகளைப் பார்க்கும் படி ராஜா உள்ளே பிரவேசித்த போது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டார்” (மத்.22:11) தேவன் கொடுத்த கலியாண வஸ்திரத்தைத் தரித்திருக்க வேண்டும். வஸ்திரம் கறைபடாத படிப்பாது காக்க வேண்டும்.
6. வஸ்திரம் விலகாதபடிக் காத்துக் கொள்பவர்கள்:
“இதோ, திருடனைப் போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாத படிக்கு விழித்துக் கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக் கொள்ளுகிறவன் பாக்கியவான்” (வெளி.16:15). ராஜ குடும்பத்தில் உள்ள பெண்கள் வஸ்திரமே விலகாதபடிக்கு weight போட்டிருப்பார்கள். நமது ஜீவியத்தை விழிப்புடன் பாதுகாக்க வேண்டும், ஜெபிக்க வேண்டும்.
(அ) தூங்காதே
(ஆ) ஜாக்கிரதையாயிரு (Be alert)
நோவா திராட்சை ரசத்தைக் குடித்து வெறி கொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப்படுத்திருந்தான்…. சேமும், யாப்பேத்தும் தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள் (ஆதி.9:23). நிர்வாணம் தெரியாதபடி வஸ்திரம் விலகாத படி பரிசுத்த ஜீவியம் செய்ய வேண்டும்.
7. மறுதலியாமலிருப்பவர்கள்:
“உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக் கொண்ட படியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒரு வனும் பூட்டமாட்டான்” என்கிறார் (வெளி.3:8). பேதுரு இயேசுவை மறுதலித்து, சபித்து, சத்தியம் பண்ணினான். இன்று கூட, சபையில் அநேகர் தங்களை வேற்று மனிதர்களாகக் காட்டுவார்கள். சபையில் ஒரு பெயர், பள்ளிக்கூடம், அலுவலகத்தில் கிறிஸ்தவப் பெயரை மாற்றி வேலைக்காக, சலுகைக்காக இரட்டை வேடம் போட்டு, தேவனை மறுதலிப்பார்கள்.
8. வசனத்தின் படி வாழ்பவர்கள்:
“…பூமியின் மேல்தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்” (எபி.11:13,14).
அன்பு நேயரே! அழைக்கப்பட்டவர்கள், தெரிந்து கொள்ளப்பட்டவர்கள், உண்மையுள்ளவர்கள், ஜீவ புத்தகத்தில் பெயர் எழுதப்பட்டவர்கள், கறைபடாமல் வஸ்திரங்களைக் காத்துக் கொண்டவர்கள், வஸ்திரம் விலகாதபடிப் பரிசுத்த ஜீவியம் செய்தவர்கள், மறுதலியாமல் இருந்தவர்கள், வசனத்தைக் கைக்கொள்பவர்கள் மட்டுமே சிங்காசனத்திற்கு முன்பாகவும், ஆட்டுக் குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்க முடியும். வெள்ளை அங்கிதரித்து, கையில் குருத்தோலை பிடித்துநிற்கும் கூட்டத்தில் நாமும் நிற்க தேவன்அருள் புரிவாராக! – ஆமென்.




