கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
வேதாகமம் நாம் தேவனை எவ்வாறு ஆராதிக்கவேண்டும் என்று கூறுகிறது. தேவன் ஆவியாயிருக்கிறார். அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும். நமது ஆவியில் பரிசுத்த ஆவியானவர் கிரியை நடப்பிக்கும் போது மெய்யாய் நாம் தேவனை ஆராதனை செய்யமுடியும். “ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களே” தேவனை மெய்யாக ஆராதிக்க முடியும். ஆராதனைக்கு முன்பு பலியிடுதல், சுத்திகரித்தல், அபிஷேகம் செய்தல், உகந்த ஆடைகளைத் தரித்தல் இவற்றைக் கவனிக்க வேண்டும் (யாத். 17-38). மேலும் வெளி.1:5,6 வசனங்களில், நாம் தேவனுக்கு முன்பாக ஆசாரியர்களாக ஆக்கப்படுவதற்கு முன்பு நாம் நமது பாவங்களற அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து தேவனை ஆராதிப்பதற்கு முன்பாக அநேக ஆயத்தங்களைச் செய்யவேண்டியிருந்தது. தேவன் விரும்பும் வழிமுறைகளைப் புறக்கணிப்பது அழிவையே கொண்டுவரும். நாதாபூம், அபியூவும் பிரதான ஆசாரியனின் குமாரர்கள். அவர்கள் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப் போனார்கள் என்று பார்க்கிறோம்.
தேவனுடைய ஆசாரியர்கள் என்பவர் யார்? என்பதைக் கீழே ஆராய்ந்து பார்ப்போம். யாத்.19:4-6 வசனங்களில், “நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று “நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள்” என்றார்.”
1) ஆசாரியர்கள் பலியிடுபவர்கள்!
யாத்.24:5ஆம் வசனத்தில், இஸ்ரவேல் புத்திரரில் வாலிபரை அனுப்பினான். அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதான பலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். ஸ்தோத்திரபலிகள், சமாதானபலிகள், தகனபலிகள் போன்ற சுகந்த வாசனையான பலிகளை தேவனுடைய சமூகத்தில் ஆசாரியர்கள் செலுத்த வேண்டும். தேவனுக்கு ஸ்தோத்திரபலிகளை செலுத்தும்போது தேவ பிரசன்னத்தை உணரமுடியும்.
2) ஆசாரியர்கள் பரிசுத்தமுள்ளவர்கள்:
யாத்.19:22ஆம் வசனத்தில், “கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.” இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டவர்களாக, சுத்த மனசாட்சியுடன் தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்யவேண்டும். பரிசுத்த வஸ்திரத்தைத் தரித்திருக்க வேண்டும்.
3) ஆசாரியர்கள் கர்த்தருடைய நாமத்தில் ஆசீர்வதிக்கிறவர்கள்:
உபா.21:5ஆம் வசனத்தில், “உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டார்” ஆசாரியர்கள் ஆராதிக்கிறவர்கள் மட்டுமல்லாமல் கர்த்தருடைய நாமத்தில் ஆசீர்வதிக்கிறவர்களாக இருக்க வேண்டும். மேலும் உபா.28:15; எசே.44:15ல் இஸ்ரவேலரை தேவன் அவர்களுக்கு விதிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும், கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு அவர் சத்தத்திற்குச் செவிகொடாதே போவாயாகில் சாபங்கள் வரும் என்று எச்சரித்தார். கற்பனைகளின்படி நடந்து ஆசீர்வதிக்கப்பட வழிகாட்டினார்.
4) ஆசாரியர்கள் காவலைக் காக்கிறவர்கள்!
எசே.44:15,16ல் என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனை செய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும், இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பார்கள். இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தை கிட்டிவந்து என் காவலைக் காப்பார்கள். ஆசாரியர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறவர்கள், இதுவே இவர்களின் பிரதான வேலை. சபைக்குள் சத்துரு உட்புகாதபடி ஆசாரியர்கள் காவல் செய்ய வேண்டும். ஆராதிக்க வேண்டும். நிணத்தையும், இரத்தத்தையும் கொடுக்க வேண்டும். விசேஷித்தவைகளைத் தேவனுக்குக் காணிக்கையாக கொடுக்க வேண்டும். மேலும் ஆதி.14:18ஆம் வசனத்தில் பார்க்கும்போது, “…உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டு வந்தான்”
5) தேவ ஆலோசனையைக் கொடுக்க வேண்டும்:
யாத்.3:1ல் மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான்…. எத்திரோவின் மகளை விவாகம் பண்ணினான். நியாயம் விசாரிக்கும்போது மூப்பர்களை நியமிக்கும்படி மோசேக்கு ஆலோசனை கொடுத்தான்.
6) தேவ சமூகத்தில் எப்பொழுதும் நிற்க வேண்டும்:
யாத்.19:28ல் கர்த்தரின் சமூகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். தேவ சமூகத்தில் எப்போதும் நிற்பவர்கள் பரிசுத்தமுள்ளவர்களாக தங்களைப் பரிசுத்தப்படுத்திக் கொண்டே இருப்பவர்களாயிருக்கவேண்டும். ஆசாரியர்கள் தங்களையும் சுத்திகரித்துக் கொள்வதோடு, மற்றவர்களையும் சுத்திகரிப்பார்கள். ஆசாரியர்கள் உலகத்தால் தங்களைக் கறைபடாமல் காப்பார்கள். உலகம் என்று கூறும்போது கண்களின் இச்சை, மாம்சத்தின் இச்சை, ஜீவனத்தின் பெருமை. இவைகளால் தன்னைத் தீட்டுப்படுத்தாமல் காத்துக்கொள்பவர்கள் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டவர்கள்.
7) தேவனுக்குப் பணிவிடை செய்யும்படி பிரித்தெடுக்கப்பட்டவர்கள்:
எண்.16:5, “…கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்”
ராஜரீக ஆசாரியர்கள் அவருடைய புண்ணியங்களை அறிவிப்பார்கள். தெரிந்தெடுக்கப்பட்ட சந்ததி, ஆசாரியக்கூட்டங்களை தேவன் தெரிந்தெடுத்து பயன்படுத்துகிறார். பழைய இரட்சிப்பின் அனுபவம் அல்ல. அனுதினமும் கழுவப்பட்ட சுத்த இருதயத்தோடு பரிசுத்தமானவர்களாக, தினமும் இரட்சிப்பின் அனுபவத்தோடு இருக்க வேண்டும்.
மேலும் லேவி.27:28ஆம் வசனத்தில், “…நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும்” அபிஷேகிக்கப்பட்டவர்கள் தேவனுடைய ஆலோசனைகளை மக்களுக்குக் கொடுப்பவர்கள்.
கொலோ.1:13ஆம் வசனத்தில், இருளின் அதிகாரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் (எக்ளீசியா) உலகத்திலிருந்து தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்டவர்களே ஆசாரியர்கள்.
அன்பு நண்பரே! தேவனுடைய ஆசாரியர்கள் எப்படிப்பட்டவர்களாக வாழ வேண்டும் என்று பார்த்தோம். எபி.12:14ஆம் வசனத்தின்படி, யாவரோடும் சமாதானமாயிருக்க வேண்டும், கபடற்றவர்களாக இருக்க வேண்டும். தேவ சமாதானத்தோடு வாழ வேண்டும். சமாதானமில்லாமல் பரிசுத்தம் இல்லை. தேவனுடன் நெருங்கி நடப்பவர்களாகக் காணப்பட வேண்டும். 1பேதுரு 2:5ஆம் வசனத்தின்படி ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துபவர்களாகக் காணப்பட வேண்டும். உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திர பலியை எப்போதும் தேவனுக்குச் செலுத்தி, பரிசுத்தமாகத் தங்களை தேவனுக்கு முன்பாக காத்துக்கொள்பவர்களே கர்த்தருடைய ஆசாரியர்கள். அல்லேலூயா!




