பெல்ஷாத்சார்’ நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய்

Written by Pr Thomas Walker

December 21, 2008

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!


தேவனுடைய கையில் சுமுத்திரையான தராசு உள்ளது. தேவன் ஒவ்வொருவரையும் அதில் நிறுத்துப் பார்க்கிறார். யோபு 31:6 வசனத்தில் யோபு “சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக” என்கிறார். தேவன் நம் வாழ்க்கையில் உள்ள உண்மையையும், உத்தமத்தையும் அறிய விரும்புகிறார். மனிதன் முகத்தைப் பார்க்கிறான். ஆனால் தேவன் இருதயத்தின் ஆழத்தைப் பார்க்கிறார். ‘தேவன் ஆவிகளை நிறுத்துப் பார்க்கிறார்’. நாம் என்ன ஆவியுடன் செயல்படுகிறோம். தேவ ஆவியால் நடத்தப்படுகிறோமா? பிசாசின் ஆவியால் தூண்டப்பட்டு செயல்படுகிறோமா என்று பார்க்கிறார். தானி.5:27 வசனத்தில் “தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்” என்று தேவனால் அனுப்பப்பட்ட கையுறுப்பு தோன்றி எழுதியது. அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலை செய்யப்பட்டான். அவனுடைய இராஜ்யத்தை தரியு ராஜா கட்டிக்கொண்டான்.
தானி.5:20 வசனத்தில், “அவருடைய (நேபுகாத் நேச்சார்) இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்” அவரது குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால் இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல் பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்.
தேவன் பெல்ஷாத்சாரிடம் நிறுத்துப்பார்த்து கண்ட குறைகள் மூன்று.

 முதலாவதாகபெருமைஆண்டவருக்கு விரோதமாக தன்னை உயர்த்தினான்
பெருமையுள்ளவர்கள் தேவனுக்குப் பிரியமானவர்கள் அல்ல, தூதன் லூசிபர் மேன்மையான நிலைமையில் சிருஷ்டிக்கப்பட்டு இருந்தாலும் பெருமையாலே விழுந்தான். யூதா 6ஆம் வசனத்தில், “…ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்து வைத்திருக்கிறார்”. ஏசா.14:14ல் “…உன்னதமானவருக்கு ஒப்பாவேன்” என்று சொன்னாயே, தள்ளுண்டு போனான். தேவன் நிறுத்துப்பார்த்துதான் தீர்ப்பளிக்கிறார். லூசிபர் தள்ளப்பட்டது பெருமையாலேதான். மேலும், எசே.16:46,47,49 வசனத்தில் சோதோமின் பாவம் என்ன? “இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்” என்கிறார். அதன் பெருமையினால் சோதோம் அக்கினிக்கு இரையானது. யாத்.5:2 வசனத்தில், “அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான்”. பார்வோன் தேவனுக்கு விரோதமாகப் பெருமையாகப் பேசினான். யாத்.14:30 “கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.”


பிரியமானவர்களே! தன்னை தேவனுக்கு முன்பாக தாழ்த்துவது வேறு. பயத்தினால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மை வேறு. தேவ பிள்ளைகளுக்கு தாழ்வு மனப்பான்மை இருக்கக்கூடாது. தாழ்மை தான் மிகவும் தேவை. தேவனுடைய சமூகத்தில் நம்மை ஒன்றுமில்லையென்று வெறுமையாக்க வேண்டும். தேவனுக்கு முன்பாக தன்னை யார் என்று அறிந்து உணரவேண்டும்.
2நாளா.26:16 வசனத்தில் உசியா பலப்பட்டபோது தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின் மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசித்தான். எனவே அவனது மேட்டிமையான குணத்திற்கு தேவனால் தண்டனையைப் பெற்றான். 2நாளா.26:20,21ல் “கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான். ராஜாவாகிய உசியா தன் மரண நாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து…” மரித்தான்.
எரே.49:16, “கன்மலை வெடிப்புகளில் வாசம்பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிறவனே உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கிற்று” நீதி.16:18ஆம் வசனத்தில் அழிவுக்கு முன்னானது அகந்தை. ஆகவே தேவபிள்ளைகளே! நீங்கள் மிகவும் கவனமாக கிறிஸ்தவ வாழ்க்கை வாழவேண்டும்.

 இரண்டாவதாகதேவாலயத்தின் பாத்திரங்களை தவறாக பயன்படுத்தினான்
தானி.5:23 வசனத்தில், “அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள்”. எஸ்றா 1:7-11 வசனங்களில் நேபுகாத் நேச்சார், எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய பணிமூட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். சேஸ்பாத்சார் இவைகளையெல்லாம், சிறையிருப்பினின்று விடுதலை பெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டு போனான். இந்தப் பகுதியில் அந்த பொன், வெள்ளி பாத்திரங்களின் எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவனுடைய பிள்ளைகள் தான் தேவனுடைய கிருபா பாத்திரங்கள். தவறாக பயன்படுத்தக் கூடாது. அப்.9:15 பவுல், “…நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான்” அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்.
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரமாகிய நாம் பரிசுத்தமாக கறைபடாது இருக்க வேண்டும். பரிசுத்தமான காரியங்களால் நிரப்பப்பட வேண்டும். நம் பாத்திரம் அசுத்தமாக, கபடு வஞ்சகத்தால் நிறையக்கூடாது. தேவ அன்பு, கிருபை, தேவ ஆசீர்வாதங்களால் நிரம்பி வழிய வேண்டும். தாவீதின் அனுபவமும் இதுதான். ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் தொடர வேண்டும். பரிசுத்த ஆவியின் வல்லமையால் பாத்திரம் நிரம்பி வழிய வேண்டும்.


2தீமோ.2:21 வசனத்தில் எப்படிப்பட்ட பாத்திரமாக நாம் இருக்க வேண்டும்?
1) பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாக இருக்க வேண்டும்.
2) சுத்திகரிக்கப்பட்ட பாத்திரமாக நம்மை நாமே சுத்திகரிக்க வேண்டும். நீயே உன்னைச் சரிசெய்ய வேண்டும். தேவன் இழுத்துக்கொண்டு வந்து உன்னை சுத்திகரிக்க வரமாட்டார்.
3) கனத்துக்குரிய பாத்திரமாக இருக்க வேண்டும் (ஜீவியத்தை காத்துக்கொள்ள வேண்டும்)
4) எஜமானனுக்கு உபயோகமான பாத்திரம் (தாலந்துகளை தேவ நாம மகிமைக்காக பயன்படுத்த வேண்டும். பயன்படுத்தாவிட்டால் தேவன் கணக்கு கேட்பார். முற்றிலுமாக எஜமானுக்கு கையளிக்கப்பட்ட பாத்திரமாக காணப்பட வேண்டும்.
5) எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட பாத்திரமாக இருக்க வேண்டும்.
பாத்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படக் கூடாது. தேவனுக்கு மகிமை உண்டாக வேண்டும்.

 
மூன்றாவதாகதானி.5:23 ‘தேவனை மகிமைப்படுத்தாமல் விக்கிரகங்களைப் புகழ்ந்தான்
பெல்ஷாத்சாரின் மூன்றாவது குறை என்னவென்றால், தேவனை மகிமைப்படுத்தாமலும், காணாமலும், கேளாமலும், உணராமலும் இருக்கிற வெள்ளி, …. மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தான். தேவனுடைய கையில் தான் நமது சுவாசம் உள்ளது. நமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.
1. தேவ பிள்ளைகள் தனிப்பட்ட வாழ்வில் தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.
2. சபையிலும் சபையாக மகிமைப்படுத்த வேண்டும்.
3. தனிப்பட்ட மனிதனுக்கு மகிமை செலுத்தாமல் தேவனுக்கே மகிமை செலுத்த வேண்டும். பணத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவனை பின்னால் தள்ளும்போது, நாம் தேவனை மகிமைப்படுத்தவில்லை. பொருளாசைக்காரராகிய விக்கிரகாராதனைக்காரர் என்று கூறப்பட்டுள்ளது. அவர்கள் தேவன் வயிறு (பிலிப்.3:19) சிலருக்கு மனிதர்கள் தேவனாக இருக்கிறார்கள்.அவர்களையே புகழுகிறார்கள்.
வெளி.2:1-5 வசனங்களில், எபேசு சபையை தேவன் நிறுத்துப்பார்த்தார். 9 நல்ல காரியங்களைக் கண்டார். கிரியை, பிரயாசம், பொறுமை (வாழ்வில்) பொல்லாதவர்களைச் சகிக்கக் கூடாதது, பரிசோதித்து பொய்யரைக் கண்டது, சகிக்கும் தன்மை உபத்திரவங்களில் பொறுமையாக சகித்தது. இளைப்படையாமல் தேவனுக்காக பிரயாசப்பட்டது போன்ற காரியங்களில் தேவன் பரிசோதித்து நல்லது என்று கண்டார். ஆகிலும் “நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு” என்கிறார்.
ஆகையால் நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாய் என்பதை நினைத்து மனந்திரும்பு.
ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக! “இல்லாவிட்டால்” நான் சீக்கிரமாய் உன்னிடமாய் வந்து நீ மனந்திரும்பாவிட்டால் உன் விளக்குத் தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன் என்கிறார்.

பிரியமான தேவப்பிள்ளைகளே! பின்மாற்றத்துக்கு இடம் கொடாமல் ஆதி அன்பு, ஆதி விசுவாசம், ஆதி கிரியைகளைச் செய்யுங்கள். மனந்திரும்பி, கிறிஸ்துவுக்குள் நீங்கள் படும் பிரயாசங்கள் வீணாகப் போகாது என்று கருதி ஆதி அன்பினால் பெருகுவீர்களாக! நாம் நம்முடைய குறைவுகளை சரிசெய்து தேவனுடைய கரத்தில் பயன்படும் பாத்திரமாக முற்றிலும் அவர் கையில் நம்மை ஒப்புக்கொடுப்போம். பெல்ஷாத்சாரின் வாழ்வில் தேவன் கண்ட குறைகளை நாமும் செய்யாமல், தேவனுக்கே மகிமை கொண்டுவரும் பாத்திரமாக தாழ்மையுடன் கர்த்தரைப் பின்பற்றுவோமாக! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This