ஜெபம் பண்ணி விழித்திருங்கள்

Written by Dr Senthil kumar

August 23, 2021

இயேசு தமது சீடர்களுக்குச் சொன்ன முக்கியமான அறிவுரை: சோதனைக்குட் படாதபடிக்கு விழித்திருந்து ஜெபிக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பலவிதமான பிரச்சனைகளை, சோதனைகளைச் சந்திக்கிறோம். அவைகளை மேற்கொள்ள நமக்கு தேவ கிருபையும், பெலனும் வேண்டும். அப்பொழுதுதான் அதை மேற் கொள்ள முடியும். பேதுருவுக்கு இந்த ஆலோசனையை நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறினார். ஆனால், பேதுரு விழித்திருந்து ஜெபம் பண்ணவில்லை. சோதனை நேரத்தில் மேற்கொள்ளத்தக்க பெலன் இல்லை. நாம் கற்றுக்கொள்வோம். விழித்திருந்து ஜெபித்து சோதனைகளை மேற்கொள்ள கிருபையைப் பெறவேண்டும். கிருபாசனத்தண்டை தைரியமாய்ச் சென்று, எனக்கு சோதனையை ஜெயிக்க கிருபை தாரும் என கேட்க வேண்டும். தேவன் இறங்கி உதவி செய்வார்.


“ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவ தற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்” (லூக்.21:36)
அனுதினமும் ஏற்படக்கூடிய சோதனைக்கே விழித்திருந்து ஜெபிக்க வேண்டு மானால், பூமியெங்கும் கண்ணியைப் போல வரப்போகிற உபத்திரவ காலத்திற்கு தப்பிக்கொள்ள எப்படி விழித்திருந்து ஜெபம் பண்ண வேண்டும்!. இப்பொழுதே ஜெபிப்போம். தேவன் நம்மீது தமது கிருபையை ஊற்றிக் காப்பாற்றும்படி ஜெபிப் போம். குடும்பமாக ஜெபிப்போம். சபையாக ஜெபிப்போம். நாம் தாழ்த்தி ஜெபம் பண்ணும்போது, கர்த்தர் ஜெபத்திற்கு செவி கொடுப்பார். வருகைக்கு ஆயத்தப் படத்தக்க கிருபையை அளிப்பார். சோதனையிலிருந்து தப்பிக்கொள்ளத்தக்க கிருபையை அளிப்பார். தேவ கிருபைதான் உங்களை சோதனையினின்று காக்கும். வரப்போகிற உபத்திரவத்திலிருந்து காக்கும். தேவன் இரக்கமுள்ளவர். அவர் நம்மீது இரங்குவார். நமக்கு உதவிசெய்வார். ஆகவே விழித்திருந்து ஜெபித்து வருகைக்கு ஆயத்தப்படுவோம்.


விழித்திருந்து ஸ்திரப்படுத்து
“நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப் படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காண வில்லை” (வெளி.3:2)
நாம் தேவனுக்கென்று நற்கிரியைகளைச் செய்வதற்கு, கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டுள்ளோம். கர்த்தர் அதை நமக்கு முன்னதாகவே ஆயத்தம் பண்ணியிருக்கிறார். தேவன் நமக்கு நியமித்த கிரியைகளை நிறைவேற்றாமல் இருந்தால், அது தேவனுக்கு துக்கத்தை உண்டுபண்ணும். ஆலயத்திற்குச் செல்கிறோம். கடமைக்காக வாழ்கிறோம். ஆனால், தேவனுக்கென்று நற்கிரியை செய்வதில்லை. எத்தனையோ நற்கிரியைகள் உள்ளது. ஊழியம் செய்யலாம்; உதவி செய்யலாம்; ஜெபத்தில் பிறரைத் தாங்கலாம். இப்படிப்பட்ட நற்கிரியைகள் உள்ளது. இவைகளைச் செய்து தேவனுக்கு பிரியமாய் வாழ்கிறோமா? ஆனால், தேவனிடத் திலிருந்து பல ஆசீர்வாதங்களை வரங்களைப் பெற்றுக்கொண்டோம். அதை தேவனுக்கு மகிமையாக, பிறருக்கு பக்திவிருத்தி உண்டாக, பிறரின் நன்மைக்காக பயன்படுத்துகிறோமா? அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும். அதற்காகவே, தேவன் நம்மை அழைத்திருக்கிறார். எனவே, மனந்திரும்பி, நமது கிரியைகள் தேவனுக்கு முன்பாக நிறைவுள்ளவைகளாயிருக்க, ஜெபித்து தேவ கிருபையின்படி, பிரயாசப்படுவோம்.


“இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவ னவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது” (வெளி.22:12)
இயேசு கிறிஸ்து நமது கிரியைகளுக்கு பலனளிக்க வருகிறார். ஆகவே விழித்திருந்து, தேவ சமூகத்தில் நிறைவாய் காணப்படும் கிரியைகளை தேவன் நமக்கென்று நியமித்திருந்த கிரியைகளை செய்துமுடிக்க வேண்டும். இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார்.


இயேசு திருடனைப் போல வருகிறார்
“திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந் தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்” (மத்.24:43)
திருடன் வரும் வேளையை யாராவது அறிவார்களா? திருடன் இன்ன நேரத்தில் வருவேன் என்று சொல்லிவிட்டு வருவதில்லை. திருடன் வருவான் என்று தெரிந்தால், விழித்திருந்து வீட்டைக் காவல் காப்பான். இயேசு திருடனைப் போல வருகிறார். அவர் வரும் வேளையை நாம் அறியாதபடியால் விழித்திருப்போம்.


இயேசு வரும் நாள் திருடனைப் போல உங்களைப் பிடித்துக்கொள்ள, நீங்கள் அந்தகாரத்தில் இருக்கிறவர்கள் அல்லவே என வேதம் கூறுகிறது. வீட்டில் வெளிச்சம் இருந்தால் திருடன் வரும் வேளையைக் குறித்து பயமில்லை. ஆகவே இயேசு கிறிஸ்து வரும் வேளையைச் சந்திக்க நாம், வெளிச்சத்தில் நடக்க வேண்டும். பகலின் பிள்ளைகளாய் இருக்க வேண்டும்.
எனவே நாம் விழித்திருப்போம். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடப்போம். அப்பொழுது இயேசுவின் வருகை நமக்கு திருடனைப் போல இராமல், மணவாள னை சந்திக்கும் மகிமையின் நாளாக இருக்கும். ஆகவே கலங்காதிருங்கள்; நாம் ஆயத்தமாயிருந்தால் அந்த நாள் மன மகிழ்ச்சியின் நாள். எனவே நாம் கருத்தாய் விழித்திருப்போம். வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடப்போம். ஆம் இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார். அவரை சந்திக்க ஆயத்தப்படுவோம். ஆமென்!



Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This