நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் பெற்றோர் எங்களை மிகவும் கண்டிப்புடன் வளர்த்தார்கள், ஜெபம், வேத வாசிப்பு, உபவாசம், சிறு தவறுகள் செய்தாலும் பாவ மன்னிப்பு ஜெபம், தண்டனைகள் என கண்டிப்பின் சிகரமாகத் திகழ்ந்தார்கள். இதே சூழ்நிலையில், நான் என்னுடைய பிள்ளைகளை வளர்க்கப் பிரயாசப்படுவதும், சில வேளைகளில் அவைகள் இயலாமல் போவதும் உண்டு. ஒரு விதத்தில் சொல்லப்போனால், என்னால், என்னுடைய “பெற்றோருக்கு ஒப்பான மாதிரியை, என் பிள்ளைகளிடம் காட்ட முடியவில்லை” என்று கூடக் கூறலாம்.
சில வருடங்களுக்கு முன்பு, என்னுடைய மூத்த மகளுக்கு “8 வயது” இருந்திருக்கும். அவள் ஏதாவது சிறு தவறுகள் செய்தால், நான் அவளை முழங்காலில் நின்று “பாவ அறிக்கை” செய்யச் சொல்வது வழக்கம். …. சில நாட்களில், நான் மறந்து, சில மணி நேரங்கள் கழித்து, அவளைப் பார்க்கும்பொழுது, அவள் தொடர்ந்து முழங்காலிலேயே நிற்பதைக் கண்டு வருத்தப்பட்டதும் உண்டு. அந்த அளவிற்கு அவள் கீழ்ப்படிதலின் சிகரமாக இருந்து வந்தாள் என்பது மிகவும் மெச்சிக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்.
என்னுடைய வீட்டிலே, தொலைக்காட்சி இணைப்பு கிடையாது. எனவே என்னுடைய பிள்ளைகளுக்கு “கார்டூன்” பார்க்கும் ஆர்வம் இருந்தாலும், அவர்களுக்கு வாய்ப்புகள் இல்லாதிருந்தது. ஒருமுறை நாங்கள் ஒரு உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அங்கே தொலைக்காட்சியில் “மிஸ்டர்.பீன்” கார்டூன் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. உடனே என்னுடையப் பிள்ளைகள் மிகவும் ஆர்வமாக அதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதிலே “மிஸ்டர்.பீன்” தன்னுடைய பொம்மை கரடியுடன் பேசுவதும் அந்த பொம்மை கரடியும், மிஸ்டர்.பீனுடன் பேசுவது போல, அவனே பேசி பாசாங்கு செய்வதும் அருமையாக படமாக்கி காட்டப்பட்டு இருந்தது.
….சில நாட்கள் கழித்து, நான் என் மகளை ஏதோ தவறு செய்துவிட்டாள் என்பதற்காக, நான் அவளை முழங்கால் போடச் சொன்னேன். அவளும் சிறிது நேரம் முழங்காலில் நின்றுவிட்டு, மிஸ்டர்.பீன் போல, என்னுடையக் குரலில், “சரி மரியா எந்திரி” என்று சொல்லிவிட்டு, அவளாகவே எழுந்து சென்றுவிட்டாள். ஒரு கார்டூன் காட்சி எப்படி ஆட்களை மாற்றுகிறது என்று ஆச்சரியப்பட்டேன்.
இப்படித்தான் நம்மில் பலர் ஆண்டவரின் சமூகத்தில் காத்திருக்கும்போது, அவரிடம் இருந்து ஒரு திட்டவட்டமான பதில் வருவதற்கு முன்பதாகவே, நாமாகவே, ஏதோ சொல்லிக்கொண்டு, எழுந்து சென்று நமக்கு விருப்பமானதைச் செய்கிறோம். பின்பு பிரச்சனையில் மாட்டியும் கொள்கிறோம். இதைத்தான் நம்முடைய வேதம் “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்” (ஏசாயா 40:31) சொல்கிறது.