தேவன் உங்களை பயன்படுத்த வேண்டுமா?

Written by Pr Thomas Walker

September 22, 2012

கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
திருச்சபையில் உள்ள ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைகளையும் தேவன் பயன்படுத்த விரும்புகிறார். ஆனால் அநேகரை தேவன் பயன்படுத்த முடியவில்லை!? காரணம்… ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் உள்ள குறைகளே. தேவன் ஏசாயாவை பயன்படுத்த முடியாததற்கு காரணம், அசுத்த உதடுகள் உள்ள மனிதன் அவன். இராஜாவின் அரண்மனையில் மிகவும் நல்ல உறவு இருந்ததால் செல்வாக்கு, மதிப்பு, பணம் இருந்தது. தன்னைத் தாழ்த்த, தேவ சமூகத்தில் தன் குறைவுகளைக் கண்டு திருத்த நேரமில்லை. மேலும் அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியில் வாசம் செய்தான். சூழ்நிலையினால் உங்கள் பேச்சு மாறக்கூடாது. ஆதி.6:9ஆம் வசனத்தில், “நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான். நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்” தேவனோடு ஐக்கியமாக இருப்பவர்களையே தேவன் பயன்படுத்த முடியும். மற்றவர்களோடு ஐக்கியப்படும்போது தீட்டுப்படுகிறோம். எபே.5:14 “ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” வேறுபிரிக்கப்பட்ட வாழ்க்கை வாழ்பவர்களையே தேவன் பயன்படுத்துகிறார்.
ஏசா.6:5ஆம் வசனத்தில், “அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன்.” தன் குறைவுகளை உணர்ந்த ஏசாயாவை தேவன் ஜாதிகளுக்குள் பெரிய தீர்க்கதரிசியாக பயன்படுத்தினார்.

தேவன் விசுவாசிகளை பயன்படுத்த முடியாததற்கான காரணங்களை ஆராய்ந்து பார்ப்போம்
1.
அசுத்த உதடுகள்:
சங்.5:9ஆம் வசனத்தில், “அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள்.” (வச.6) “பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார்” வெளிப் பார்வைக்கு பரிசுத்தம், உள்ளே ஒன்றும் இல்லை. பொய் பேசினால்தான் பிழைக்க முடியும் என்று சொல்லாதே. மேலும், யோவான் 8:44ஆம் வசனத்தில் “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்”
இச்சக உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பு. எனவே நீ இச்சகம் பேசாதே. முகஸ்துதி செய்யாதே, இல்லாததை இருப்பதுபோல் செய்யாதே. இயேசு முகஸ்துதி பண்ணவில்லை. தேவன் உன்னைப் பயன்படுத்த, உன் அசுத்த உதடுகளை சுத்தம் செய்.

2. பெருமைகளைப் பேசும் வாய்
வெளி.13:5ஆம் வசனத்தில், “பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது;” அந்திகிறிஸ்துவின் ஆவியுடையவர்கள், பெருமையானவைகளையும், தூஷணங்களையும் பேசுவார்கள். சர்வாதிகாரிகள் பெருமையும், அகங்காரமுமாக பேசி மக்களை கொடுரமாக நடத்துவார்கள். இவர்கள் தேவனால் பயன்படுத்த முடியாது.

3. புறம் கூறும் நாவு
சங்.15:3ஆம் வசனத்தில், “அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.” புறங்கூறும் நாவும், அடுத்தவர்களை கெடுத்துப் பேசுகிறவன் கர்த்தருடைய கூடாரத்தில் தங்கமுடியாது. மற்றவர்களின் கண்ணியத்தை பாதிக்கும்படி செயல்படுகிறவர்கள் புறங்கூறுவார்கள். இவர்களை தேவன் பயன்படுத்த முடியாது.

4. நிந்தையான பேச்சு பேசும் நாவு
சங்.15:3ஆம் வசனத்தில், “…தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்” இப்படிப்பட்ட மனுஷனைத் தான் தேவன் பயன்படுத்துவார்.

5. கபட்டு வசனிப்பு
சங்.34:13ஆம் வசனத்தில், “உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள்.” மேலும் சங்.52:4ல் “கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய்.” இப்படிப்பட்டவர்களை தேவன் பயன்படுத்தமுடியாது.
சிம்சோன், தன் பெலனை தவறான வழியில் பயன்படுத்தி வந்தான். நரிகளைப் பிடிக்கவும், கதவுகளை தூக்குவதற்கும் மற்றும் தூண்களை அசைத்துத் தள்ளவுமே தன்னிடம் காணப்பட்ட தேவ வல்லமையைப் பயன்படுத்தினான். தேவன் இஸ்ரவேல் ஜனங்களை மீட்கும்படிதான் இரட்சகனாகத் தெரிந்துகொண்டார். மாம்ச இச்சைக்கு இடங்கொடுத்துப் பிரதிஷ்டையை உடைத்துப்போட்டதால் தேவனால் சிம்சோனைப் பயன்படுத்த முடியவில்லை. நீயும் தேவன் உனக்களித்திருக்கும் பெலனை மாம்ச இச்சைக்கும், விருதாவாகவும் செலவழித்தால் உபவாசித்து ஜெபித்து மனந்திரும்பு. தேவன் மீண்டும் பயன்படுத்துவார்.


தேவன் சவுலைப் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், சவுல் ஓர் ஆடம்பரப் பிரியன். தேவனுக்கும், சாமுவேலுக்கும் கீழ்ப்படியவில்லை. தன் சுய விருப்பத்துக்கு முதலிடங்கொடுத்து வாழ்ந்தான். தேவன் அமலேக்கியரை முறியடிக்க கூறியபோது முழுவதுமாகக் கீழ்படியவில்லை.
ஏசாயாவும் தன் அசுத்த உதடுகளை ஒப்புக்கொடுத்தபோதுதான், தேவனால் பயன்படுத்தப் பட்டார்.
தாவீது தன் உதடுகளை காவல் செய்தான். எனவே தேவன் அவரை தீர்க்கதரிசியாகவும், பாடகனாகவும், இஸ்ரவேலரை காக்கும் மேய்ப்பனாகவும் பயன்படுத்தினார்.

6. சற்பனையைப் பிணைக்கும் நாவு
சங்.50:19,20ஆம் வசனத்தில், “உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய்.” தேவன் சற்பனையைப் பிணைக்கும் நாவு உடையவனையும், தன் தாயின் மகனுக்கு அவதூறு பண்ணுகிறவனையும் தண்டிப்பார். தேவனுக்காக அவர்கள் பயன்பட முடியாது.

7. கசப்பான வார்த்தைகளை பேசும் நாவு
மறைவுகளில் உத்தமன் மேல் எய்யும் பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள். சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள். இப்படி கசப்பான வார்த்தைகளை பேசுகிறவர்களை தேவன் பயன்படுத்துவது இல்லை.

8. குற்றம் சாட்டும் உதடுகள்
வெளி.12:10ஆம் வசனத்தில், “…இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான்.” அடுத்தவர்கள்மேல் பழிச் சுமத்துபவர்களையும், விரல் நீட்டுகிறவர்களையும் தேவன் பயன்படுத்த முடியாது.


இதை வாசிக்கும் அன்பு நேயரே! தேவன் உங்களை வல்லமையாகப் பயன்படுத்த விரும்புகிறார். தேவ சமுகத்தில் உங்களைத் தாழ்த்தி, குறைகளை அறிக்கைச் செய்யுங்கள். தேவன் விரும்பாத உறவுகளையும், பெருமையானப் பேச்சுகளையும், குற்றம் சாட்டும் தன்மையையும் விட்டுவிடுங்கள்.

புறங்கூறுபவர்களையும், நிந்தையானப் பேச்சைப் பேசி மற்றவர்களை அவதூறு செய்கிறவர்களை கர்த்தர் வெறுக்கிறார். உங்கள் நாவு கிருபை பொருந்தும் வார்த்தைகளைப் பேசுவதாக. தேவனைப் பற்றிய சுவிசேஷத்தைக் கூறுவதாகவும், துதிக்கும் நாவாகவும் மாறுவதாக! கர்த்தர் உங்கள் வாழ்வில் மகிமைப்படுவாராக! ஆமென்.





Author

You May Also Like…

Share This