சீன தேசத்தில் வாழ்ந்த ஒரு தண்ணீர் சுமக்கும் தொழிலாளியிடம் இரண்டு பெரிய பானைகள் இருந்தன. அதில் ஒரு பானையில் ஒரு சிறு கீறல் இருந்தது. மறுபானையில் எந்தவிதமான கீறலும் இல்லாமல் நேர்த்தியாய் இருந்தது. அந்தத் தொழிலாளி தினமும் அந்த இரண்டு பானைகளையும் தன் தோளின்மேல் சுமந்துகொண்டு தண்ணீர் எடுத்துக்கொண்டு வருவது வழக்கம். தண்ணீர் எடுத்துக் கொண்டு வரும் நீரோடையானது சற்று தொலைவில் இருந்தபடியால் கீறல் விழுந்த பானையில் உள்ள தண்ணீர் பாதியாகக் குறைந்துவிடும். ஆனால் கீறல் இல்லாத பாத்திரத்தில் தண்ணீர் முழுமையாக நிரம்பி இருக்கும். இதனால் கீறல் இல்லாத பானை தன்னில் தானே பெருமைப்பட்டுக் கொண்டது. தொழிலாளி தன் வீட்டிற்கு தினமும் ஒன்றரை குடம் தண்ணீரையே கொண்டு வருவான்.
கீறலுள்ள பாத்திரம் தன் நிலையை நினைத்து மிகுந்த வேதனையடைந்தது. தன்னில்தானே தாழ்வு மனப்பான்மை கொண்டது. இரண்டு வருடங்கள் கழித்து கீறல் விழுந்த பானை அந்த தொழிலாளியை நோக்கி, “ஐயா, எஜமானனே நான் என் நிலையைக் குறித்து மிகவும் வெட்கப்படுகிறேன். இந்த இரண்டு ஆண்டுகளாக என்னால் அரைகுடம் தண்ணீரை மட்டுமே தினமும் கொண்டுவர முடிந்தது. அதனால் நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னிலுள்ள இந்தக் கீறலால் தண்ணீர் கொண்டுவரும் வழியில் கசிந்து பாதியாகக் குறைந்து விடுகிறது. அதனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை” என்று மிகுந்த வருத்தத்துடன் கூறியது.
கீறல் விழுந்த பானையின் உரிமையாளர் அந்த பானையை நோக்கி, “உன்னை நீரோடையிலிருந்து வீட்டிற்கு சுமந்து கொண்டுவரும் வழிப்பாதையின் பக்கத்தில் அழகிய மலர்கள் பூத்திருப்பதையும் கீறல் இல்லாத பானையைக் கொண்டு வரும் பக்கத்தில் பூக்கள் இல்லாததையும் கவனித்தாயா? உன்னைச் சுமந்துகொண்டு வரும் பக்கத்தில் அழகிய மலர்கள் பூக்கும் விதைகளை இரண்டு வருடங்களுக்கு முன்பு விதைத்தேன், உன்னில் உள்ள கீறலால் ஏற்படும் நீர் கசிவினால் நீயும் விதைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே வந்தாய். அதனால் இன்று மேஜையை அலங்கரிக்கும் அழகிய மலர்கள் உன் பக்கம் மலர்ந்திருக்கிறது. அதனால் நீ வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை” என்றான். எஜமானின் வார்த்தைகளைக் கேட்ட கீறல் விழுந்த பானை தன் தாழ்வு மனப்பான்மை நீங்கி மகிழ்ச்சி கொண்டது.
இதை வாசிக்கும் அருமையான சகோதர சகோதரிகளே! நம் ஒவ்வொருவ ருக்கும் சில தனித் திறமைகள், தாலந்துகள், குணாதிசயங்கள் இருக்கிறது. மற்றவர்க ளுடைய தாலந்துகள் திறமைகளுடன் நம்முடையவற்றை ஒப்பிட்டு ஒருபோதும் சோர்ந்துபோகக் கூடாது. நீங்கள் ஒருவேளை கீறல் விழுந்த பானையைப் போல் யாருக்கும் உபயோகமில்லாமல் இருக்கிறேனே என்று சோர்ந்துபோய் காணப் படலாம். வெறுமையான பாத்திரங்களான நம்மை நிரப்பி தம்முடைய ராஜ்ஜியத்தின் வேலைக்காக பயன்படுத்த தேவனுடைய கையில் நம்மை ஒப்புக்கொடுப்போமாக.
“….பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரி யைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்” (2தீமோ.2:21)