கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் மாறாதவர். காலங்களும், நேரங்களும், சூழ்நிலைகளும், மனிதர்களும், அவர்கள் கொடுத்த வாக்குகளும் மாறலாம். தேவன் ஒருநாளும் பொய்யுரை யாதவர். அவர் நமக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களும் மாறாதவைகள். அவர் சொன்னதை செய்யாமல் போக மனிதன் அல்ல. வானமும் பூமியும் மாறினாலும் அவருடைய வசனம் மாறாதது. மாறிடாத நேசர் அவர். “அன்றியும் அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப் பட்டவர்களாய் அவரிடத்தில் அன்பு கூருகிறவர்களுக்கு சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது” நாம் பயப்படவோ, சந்தேகப்படவோ, கலக்கமடையவோ தேவையில்லை. இந்த தேவன் கடைசி வரை, முற்றும் முடிய நம்மை காக்க வல்லவர். அவர் அன்பில் நிலைத்திருந்து அவர் மகிமையை நம் வாழ்வில் காண்போம்.
புதிய ஏற்பாட்டில் எபிரெய ஆக்கியோன் இவ்வாறு கூறுகிறார் “இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்” (எபி.13:8) நாம் வேதத்திலிருந்து தேவன் எந்தெந்த காரியங்களில் மாறாதவராயிருக்கிறார் என்பதை கீழே காண்போம்.
1. கர்த்தர் அன்பில் மாறாதவர்.
2. மனம் மாறாதவர் – வாக்குத்தத்தம் செய்தவர் நிறைவேற்றுவார்.
3. என் சமாதானத்தின் உடன்படிக்கையும் கிருபையும் மாறாதது.
4. இயேசுவின் இரத்தம் நம் மனசாட்சியை சுத்திகரிப்பது நிச்சயம், அது மாறாதது
5. கிருபை வரங்களும், அவர் அழைப்பும் மாறாதது
6. நன்மையான ஈவுகளும், வரங்களும் அவரிடமிருந்து வருகிறது
1. கர்த்தர் அன்பில் மாறாதவர்:
யோவான் 13:1 வசனத்தில், “பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினி டத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவு பரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்”. மேலும் யோவான் 13ஆம் அதிகாரத்தில் 3-5 வசனங்களில் இயேசு தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து, சீஷர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். யூதாஸின் கால்களையும் இயேசு கழுவினார். அவன் முத்தத்தினால் காட்டிக்கொடுத்தபோதும் சிநேகிதனே என்றே அழைத்தார். அவர் அன்பிலே மாறாதவராயிருக்கிறார். நாமும் அவரிடத்தில் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு பெலத்தோடும், முழு சிந்தையோடும் அன்புகூர கடனாளிகளாயிருக்கிறோம்.
2. மனம் மாறாதவர் – வாக்குத்தத்தம் செய்தவர் நிறைவேற்றுவார்:
எண்.23:19 வசனத்தில், “பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா?” இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே தேவனுக்குப் பிரியம். யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை. தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார். நமக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதங்களை வாய்க்காதே போகப் பண்ணுவார்.
(அ) 1சாமு.15:29 வசனத்தில் சாமுவேல் சவுலிடம் “இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம் மாற அவர் மனுஷன் அல்ல என்றான்”
(ஆ) ஆதி.28:15 வசனத்தில் கர்த்தர் யாக்கோபிடம் சொப்பனத்தில், “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்”
(இ) யோபு 33:14 வசனத்தில், “தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே”
(ஈ) ஓசி.11:9 வசனத்தில் “என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன்” என்றார்.
3. என் சமாதானத்தின் உடன்படிக்கையும் கிருபையும் மாறாதது:
ஏசா.54:10 வசனத்தில், “மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந் தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்” மேலும் 1கொரி.11:25ல் இயேசு “…அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம் பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்”. இயேசுவோடு உடன்படிக்கை பண்ணின நாமெல்லாரும் அவருடைய மரணத்தோடு ஐக்கியப்பட்டிருக்கிறோம். மரண பரியந்தம் அவர் அன்பில் நிலைத்திருப்போம். அவர் நம்மோடு பண்ணின உடன்படிக்கை மாறாதது.
4. இயேசுவின் இரத்தம் நம் மனசாட்சியை சுத்திகரிப்பது நிச்சயம், அது மாறாதது:
எபி.9:14 வசனத்தில் இயேசுவின் இரத்தம் நம் மனச்சாட்சியை சுத்திகரிக்க வல்லமையுள்ளது. “…கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” அதாவது அது மாறாத உண்மை.
5. கிருபை வரங்களும், அவர் அழைப்பும் மாறாதது:
ரோமர் 11:29 வசனத்தில், “தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே”. தேவன் எவர்களை அழைத்தாரோ அந்த அழைப்பும் அவருடைய கிருபை வரங்களும் மாறாதவைகள். நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவர் உண்மையாய் முடிவுபரியந்தம் நம்மை நடத்த வல்லவராயிருக்கிறார்.
6. நன்மையான ஈவுகளும், வரங்களும் அவரிடமிருந்து வருகிறது:
யாக்.1:17 வசனத்தில், “நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதி களின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரி டத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை” நன்மையான எந்த ஈவுகளையும் பிதாவானவர் பாரபட்சமில்லாமல், மாறுதலும் இல்லாமல் யாவருக்கும் அவர் விருப்பப்படி பகிர்ந்து கொடுக்கிறார். இந்த புத்தாண்டு செய்தியினை வாசிக்கும் அன்பு நண்பரே! கர்த்தர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவர் அன்பில் மாறாதவர், அவர் நமக்கு கொடுத்த வாக்குகளை நிறைவேற்றுவதில் உண்மையுள்ளவர் பொய்யுரையாதவர், அவர் அழைப்பும், கிருபை வரங்களும் மாறாதது. அவரின் சமாதான உடன்படிக்கை மாறாதது. நான் உனக்குச் சொன்னதை செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றவர். நிச்சயமாய் நம்மை முற்றும் முடிய இரட்சிக்க வல்லவர். நாம் அவரின் அன்பில் நிலைத்திருந்து பெரிய காரியங்களை காண்போம்! மாரநாதா!