கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவனுக்கு ஏற்ற இருதயம் நறுங்குண்ட இருதயம், பணிந்த ஆவி நம்மிடம் காணப்பட வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார். சாத்தான் இருதய கடினத்தையும், மன மேட்டிமையையும் தருகிறான். தேவனுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கிறான். அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் விசுவாசிகளுக்குள் வர முடியும் என்பதை இஸ்ரவேலருடைய வாழ்க்கையிலிருந்து அறிய முடியும். தேவனை தவறாகப் புரிந்துகொண்டு அவரை வெறுப்பது, விசுவாசியாமலிருப்பது பொல்லாத இருதயத்தை காட்டுகிறது. எபி.3:12 வசனத்தில், “சகோதரரே, ஜீவனுள்ள தேவனை விட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்”
தேவனை விட்டு விலகுவது ஒரே நாளில் நடைபெறுவதில்லை. சிந்தனை, பிசாசு, உலகம் நம்மை தேவனைவிட்டுப் பிரிக்கிறது. இஸ்ரவேலர் எவ்வாறு அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயத்துடன் காணப்பட்டனர்? அதற்கு காரணம் என்ன? என்று ஆராய்ந்து பார்த்தால் தெரியும். அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் பின்மாற்றத்திற்கு நேரே வழி நடத்தும்.
1. கால தாமதம் பொல்லாத இருதயமாக மாறுகிறது:
யாத்.32:1 வசனத்தில், “மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்”. வேறு தெய்வங்களை வணங்க, உண்டா வேண்டும் என்ற எண்ணம் வரக் காரணம் மோசே மலையிலிருந்து வர தாமதித்தது தான். குறிப்பிட்ட காலத்தில், எதிர்பார்த்த வேளையில் காரியங்கள் நினைத்தபடி நடக்காவிட்டால் இருதயம் பொல்லாத இருதயமாக மாறிவிடுகிறது.
2. சூழ்நிலைகள் நமக்கு பொல்லாத இருதயத்தைக் கொடுக்கும்:
1 சாமு.13:11,12 “நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே, கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ண வில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்”. சூழ்நிலைகள் நம்மை மாற்றக்கூடாது. அவருடைய வேளைக்காக பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். சங்.40:1, “கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்” என்று தாவீது கூறுகிறார். சவுலிடம் இருந்த பொல்லாத இருதயக் கடினம், அஞ்சனம் பார்க்கத் தூண்டியது, பின்னர் தற்கொலை செய்தான். சாமுவேலைப் பகைத்தான், தேவ ஆலோசனைகளுக்கு கீழ்ப்படியவில்லை.
3. பின்னாகத் திரும்பி பாராதே பொல்லாத இருதயம் வரும்:
எண்.11:4,5 வசனங்களில், “பின்பு அவர்களுக்குள் இருந்த பல ஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக் காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம்” என்றனர். எகிப்தில் சாப்பிட உணவு, வசதிகளை இஸ்ரவேலர் திரும்பிப் பார்த்து பின்வாங்கினர். பழைய பாவ வாழ்க்கையை எண்ணிப் பார்த்தால் பொல்லாத இருதயம் வரும்.
4. தேவன் தந்த காரியங்களை அற்பமாய் நினைக்கும்போது பொல்லாத இருதயம் வரும்:
எண்.11:6 வசனத்தில், “இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்” தேவன் தந்த ஒவ்வொரு ஆசீர்வாதங்களுக்காகவும் தேவனுக்கு நன்றியறிதலுள்ளவர்களாயிருக்க வேண்டும். உண்மையாயிருக்க வேண்டும். பிள்ளை, புருஷனை அற்பமாக எண்ணக் கூடாது. எல்லாவற்றிற்காகவும் தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். நன்றியில்லாத இருதயம் பொல்லாத இருதயமாக மாறும். (உதாரணமாக) உயரமான ரோட்டில் டுநஎநட ஊசடிளளiபே போடப்பட்டபோது மாட்டு வண்டியில் அதிக பளு காணப்பட்டதால் வேகமாக ஏற முடியவில்லை. மாட்டு வண்டிக்காரன் செங்கல் வைத்து அடி அடியாக மெதுவாக வண்டியை ஏற்றினான். நாமும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும். செங்கல்தான் வண்டி பின்வாங்கி ஓடாமல் தடுத்து நிறுத்தும். ஸ்தோத்திரம் சொல்லிச் சொல்லி முன்னேற வேண்டும்.
5. சுதந்தரிக்க வேண்டிய நேரம், அழுது தேவனை துக்கப்படுத்தாதே:
எண்.14:1 வசனத்தில், “அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள்” சூழ்நிலையைப் பார்த்து இருதயக் கடினம் கொள்ளக்கூடாது. அவிசுவாசத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. எண்.13:31,32,33 வசனங்களில் வேவுகாரர் கூறிய சொற்களைக் கேட்டு இருதயத்தை கடினப்படுத்தினர். அவர்கள் சுற்றிப் பார்த்த தேசத்தைக் குறித்து துர்ச் செய்தியை பரம்பச் செய்தனர். அதைக் கேட்டு அழுதனர். நல்ல இருதயம் விசுவாசத்தோடு ஸ்தோத்திரம் செய்யும். காலேப், யோசுவா வேறே ஆவியுள்ளவர்களாய் காணப்பட்டனர். நாம் போய் உடனே சுதந்தரித்துக் கொள்ளுவோம். நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்று விசுவாசித்தனர்.
6. இருதயத்தில் எகிப்துக்குத் திரும்பினார்கள்:
எண்.14:4 வசனத்தில், “பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்”. அப்.7:39 வசனத்தில், “இவனுக்கு (மோசேக்கு) நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பினார்கள்”
2 தீமோ.4:10ல், “…தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னை விட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்”
1 தீமோ.6:10ல், “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்” பண ஆசையால் யூதாஸ் வஞ்சிக்கப்பட்டான். சீஷர்கள் மத்தியில் இருந்தும் இயேசுவையே காட்டிக்கொடுக்கும் பொல்லாத இருதயம் இருந்தது.
7. நல்மனச்சாட்சியை தள்ளிவிட்டால் பொல்லாத இருதயம் வரும்:
1 தீமோ.1:19 வசனத்தில், “இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்” நல்மனச்சாட்சி வேண்டும், பிறர் பொருளை அக்கினியாய் நினை. 1 தீமோ.3:9ல் சுத்த மனசாட்சி இல்லாவிட்டால் – விசுவாசம் காக்கப்பட முடியாது. மீன் சுத்தமான நீரில் வாழ்வதுபோல, சுத்த மனசாட்சியில்தான் விசுவாசம் பாதுகாக்கப்படும்.
அன்பு நண்பரே! அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் நம்மில் வராதபடி எச்சரிக்கையாயிருக்க வேண்டும். துர் உபதேசத்தால் கெட்டுப்போகக் கூடாது. ஏவாள் பிசாசின் வஞ்சக வலையில் விழுந்ததுபோல, நாமும் பொல்லாத வஞ்சகத்தில் அகப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். பின்னிட்டு பழைய வாழ்க்கையை பார்க்கக் கூடாது. தேவன் கொடுத்த ஆசீர்வாதங்களுக்காக தேவனை நன்றியோடு துதிக்க வேண்டும். துர்செய்தியைப் பரப்பும் மனிதர்களுக்கு விலக்கி காக்க வேண்டும். பிசாசு மனச்சாட்சியை கெடுக்க இடம் கொடுக்கக்கூடாது. தேவ சபையில் நிலைத்திருந்து மிகுந்த கனி கொடுக்க வேண்டும். தேவன் மகிமைப்படுவார். அல்லேலூயா!