விசுவாசியே! தேவன் உன் ஜெபத்திற்கு பதிலளிக்கவில்லையா? ஏன்? சிந்தனை செய்

Written by Pr Thomas Walker

July 21, 2009

நம்முடைய தேவன் ஜெபங்களுக்கு பதிலளிக்கிறவர். ஜெபத்தை கேட்கிறவர். கூப்பிடுகிற காக்கை குஞ்சுகளுக்கும், கடலில் வாழும் திமிங்கலங்களுக்கும் ஆகாரம் கொடுப்பவர். ஆனால் சிலர் வாழ்க்கையில் ஜெபங்கள் தேவ சந்நிதியில் சென்று பலனைக் கொண்டு வருவதில்லை. ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு அவர் மேகத்தால் மூடிக்கொண்டார் (புல.3:44) ஏன்? தேவனுடைய கோபம் மனுஷன்மேல் வரும்போது அவர் அவனுக்கு பதிலளிப்பது இல்லை. சங்.18:24 “…கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்” என்றார் தாவீது. தேவன் நம்முடைய ஜெபங்களுக்காகப் பதிலளிக்காவிட்டால் விசுவாசியே! நீ சிந்தனை செய். உன்னைத் தேவனுடைய சமுகத்தில் தரைமட்டும் தாழ்த்து, கிருபையை பெற்றுக்கொள். தேவன் நம்முடைய எல்லா ஜெபங்களுக்கும் பதிலளிக்க கடமைப்பட்டவர் அல்ல.


ரோம.11:35 வசனத்தில், “தனக்குப் பதில் கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்?” நமது காணிக்கைகளால் தேவனிடம் நமக்குத் தேவையான பதிலைப் பெற முடியாது. தேவனுடைய சித்தத்தின்படி கேட்டால் பெற்றுக்கொள்வோம். எந்த இடத்திலிருந்து கேட்க வேண்டும்? கிருபை, உண்மையினிமித்தம் தான் அவர் பதில் தர முடியும். நாம் நீதியாய், நேர்மையாய், கைகளில் சுத்தத்துடன் வாழ்ந்தால் தான் தேவனிடமிருந்து பதிலைப் பெறமுடியும் என்று தாவீது கூறுகிறார். தேவனிடம் தன்னை ஆராய்ந்துப் பார்க்கும்படியாகக் கூறுகிறார்.
நாம் தேவனிடம் பதிலைப் பெற்றுக்கொள்ளும்படி நம்மை நாமே ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

 
முதலாவதாகதேவனிடமிருந்து ஜெபத்திற்கு பதிலைப் பெற கர்த்தரின் வழிகளைக் கைக்கொள்ள வேண்டும்
சங்.18:21 வசனத்தில், “கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்” என்கிறார். உலகத்தில் இரண்டு விதமான வழிகள் உள்ளன. ஜீவ வழி – குறுகிய வழி, விசாலமான வழி – மரண வழி. குறுகிய வழியைத் தேர்ந்தெடுப்பவர்களின் இருதயம் இன்னும் நித்திய வழியை நோக்கிச் செல்லும்.
சங்.139:23,24 வசனங்களில், “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” வேதனை தரும் வழியை நீங்கும்படி ஜெபி. மேலும் சங்.125:5 “தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார்.” “Don’t miss guide” கோணலானவைகளை செவ்வையாக்கும்படி தேவனிடம் ஜெபிக்க வேண்டும். மேலும் சங்.119:128 வசனத்தில், “…நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்”. சங்.119:29ஆம் வசனத்தில், பொய் வழியை என்னைவிட்டு விலக்கும் என்கிறார். பொய் வழிகளை வெறுக்க வேண்டும்.

 இரண்டாவதாகதேவனிடத்திலிருந்து பதிலைப் பெற வேண்டுமானால் நாம் தேவனுக்கு துரோகம் பண்ணக்கூடாது
யோசு.7:1 வசனத்தில் “இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்” நாம் சாபத்தீடானதை வைத்திராதே. அது தேவனுடைய பார்வையில் துரோகம்.
1நாளா.9:1 “…யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்” பாகாலைப் பின்பற்றி துரோகம் பண்ணினார்கள்.
1நாளா.10:13 “அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான்”
லூக்.6:16 யூதாஸ்காரியோத்து காட்டிக் கொடுத்தான். அவன் துரோகி.
விசுவாசத் துரோகம் – பின்னிட்டுத் திரும்புதல். ஜீவ மார்க்கத்தை விட்டு வழிவிலகி உலகத்தை அனுபவிக்கும் நோக்கத்துடன் திரும்புதல்.

 
மூன்றாவதாகதேவனிடத்திலிருந்து பதிலைப் பெற தேவனுடைய நியாயங்களை என் முன்பாக நிறுத்த வேண்டும்
தேவனுடைய நீதி, நியாயங்களின் நிமித்தம் அவரைத் துதிக்க வேண்டும். கர்த்தரை குறை சொல்லாதே. அவர் உண்மையும், நீதியுமுள்ளவர்.
சங்.119:164 உமது நீதி நியாயங்களிமித்தம் ஒரு நாளில் ஏழு தரம் உம்மைத் துதிக்கிறேன் என்றும்,
சங்.119:7 “உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்”
சங்.119:30 “மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன்”. அவர் நீதியின் தேவன், நீதியும், நியாயமும் அவர் சிங்காசனத்தின் ஆதாரம். அவர் நீதியாய் நடப்பவர்கள் மேல் பிரியமாய் இருக்கிறார். முஸ்லீம் பக்தர்கள் ஒரு நாளைக்கு 5 தடவைகள் தொழுகிறார்கள். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்கள் ஒரு நாளைக்கு 7 தடவைகள் தேவனை தொழுதனர். 3 மணி நேரத்துக்கு ஒருமுறை தொழ வேண்டும். (காலை 6, 9, 12 மாலை 3, 6, 9, 12) என்று 7 தடவைகள். காலை 3 மணிக்கு தான் இஸ்ரவேலர்கள் தொழுவது கிடையாது. தாவீதுகூட அவரது நீதி, நியாயங்களுக்காக 7 முறைத் தொழுதார். ஆடு மேய்த்த தன்னை அவர் அரசனாக உயர்த்தியதற்காக அல்ல.

 நான்காவதாகதேவனிடம் பதிலைப் பெற அவருடைய பிரமாணங்களை தள்ளிப்போட கூடாது
சங்.119:8,16 வசனங்களில், “உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்”என்றும் “உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்” என்றும் கூறுகிறார். யாக்.1:22, “அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்தரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்”. மத்.28:20 உயிர்த்தெழுந்த இயேசு கடைசியாக பரத்துக்கு ஏறிப்போகும் முன்பு தன் சீஷர்களை நோக்கி “நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” என்றார். பொறுமை, நீடிய பொறுமை, சந்தோஷத்தோடு கூடிய பொறுமை நமக்குத் தேவை. ஆரோனும், மோசேயும் ஒருவரையொருவர் சந்தித்தபோது ஓரேப் பர்வதத்தில் மகிழ்ச்சியாகக் கட்டி முத்தமிட்டனர்.
நெகே.8:10 “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” நாம் எப்பொழுதும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்தால் வியாதியில்லை.
சங்.119:97,83 வசனங்களில், “உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்” என்றும் “உமது பிரமாணங்களையோ மறவேன்” என்றும் கூறுகிறார்.

 ஐந்தாவதாகதேவனிடமிருந்து பெற மனவுண்மையாயிருக்க வேண்டும்
உண்மையாயிருப்பது மிகவும் சுலபம். மனதில் உண்மையாயிருப்பது கஷ்டம். நாம் சிந்தை வாழ்க்கையிலும் (வாடிரபாவ டகைந) உண்மையாயிருக்க வேண்டும். சங்.51:6 வசனத்தில், “இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்”. உள்ளத்தில் உண்மையாயிருந்தால்தான் ஞானத்தை, இரகசியத்தை வெளிப்படுத்துவார். எசே.18:9 “என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்” நோவாவுக்கு தேவன் ஏன் தன்னை வெளிப்படுத்தினார். உண்மை, உத்தமனாகக் காணப்பட்டான். ஏனோக்கு மன உண்மையாகக் காணப்பட்டான். ஆபிரகாம் கர்த்தருக்கு கீழ்ப்படிவதில் மன உண்மையும், உத்தமுமாக இருந்தார். மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ள மனிதனாகக் காணப்பட்டான். தீர்க்கதரிசிகளும் தேவனுக்கு முன்பாக உண்மையாக தேவன் சொன்னதையே ஜனத்திடம் பேசி எச்சரித்தார்கள். மன உண்மையாய் நடந்தால் தேவனிடமிருந்து நல்ல பதிலைப் பெறலாம்.

 ஆறாவதாகதேவனிடத்திலிருந்து பதிலைப் பெற துர்க்குணத்துக்கு விலக்கி காத்துக்கொள்ள வேண்டும்
தாவீது தன்னை துர்க்குணத்துக்கு விலக்கிக் காத்துக்கொண்டேன் என்கிறார். துர்க்குணம் என்பது புளித்தமாவு. எல்லா சுபாவத்தையும் முழு மனிதனையும் கெடுத்துவிடும். எபி.12:1 வசனத்தில், “…பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருக்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, …இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்”.
மேலும் எபே.4:31ஆம் வசனத்தில், “சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், துஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது” கசப்பினால் நாம் தீட்டுப்படக்கூடாது. எபி.12:15 “ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும்,” எச்சரிக்கையாயிருங்கள். துர்க்குணம் நம்மையும், மற்றவர்களையும் தீட்டுப்படுத்தும், தேவனுடைய கிருபையையும் நாம் இழக்கிறோம். கோபத்துக்கு நாம் விலகி வாழவேண்டும். மூர்க்க வெறி வந்தால் அடி, உதை, வெட்டு, கொலை வரும். கூக்குரல் நரகத்தில்தான் இருக்கும்.
எபே.4:29ல் தூஷணம், கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம். “தூஷணம், கெட்ட வார்த்தை போன்றவற்றினால் தேவனுடைய கிருபையை இழக்க நேரிடும். தேவனிடம் பதிலையும் பெறமுடியாது”

 ஏழாவதாகதேவனிடத்திலிருந்து பதிலைப் பெற கைகளில் சுத்தம் தேவை
சங்.18:24ஆம் வசனத்தில், “…கர்த்தர் …என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்” தாவீது போர் செய்து இரத்த கறைகள் படிந்தக் கைகளையுடையவனாக இருந்ததால் தேவனுடைய ஆலயத்தைக் கட்டத் தகுதியற்றவன் என்று விலக்கிச் சாலமோனைக் கட்டச் சொன்னார். அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டவனாயினும் though he was cleansed by God. – சிக்லாகுவில் தீமைச் செய்த அவனை பார்த்தவர்களையும், எதிரியிடம் செய்தி போய்ச் சேரக்கூடாது என்பதற்காகக் கொலை செய்தான். கர்த்தர் அவன் பாவத்தை மன்னித்தார். ஆலயத்தைக் கட்டவிடவில்லை. மோசேயை மேரிபாவின் தண்ணீர்கள் அண்டையில் சோதித்தார். கன்மலையைப் பார்த்துப் பேசும்படி கூறியதும் அவன் கன்மலையை அடித்ததால் மோசே தேவ மனிதனாயினும் கானானில் பிரவேசிக்க முடியவில்லை. தேவன் நீதியுள்ள நியாயாதிபதி. உபா.24:14,15ஆம் வசனங்களில், “உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; …அதைக் கொடாவிட்டால் …அது உனக்குப் பாவமாயிருக்கும்.” மேலும் வட்டிக்கு கொடுத்தல், குற்றமில்லாத மனிதனுக்கு விரோதமாகப் பரிதானம் வாங்குதல், தேவனுக்கு முன்பாகக் குற்றம், தேவனிடமிருந்து நாம் ஜெபத்திற்குப் பதிலைப் பெறமுடியாது.


இதை வாசிக்கும் அன்புச் சகோதர, சகோதரிகளே! நாம் எந்த காரியங்களில் தவறியுள்ளோம். தேவன் வெறுக்கும் எந்த காரியம் நம்மிடம் உள்ளது என்பதைக் கண்டுபிடித்து நம்மைச் சரிசெய்யும்படி தேவனுடைய கரங்களில் ஒப்படைப்போம். நம்முடைய பரிசுத்த கரங்களைத் தேவ சமுகத்தில் உயர்த்தி ஜெபிக்க தேவன் நம்மை தகுதிப்படுத்துவாராக! ஆமென்.






Author

You May Also Like…

Share This