கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் ஒவ்வொரு விசுவாசியின் வாழ்விலும் துன்பத்தை அனுமதிக்கிறார். துன்பங்களும் உபத்திரவங்களும் நம் வாழ்வில் நம்மைப் புடமிட்டு நம்மில் உள்ள களிம்பை, தேவையற்ற குணங்களை நம்மைவிட்டு அகற்றி விடுகிறது. நம்மை தேவனுக்காக பிரகாசிக்க வைக்க துன்ப பாதை நமக்குத் தேவை. நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். பரலோகராஜ்யம் அவர்களுடையது (மத்.5:10) என்று வாசிக்கிறோம். மேலும் 2தீமோ.3:11,12 வசனங்களில் “அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” மேலும் பவுல் அப்போஸ்தலன் “அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார்” என்கிறார். பேதுரு அப்போஸ்தலன் கூட 1பேதுரு 2:19,20,21 வசனங்களில் “…தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும்.” குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்கு முன்பாகப் பிரீதியாயிருக்கும்.
விசுவாசிகள் துன்பப்படுவதற்காகவே அழைக்கப்பட்டுள்ளார்கள். ஏனெனில் கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப் போனார். நமக்கு வரும் துன்பங்களை பொறுமையோடு சகித்தால் அதுவே தேவனுக்கு பிரியமாக காணப்படும். முறுமுறுப்போடு அல்ல, யோபு கூட தனக்கு வந்த சோதனைகளை பொறுமையோடு சகித்தார் என்று யாக்கோபு 5:11 வசனத்தில் வாசிக்கிறோம் “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்” அவருடைய வாழ்வின் முடிவில் தேவன் அவரை இரட்டிப்பாக ஆசீர்வதித்தார். கர்த்தர் எப்படி மிகுந்த உருக்கமும் இரக்கமும் உடையவராய் அவருக்கு காணப்பட்டார் என்று பார்த்தோம். யோபு சோதித்த பின்பு சுத்த பொன்னாக விளங்குவேன் என்கிறார்.
1. விசுவாசிகள் தேவனுக்காக காத்திராமல் அவசரப்பட்டால் துன்பம் வரும்
முதலாவதாக
நம்முடைய முற்பிதாவாகிய ஆபிரகாமின் வாழ்க்கையிலும் துன்பங்கள் பல வந்தது. அவற்றில் வெற்றி கிடைத்தது. ஆனால் தேவன் அனுமதிக்காததுதான் ஆகார் மூலம் வந்த துன்பம். எனவே துன்பத்திற்கு காரணமாக அவசரப்பட்டு பொறுமையில்லாமல் செய்ததால் சாராளுக்கு ஆகார் நிமித்தமும் வீட்டில் பிரச்சனை. ஆகார் நிமித்தம் முறுமுறுப்பும், கசப்பும், போராட்டங்களும் ஏற்பட்டது. (ஆதி.16:1-6)
இரண்டாவதாக
மோசே தன்னுடைய 40ஆவது வயதில் இஸ்ரவேல் ஜனங்களை பார்வோனின் அடிமைத்தனத்திலிருந்து மீட்டு ஒரு பெரிய தலைவனாக மாற விரும்பினான். ஆனால் கர்த்தரின் சித்தம் வனாந்திரத்தில் 40 வருடங்கள் பழக்குவித்து பொறுமையையும், நிதானத்தையும் கற்றுக்கொடுத்து அவனை தலைவனாக்க விரும்பினார். மோசே அவசரப்பட்டு எகிப்தியனை கொலை செய்தபோது துன்பங்கள் அவனைச் சூழ்ந்தது. தேவன் கோபக்காரனான மோசேயை பயன்படுத்த விரும்பவில்லை. துன்பங்கள் மூலம் சாந்தத்தையும், பொறுமையையும் கற்றுக்கொடுத்த பின்னரே இஸ்ரவேலரை நடத்தும் தலைவனாக பயன்படுத்தினார். (யாத்.2:11-15) (யாத்.3:2,10) இந்த வேத வாக்கியங்களில் நாம் தெளிவாக அறியலாம்.
மூன்றாவதாக
இயேசுவின் வாழ்விலும் கானாவூரில் திராட்சரசம் குறைவுபட்டபோது – தாயாகிய மரியாள் இயேசுவிடம் வந்து வேண்டிக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவசரப்படவில்லை. மரியாளிடம் “என் வேளை இன்னும் வரவில்லை என்றார்”. தேவனுடைய வேளைக்காக காத்திருந்தார். ஏற்றக் காலத்தில் அவர் நம்மை உயர்த்த அவருடைய பலத்த கரத்தினுள் அடங்கியிருக்க வேண்டும் (யோவான் 2:1-5) வசனங்களில் இதை நாம் தெளிவாகக் காணலாம்.
நான்காவதாக
நகோமி பஞ்சம் ஏற்பட்டபோது அப்பத்தின் வீடாகிய எருசலேமை விட்டு பிழைப்புக்காக மோவாப் தேசம் செல்கிறாள் (ரூத் 1:1-5) வசனங்களில் மோவாப் தேசத்தில் பத்து வருஷம் வாசம் பண்ணினாள். தன் கணவனையும் தனது குமாரர் இருவரையும் இழந்து தனித்தவளானாள். உணவு இல்லை எருசலேமில் என்றதும் திடீர் முடிவெடுக்கிறாள். இவள் தேவ ஆலோசனைக்கு கீழ்ப்படியாமல் தன் சுய ஆலோசனையின்படி நடந்ததால் பெரிய நஷ்டத்தையும், துன்பத்தையும் அனுபவித்தாள்.
ஐந்தாவதாக,
லோத்து தேவ மனிதனாகிய ஆபிரகாமின் ஐக்கியத்தையும், தேவ வழிநடத்துதலையும் விரும்பாமல் தன் மனம் போல வளமான பூமியைப் பிரித்தெடுக்கிறான். அதனால் பெரிய அழிவையும் துன்பத்தையும் அநுபவித்தான். மனைவி உப்புத்தூண் ஆனாள். தன் சொத்தை இழந்தான் மற்றும் தன் குமாரத்திகளால் சாப சந்ததியையும் பெற்றான். மனிதனுக்கு செம்மையாகத் தோன்றும் வழிகளின் முடிவு மரணம் (ஆதி.13:12,13/19ஆம் அதிகாரம்) வாசித்தால் லோத்தின் தவறான தெரிந்துகொள்ளுதலினால் அவன் வாழ்வில் ஏற்பட்ட துன்பத்தை தெளிவாக அறியலாம். லோத்து வாழ்வில் எடுத்த அவசரமான தீர்மானம் அவனை துன்பங்களுக்கு நேராக வழிநடத்தியது.
2. துணிகரமான பாவத்தால் துன்பம் வரும்
தாவீதின் வாழ்க்கையில் 2சாமு.12:11-14 வசனங்களில் தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளை தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, உரியாவை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்று போட்டதால், கர்த்தர் நாத்தான் தீர்க்கதரிசியைக் கொண்டு எச்சரித்தார். மேலும் அவன் வீட்டில் பொல்லாப்பை எழுப்பப்பண்ணுவேன், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க காரணமாயிருந்தபடியினால் தாவீதுக்கு பிறந்த பிள்ளை செத்தது. அவமானம் நிந்தை சூழ்ந்து கொண்டது. துணிகரமான பாவங்களைச் செய்தால் துன்பங்கள் தொடர்ந்து வரும். தேவனுடைய கோபத்துக்கு தப்ப முடியாது.
3. தேவனைத் தேடாமல் மனிதனை தேடினால் துன்பம் வரும்
2நாளா.16:12ஆம் வசனத்தில் “(ஆசா) தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்”. தேவனை விட்டு பிற பரிகாரிகளைத் தேட வேண்டாம். ரெபேக்காள் – கர்த்தரிடம் போய் தன் கர்ப்பத்தில் உள்ள பிள்ளைகளைப் பற்றி விசாரித்தாள். ஆதி.25:21-23 “…இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார்.” குடும்பத்தில் உள்ள எந்த பிரச்சனைக்கும் தேவனிடமே ஆலோசனை கேட்க வேண்டும்.
4. ஒரு தனிமனிதன் சபையில் தவறு செய்யும்போது முழு சபைக்கும் துன்பம் வரும்
1கொரி.12:26 வசனத்தில் “ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும்”. யோசுவா 7:1 வசனத்தில், “இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள். எப்படியெனில், யூதா கோத்திரத்து… கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது” ஆயி பட்டணத்தில் இஸ்ரவேலருக்கு தோல்வி ஏற்பட்டது. நாம் பாவம் செய்தால் நம் குடும்பம், நமது சபை, நம் மூலம் பெரிய பாதிப்பையும், நஷ்டத்தையும், துன்பத்தையும் அடையும்.
5. ஜெபமும் ஸ்தோத்திரமும் குறையும்போது சத்துருவினால் துன்பம் வரும்
லூக்கா 18:7 “…தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?” அவர்களுக்கு நியாயம் செய்வார். துன்பப்படும்போது இரவும் பகலும் தேவனை நோக்கி கூப்பிட்டால் தேவனிடத்திலிருந்து ஒத்தாசை வரும். மேலும் லூக்கா 21:35,36 வசனங்களில் பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் வரும் கண்ணிக்கு தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவானாக எண்ணப்படுவதற்கு எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்கிறார். கடைசி நாட்களில் வரும் கொடிய துன்பத்துக்கு நாமும், சபையும் தப்ப வேண்டுமானால் எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருக்க வேண்டும்.
6. தேவன் அவருடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும் பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்
எபி.12:10,11 வசனங்களில் எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். நாம் தேவனுடைய சிட்சையை அற்பமாக எண்ணக் கூடாது. சிட்சை தண்டனையாக மாறி, ஆக்கினையாக மாறும். சிட்சையை தேவன் தான் நேசிக்கிறவர்களுக்கு கொடுக்கிறார். தேவனால் நாம் சிட்சிக்கப்படும்போது இந்த துன்பம் ஏன்? எதற்காக? எந்த நோக்கத்துடன் தேவன் என் வாழ்வில் அனுமதித்தார் என்று உணர்ந்து பார்க்க வேண்டும். மனம் திரும்ப வேண்டும். இருதய கடினத்துக்கு இடம் கொடுக்கக்கூடாது.
7. ஊழியத்தினிமித்தம் உபத்திரவம், துன்பம் வரும்
எப்பாப்பீராத்துவுக்கு வியாதிப்பட்டு மரணத்திற்கு சமீபமாயிருந்தான். தேவன் அவனுக்கு இரங்கி குணமாக்கினார். அதிகமாக பிரயாசப்படுவதால் ஜெபம், கண் விழிப்பு, உபவாசம் மூலம் சரீரம் பெலவீனப்பட்டு வியாதி வரும். நமக்கு ஓய்வு (சுநளவ) வேண்டும். இது நாமே நிவிர்த்தி செய்ய வேண்டிய ஒரு காரியம் வியாதி பாவத்தினால் வந்தது அல்ல. ஒருவேளை ஆகாரக் குறைவினால்கூட வறுமையின் நிமித்தம் ஊழியப் பாதையில் வியாதியினால் பாதிக்கப்படலாம். கர்த்தரிடம் கிருபைக்காக மன்றாட வேண்டும்.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் அவிசுவாசம், தேவன்மேல் நம்பிக்கையில்லாத காரணத்தாலும் துன்பம் வரும். ஆகாப் அரசனின் பாவம் தேவனை விட்டு பாகாலை சேவித்ததால் தேசமே வறட்சி, பஞ்சம். மழையின்மையால் கஷ்டப்பட்டது. தன் தவறை சரிசெய்து தேவனிடம் திரும்ப மனமற்றவனாய் எலியாவின் தலையை வாங்கத் திட்டமிடுகிறான். உன் வாழ்க்கையின் தவறை சரி பண்ணினால் பாதிப்பிலிருந்து விடுதலை பெறலாம். அதற்கு பதில் ஊழியக்காரன்மேல் கோபப்பட்டு சாபத்துக்குள்ளாகாதே! யோசேப்பின் வாழ்க்கையில் கூட சகோதரர்களின் பொறுமையில் ஏற்பட்ட துன்பம் பெரியது. எகிப்திற்கு அடிமையாக விற்றனர். பின்னர் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அவன் பிராணன் ஒடுக்கப்பட்டாலும், யோசேப்பு கர்த்தரை விட்டுவிட வில்லை. துன்பங்கள் அவனை பூரண மனிதனாக மாற்றியது. பொன்னாக மாறினான். தானியேல் சிங்க கெபியில் போடப்பட்டான். துன்பத்தின் மத்தியிலும் தேவனை இடைவிடாமல் ஆராதித்ததால் தேவ நாமம் தானியேல் மூலம் மகிமைப்பட்டது. சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ வாழ்க்கையிலும் அவர்கள் விசுவாசத்துக்காக தைரியமாக போராடியதால் ஏழு மடங்கு அக்கினியில் போடப்பட்டனர். ஆனால் தேவன் அவர்களை காக்க அக்கினி நெருப்பினிலே இறங்கி வந்து அவர்களை விடுவித்தது மட்டுமல்லாது தேசம் முழுவதும் கர்த்தரே தேவன் என்று அறியும்படி செய்து மகிமைப்பட்டார். ஆகவே தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கும் துன்பங்கள் மூலம் நாம் தேவனை மகிமைப்படுத்தி பரிசுத்தம் அடைந்து பரலோகம் செல்ல ஆயத்தமாவோம்! அல்லேலூயா!




