சில ஆண்டுகளுக்கு முன்பாக, ஒருநாள் இரவிலே, என் அலுவலகத்திலிருந்து மிகுந்த களைப்போடு வந்தேன். அப்பொழுது என்னுடைய மூத்த மகள் தன்னுடைய பாடங்களைப் படித்துக்கொண்டிருந்தாள். அவள் அப்போது “நான்காம் வகுப்பில்” இருந்தாள். அவள் இயல்பாகவே ஒரு பெரிய சிந்தனையாளர். எப்பொழுதும் புதிய காரியங்களைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருப்பாள்.
நான் அவளிடம் தண்ணீர் கொண்டுவரக் கூறினேன். ஆனால் அவள் காதுகளில் விழவில்லை. அவளோ சிந்தனையில் மூழ்கி இருந்தாள். நான் வேகமாக அவளை “மாட்டு மூள்ஸ்” கூப்பிடுவது கேட்கவில்லையா? எனக் கேட்டேன்.
அதற்குள் என்னுடைய “4 வயது” இளைய மகள், படித்துக்கொண்டிருந்தவள் வேகமாக வந்து “அப்பா? எனக்கு என்ன புதுப்பெயர் கொடுக்கப் போறீங்க?”, “அவளுக்கு மட்டும் புதுசா பெயர் கொடுக்கிறீங்க?” எனக் கேட்டாள். நான் நிலமையை சுதாரித்துக்கொண்டு “உன்னுடைய புதுப்பெயர் காட்டு மூள்ஸ்” என்றுக் கூறினேன். அவளும் சந்தோசமாக சென்று விட்டாள்.
அடுத்த நாள் இரவு நான் வீட்டிற்கு வந்து என்னுடைய மூத்த மகளை கூப்பிட்டேன். அதற்குள் என்னுடைய இளைய மகள் ஓடி வந்து “மாட்டு மூள்ஸ் தூங்கிவிட்டது, காட்டு மூள்ஸ் வந்திருக்கிறது” என்றாள். 4 வயது மகளுக்கோ புதுப்பெயரில் மிக்க மகிழ்ச்சி. எனக்கோ மிகுந்த வருத்தம். ஏனெனில் அவர்களின் இயற்பெயர்கள், எங்கள் பெற்றோர்களால், பரிசுத்தவான்களின் பெயர்களை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டவை. அந்தப் பெயர்கள் தான் பெருமைக்குரியவை. ஆனால் “4 வயது” மகளுக்கு அது புரியவில்லை.
நம்முடைய ஆண்டவரும், “அவருடைய நாமத்தையே நமக்கு சூட்டியிருக்கிறார். தேவனுடைய பிள்ளைகள் என்ற அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். பரிசுத்தவான்களாகும் பாக்கியத்தையும் கொடுத்திருக்கிறார்.
நாமோ நமது ராஜ மேன்மைகளை மறந்து உலகம் கொடுக்கும் “பட்டங்களை” பெரிதும் விரும்புகிறோம். அந்த அழிந்துபோகும் பட்டங்களால் நம்மை அழைத்துக்கொள்வதை மேன்மையாகவும் எண்ணுகிறோம். “சிலர் காசு கொடுத்தாவது பட்டத்தைப் போட்டுக்கிட்டு, சமுதாயத்தில் மதிப்பை வாங்க அலைவதையும்” பார்க்கிறோம்.
“தேவப் பிள்ளைகள்” என்ற மேன்மை ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும், செல்வந்தர்களுக்கும் பெரும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் கிடைக்காத மேன்மையல்லவா… உலகத் தோற்றம் முன்பதாகவே தெரிந்துகொண்ட தயவல்லவா.
தேவப் பிள்ளைகள் என்று நம்மை அழைப்பதில் பெருமை கொள்வோம். கர்த்தர் நம்மில் மகிழுவார். நாம் கேட்காத உலக ஆசீர்வாதங்களை, பட்டங்களை அவரே, அவர் நாமம் மகிமைப்படும்படி, நமக்குத் தந்து, நம்மை ஆசீர்வதிப்பார்.