கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
இந்தக் கடைசி காலத்தில் தேசத்தின் சட்டங்கள், சூழ்நிலைகள், கலாச்சாரம், பண்பாடு, கொள்கைகள் ஜனத்திற்கு ஜனம், தேசத்திற்கு தேசம் மாறுபடுகிறது. மக்கள் வேறுபட்ட சூழ்நிலையிலும், தேவ பக்தியில்லாமலும், பயங்கரவாதங்கள், தீவிரவாதிகளின் பின்னணியிலும் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனாலும் நாம் தேவனுடைய சபையைக் கட்ட வேண்டும். எருசலேம் இடிக்கப்பட்ட சூழ்நிலையிலும், தேவாலயத்தில் உள்ள பாத்திரங்கள் பாபிலோனுக்கு கொண்டுபோகப் பட்டது. கி.மு.536ஆம் ஆண்டு மீண்டும் எருசலேம் தேவாலயம் கட்டப்பட வேண்டும் என்று கோரேசு கட்டளையிட்டான். ஆலயம் கட்ட பல தடைகள் வந்தது. ஜனங்கள் இது தேவாலயம் கட்ட காலமல்ல என்று பேசினார்கள். கோரேசு ராஜாவின் அரச கட்டளை – எருசலேம் தேவாலயம் கட்டப்பட வேண்டும். தேவ சித்தமும், தேவ பிள்ளைகளின் விருப்பமும் ஆலயம் சீக்கிரம் கட்டப்பட வேண்டும் என்பதே.
தேவன் பெரியவர், மகிமையாக வெற்றிச் சிறந்தார். யோசுவா பிரதான ஆசாரியனும், இராஜா வம்சத்தானாகிய செருபாபேலும் சேர்ந்து தேவாலயத்தைக் கட்டினார்கள். சத்துரு தடைகளை எப்பொழுதும் கொண்டுவருவான். சூழ்நிலையை நாம் பார்க்கக்கூடாது. தேவ சித்தத்தை நிறைவேற்ற எதிர் வல்லமைகளுக்கு மத்தியில் கிரியை செய்வது மிகவும் அவசியம்.
ஜாண் பனியன் சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததால் 12 ஆண்டுகள் சிறையில் போட்டனர். அந்த 12 ஆண்டில் மோட்சப் பிரயாணம் எழுதினார். சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கக் கூடாது. இது காலமல்ல என்று அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது. சிறையில் தேவ மனிதனை அடைத்து வைத்தாலும் தேவன் அவர் மூலமாக ஒரு சிறந்த புஸ்தகத்தை எழுத வைத்து மகிமைப்பட்டார். வேதாகமத்திற்கு அடுத்தப்படியாக எல்லாராலும் விரும்பி “மோட்ச பிரயாணம்” வாசிக்கப்பட்டு வருகிறது.
எருசலேம் தேவாலயம் கி.மு.534ல் அஸ்திபாரம் போடப்பட்டும், தடை செய்யப்பட்டது. 14 ஆண்டுகள் கட்டப்படாமல் போனது. தேவன் ஆகாய் – சகரியா என்ற இரண்டு தீர்க்கதரிசிகளை எழுப்பினார். ஆகாய் தீர்க்கதரிசியைக்கொண்டு தேவன் பேசினார். ஆகாய் 1:4-7 வசனங்களில், “உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 2கொரி.6:2 வசனத்தில், “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” தேவனுடைய இரட்சிப்பை உடனே தாமதமில்லாமல் பெற்றுக்கொள்ள இதுவே காலம். நாம் வாழும் காலத்தைப் பற்றிய அறிவு நமக்குத் தேவை. காலத்தின் அருமையை அறிந்து வாழ வேண்டும். இந்த கிருபையின் காலம் எப்படிப்பட்டது? நாம் என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்து செயல்பட வேண்டும்.
முதலாவது – தேவனுடைய திருச்சபையைக் கட்ட இது காலமா? ஆம், இதுவே காலம் – கால தாமதம் கூடாது
ஆகாய் 2:4 வசனத்தில், “…செருபாபேலே, நீ திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; …யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன்” என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
ரோம சாம்ராஜ்யத்தில் 10 ரோம பேரரசர்களால் சபை மக்களும், பரிசுத்தவான்களும் துன்பப்படுத்தப்பட்டும், ரோமபுரிப் பேரரசில் உள்ள 12 கோடி பேர்களில் 6 கோடி மக்கள் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். விசுவாசிகள் இரத்த சாட்சிகளாக மரித்ததால் சபை கட்டப்பட்டது. இரத்த சாட்சிகளின் இரத்தமே திருச்சபையின் வித்து. நாம் நம்முடைய காலத்தில் திருச்சபையைக் கட்ட வேண்டும். இதுவே காலம். எழும்பி கர்த்தரின் வேலையைச் செய்வோம்.
இரண்டாவது – பரிசுத்தமாக வாழ இது காலமா? ஆம், இதுவே காலம்
ஆதி.32:24 வசனத்தில், “யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடினார். …அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான்.” ஏசா 400 பேருடன் எதிர்கொள்ள வருகிறான் என்றதும், நெருக்கத்தில் கர்த்தரை நோக்கி மன்றாடினான். யாக்கோபு தேவனை நோக்கி மன்றாடியபோது பாவங்களைச் சுட்டிக் காட்டினார். அறிக்கையிட்டான், புதிய பெயரைக் கொடுத்தார். யாப்போக்கு நதிக்கரையில் இரட்சிக்கப்பட்ட அனுபவத்துக்குள் வந்தான். ஆனாலும் தேவன் விரும்பும் இடத்திற்கு வரவில்லை. அதனால் தேவனால் ஆசீர்வதிக்க முடியவில்லை. பெத்தேல் போவது அவசியமாக இருந்தது.
ஆதி.35:1 வசனத்தில், “தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, …தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்.” தேவனோடு ஐக்கியம், பரிசுத்தவான்களுடன் ஐக்கியம், ஆலயத்தின் நன்மை அனுபவிக்க வேண்டும். ஆலயம் போக இது காலமல்ல என மக்கள் கூறலாம்.
பெத்தேலில் – சில காரியங்களை விடவேண்டியதிருக்கிறது. ஒப்புரவாகுதல் சரி செய்ய வேண்டிய காரியம் உண்டு. ஆதி.35:2 வசனத்தில், “…யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிய அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்.” தேவன் நம்மை சபையில் வைத்து உபதேசத்தால் சுத்திகரிக்கிறார். உலகத்திலிருந்து தேவன் பிரித்தெடுக்கிறார். ஆதி.35:4ல் யாக்கோபு “…அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்” நாமும் நம் ஒவ்வொரு பாவத்தையும் சிலுவையண்டையில் புதைக்கப்பட வேண்டும். தேவ வார்த்தைக்கு நடுங்குபவனையே தேவன் நோக்கிப் பார்ப்பார். ஆதி.35:9,10 வசனங்களில், “…தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து: இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார்” எல்லாம் புதிதாக்கப்பட்ட தூய வாழ்வு பெற்றான். இஸ்ரவேல் என்ற பெயருக்கேற்றபடி மாற்றப்பட்டான்.
மூன்றாவது – தேவ மொழியைக் கூற இது காலமா? ஆம், இதுவே காலம்
இன்றே இரட்சணிய காலம். யோனா 1:2 வசனத்தில், “நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.”
நினிவே அழகிய பட்டணம். அசீரிய இராஜாவின் தலைநகரம். 1,20,000 பேர் தேவனுக்கு விரோதமாக வாழ்ந்தனர். தேவன் நினிவே பட்டணத்துக்கு விரோதமாக பிரசங்கம் பண்ணு என்றார். இது காலமல்ல என எண்ணி யோனா கப்பலில் ஏறி கூலி கொடுத்து, 500 மைல் தூரம் வடகிழக்கில் இருந்தது. 3 நாள் பிரயாண தூரம் உள்ளது. நினிவே போக யோனாவுக்கு மனமில்லை. 1000 மைல் தூரம் மேற்கே உள்ள தமஸ்குவுக்குப் போனான். (ஸ்பெயின்) எதிர்புறமாக போனான். ஆனால் மீன் நினிவே கரையில் யோனாவை கக்கிய பின்பு யோனா மக்களுக்கு நினிவேயின் அழிவைக் குறித்துப் பிரசங்கித்தான். ஜனங்கள் இரட்டு உடுத்தி சாம்பலில் உட்கார்ந்து, தேவனிடம் மனந்திரும்பினார்கள்.
நான்காவது – பரிந்து பேச இது காலமா?
ஆம், இதுவே காலம். ஆதி.18:22 வசனத்தில், “ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.” லோத்துவுக்காக ஆபிரகாம் தேவனிடம் பரிந்துபேசி ஜெபித்தான். ஆண்டவருக்கு கோபம் வராதிருப்பதாக எனக் கூறி கெஞ்சி மன்றாடினான். சோதோம், கொமராவின் அழிவிலிருந்து தன் சகோதரன் மகன் குடும்பம் தப்ப வேண்டும் என்று பரிந்து பேசினான். நாமும் தேசத்துக்காக நாம் வாழும் பட்டணத்திற்காக, ஆத்துமாக்களின் இரட்சிப்புக்காக, குடும்பங்களுக்காக அழுது கெஞ்சி, தேவனிடம் பரிந்துபேசி ஜெபிக்க வேண்டிய காலம் இது. மௌனமாக இருக்க வேண்டிய காலமல்ல.
ஐந்தாவது – தேவனுக்காக கிரியை செய்ய வேண்டிய காலமா?
ஆம், இதுவே காலம். எஸ்தர் 4:14 வசனத்தில், “நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச் சொன்னான்.” சட்டம் இதே அரண்மனையிலிருந்து போடப்பட்டிருந்தும், தேவ சமூகத்தில் உபவாசித்து தாழ்த்தி ஜெபம் செய்ததால் ராஜா போட்ட சட்டம் மாற்றப்பட்டது. தேவன் யூதர்களுக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தார். எஸ்தரும், மொர்தெகாயும் தேவனுக்காக கிரியை செய்ததால், யூதர்கள் பெரிய அழிவிலிருந்து காக்கப்பட்டனர்.
ஆறாவது – சோதோமை விட வேண்டிய காலமா?
ஆம், இதுவே காலம். ஆதி.19:17 வசனத்தில், “அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார்.” சோதோமின் பாவம் கர்வம், சாங்கோபாங்கம், நிர்விசாரம். இதனால் தேவ கோபாக்கினைக்கு ஜனங்கள் ஆளானார்கள். தேவனுடைய தண்டனைக்கு நாம் தப்ப வேண்டுமானால் நிர்விசாரம், கர்வம், சாங்கோபாங்கம் போன்ற மாம்சத்தின் கிரியைகளை விட வேண்டும். பாவத்தை விட வேண்டிய காலம் இதுவே. கல்வாரி மலைக்கு நேராக ஓட வேண்டிய காலம் இதுவே.
ஏழாவது – தீவிரமாய் புறப்பட்டு செய்தியை பரப்ப வேண்டிய காலமா?
ஆம், இதுவே காலம். எஸ்தர் 7:3,4 வசனங்களில், எஸ்தர் அகாஸ்வேரு ராஜாவிடம் யூத ஜனங்களுக்காகவும், தன் ஜீவனுக்காகவும் மன்றாடி ஜெயம் பெற்றார். பின்பு எஸ்தர் 8:9 வசனத்தின்படி யூத பாஷையிலேயே விடுதலையின் செய்தி அறிவிக்கப்பட்டது. அந்த நல்ல செய்தியை தீவிரமாய் புறப்பட்டு 127 நாடுகளில் உள்ள யூதர்களுக்கும் அறிவித்தனர். எல்லா மொழிகளிலும் “யூதர்கள் அழிவிலிருந்து காக்கப்பட்டனர்” என்ற விடுதலையின் நற்செய்தி தீவிரமாய் அனுப்பப்பட்டது. தேவனுடைய இராஜ்ஜியத்தின் சுவிசேஷம் தீவிரமாய் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும். பின்பு தான் தேவன் வருவார். தேவ செய்தியை பரப்ப வேண்டிய காலம் இதுவே.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! இயேசுவின் வருகையின் அடையாளங்கள் நிறைவேறி வருகின்ற கடைசி காலத்தில் வாழ்கிறோம். தேவனுடைய சபையும் தேவனுடைய இராஜ்ஜியமும் கட்டப்பட நாம் பிரயாசப்பட வேண்டும். ஒவ்வொரு பட்டணத்திலும், நகரத்திலும், கிராமங்களிலும் இயேசுவின் நற்செய்தியை தீவிரமாய் எடுத்து உரைப்போம்! நாம் பரிசுத்தமாய் வாழ்ந்து, பாவிகளை தேவன் அண்டை சேர்ப்போம்! தேவனுக்காக எழும்பி பிரகாசியுங்கள்! இனி காலம் செல்லாது, நம் நாட்கள் எண்ணும் அறிவைப் பெற்றுக்கொண்டு ஜெபத்தில் விழித்திருப்போம்! இதுவே அனுக்கிரக காலம் – மனந்திரும்பி கனிகொடுப்போம்! மாரநாதா!




