இரண்டாம் உலகப்போர் காலங்களில், ஜெர்மானியர்கள், யூதர்களை சிறைக் கைதிகளாகப் பிடித்து பல கொடுமைகளைச் செய்தார்கள் என்பது நாமறிந்த வரலாறு. அப்படியே யூதக் கைதிகளைக்கொண்டு பல பரிசோதனைகளையும் செய்தார்கள்.
ஒரு பரிசோதனையில், கைதிகளிடம் உங்கள் உடம்பிலுள்ள இரத்தத்தை படிப்படியாக வெளியேற்றி நீங்கள் துடி துடித்து சாவதை ரசிக்கப்போகிறோம் என்று சொல்லி, சாம்பிளுக்கு இரண்டு கைதிகளைப் படுக்கையில் படுக்க வைத்து, ரத்தத்தை வெளியேற்ற ஆரம்பித்தார்கள். கைதிகளின் உடம்பிலிருந்து வெளியேறிய ரத்தம் பக்கத்திலிருந்த பாட்டிலில் “டப்” “டப்” என்ற ஒலியுடன் விழ ஆரம்பித்தது.
சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்த இரண்டு கைதிகளின் கண்களையும் கருப்புத் துணியால் கட்டிவிட்டனர். பின்பு, ஒரு கைதியின் உடம்பிலிருந்து ரத்தம் வெளியேறு வதை நிறுத்தி விட்டார்கள். ஆனால், பாட்டிலில் “டப்” “டப்” என்று விழும் ஓசை கேட்கும்படி மாற்று ஏற்பாடு செய்தார்கள். இந்த “டப்” “டப்” சத்தத்தைக் கேட்ட கைதி ஐயோ! இன்னும் கொஞ்ச நேரத்தில் ரத்தம் வற்றி சாகப்போகிறேனே! என்று கதறினான், கத்தினான்.
பரிசோதனையின் முடிவில், உண்மையாக இரத்தம் வெளியேற்றப்பட்ட கைதியும், தன் உடம்பிலிருந்து ரத்தம் வெளியேறுகிறது என்ற பிரமையில் இருந்த கைதியும் இறந்துபோனார்கள். இரண்டாம் கைதியின் மரணத்திற்கு அவனது சிந்த னையும், சிந்தனை செய்ய அவன் தேர்ந்தெடுத்த வார்த்தைகளும்தான் காரணம்.
எனவே சிந்தனைகள் மனித வாழ்வில் ஜீவனையும் மரணத்தையும் கொண்டுவர வல்லமை உள்ளது. ஆம்! நேர்மறையான சிந்தனைகள் மனித வாழ்வை வளப்படுத்துகிறது என்றும் எதிர்மறையான சிந்தனைகள் மனித வாழ்வை கெடுத்துப் போடுகிறதென்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்.
“பறவைகள் நம்முடைய தலைக்கு மேலே பறப்பதைத் தடுக்க முடியாது. ஆனால், அவைகள் நம்முடைய தலையின்மேல் கூடு கட்டுவதை தடுக்க முடியும். அது போலவே, சாத்தான் தவறான சிந்தனைகளை நம்மிடம் விதைக்க முயற்சிக்கலாம். ஆனால், அதை ஏற்றுக்கொள்வதும், தள்ளிவிடுவதும் நம்முடைய விருப்பம் சார்ந்த விஷயமே” என்று மார்ட்டின் லூதரும் சொல்கிறார்.
நண்பர்களே! மனமாகிய தோட்டத்திலே, படர்ந்து கிடக்கும் சிந்தனை மொட்டுக் களின் கூட்டத்திலே, நல்வாசனை தரும் மொட்டுக்களை தேடிக் கண்டுபிடித்து மலரச் செய்தால், அந்த மலர்கள் தரும் வாசனையில் வாழ்க்கையும் வசந்தமாகுமே!
இதுபற்றி வேதாகமத்திடம் opinion கேட்டால், “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்…” (நீதிமொழிகள் 23:7) என்று ஆமோதிக்கிறது!