மனுஷன் முகத்தைப் பார்க்கிறான்

Written by Dr Ajantha Immanuel

December 5, 2022

ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் இருந்தார். அவரது வாய்ப்பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயின் காரணமாக அவரது முகத்தோற்றம் மிகவும் விகாரமாக இருந்தது. அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அந்த மகளுக்கு ஐந்து குழந்தைகள். அவளது கணவர் முதுகுதண்டில் ஏற்பட்ட எலும்பு முறிவின் காரணமாக எந்த வேலையும் செய்ய இயலாதவராய் படுக்கையில் இருந்தார். அதனால் அந்த முதியவர் தன் மகளுக்காக வாழ வேண்டிய கட்டாயத்திலிருந்தார்.

அந்த முதியவர் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பால்டிமோரிலுள்ள (க்ஷயடவiஅடிசந) ஹாப்கின்ஸ் (ழடியீமiளே) மருத்துவமனைக்குச் சென்றார். சிகிச்சை முடிந்தபோது சாயங்கால வேளையாயிற்று. அவர் வசிக்கும் இடமோ வெகு தூரத்திலிருந்தது. எனவே அவர் இரவு தங்குவதற்காக பல இடங்களில் அலைந்து திரிந்தார். ஆனால் அவரது முகத்தோற்றத்தைப் பார்த்த ஒருவரும் அவருக்கு இரவு தங்க இடம் அளிக்க முன்வரவில்லை. கடைசியாக மருத்துவமனைக்கு எதிராக இருந்த ஒரு வீட்டிற்குச் சென்றார். அந்த வீட்டின் உரிமையாளர் அரைகுறை மனதுடன் அவரை இரவு தங்க அனுமதித்தார். அந்த முதியவர் வீட்டு உரிமை யாளரிடம் “எனக்கு ஒரு நாற்காலி மட்டும் போதும், நான் அதில் படுத்து உறங்கிவிட்டு அதிகாலையில் ஊருக்கு கிளம்பிவிடுகிறேன்” என்றார். ஆனால் அவர் மீது இரக்கப்பட்ட அந்த வீட்டின் சொந்தக்காரர் தன் வீட்டில் குழந்தைகள் படுக்கும் அறையின் ஒரு மூலையில் ஒரு படுக்கையை விரித்துக் கொடுத்தார். அந்த வீட்டின் குழந்தைகள் அவரை மிகவும் அன்பாக நடத்தினார்கள்.

விடியற்காலையில் முதியவர் தனது ஊருக்கு கிளம்பினார். வழியனுப்ப வந்த அந்த வீட்டு உரிமையாளரிடம், “உங்கள் குழந்தைகள் என்னை மிகவும் அன்பாக வைத்துக்கொண்டார்கள். தயவுசெய்து ஒரு அன்பான வேண்டுகோள், அடுத்த முறை சிகிச்சைக்கு வரும்போது இதுபோல் இரவு தங்க இடம் அளிப்பீர்களா?” என வினவினார். அந்த வீட்டின் உரிமையாளரும் அதற்கு சம்மதித்தார். அடுத்த முறை சிகிச்சைக்கு வரும்போது அந்த முதியவர் விலையுயர்ந்த ஒரு பெரிய மீனையும், தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையும் அன்பளிப்பாகக் கொடுத்தார். இவ்வாறாக அவர்களது ஐக்கியம் வளர்ந்தது.

ஒருநாள் அந்த வீட்டின் உரிமையாளர் அவரது நண்பரின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு அழுக்கான ஒரு பூந்தொட்டியில் ஒரு அழகிய மலர் மலர்ந்திருப் பதைக் கண்டார். உடனே அவருக்கு ஒருவரையும் அவர்களுடைய தோற்றத்தைப் பார்த்து எடைபோடக்கூடாது என்ற உண்மை புலப்பட்டது. நல்ல குணமுடைய அந்த வயதான முதியவரை அவருடைய தோற்றத்தைப் பார்த்து வீட்டில் ஏற்கத் தயங்கினோமே என்று எண்ணி வெட்கப்பட்டார்.

முட்களுக்குள்ளேயே லீலிபுஷ்பம் மலர்கிறது. சேற்றுக்குள்ளே செந்தாமரை மலர்கிறது. அழுக்கான பூந்தொட்டியிலேயே அழகிய மலர் மலர்ந்திருந்தது. அதுபோல ஒருவரையும் அவர்களது புறத்தோற்றத்தைப் பார்த்து எடைபோடக் கூடாது.

“மனுஷன் முகத்தைப் பார்க்கிறான், கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” (1 சாமு.16:7)



Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This