கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
பிரியமானவர்களே! இந்த உலகத்தில் அந்நியர்களும், பரதேசிகளுமாய் இருக்கிற நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர் செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி வாழ வேண்டும். “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்” (கலா.2:20) என்று பவுல் குறிப்பிடுகிறார். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட வாழ்க்கை. சிலுவையைப் பற்றின உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாக காணப்படும்.
இயேசுவை சிலுவையில் அறைய காரணமானவர்கள் நான்கு வகுப்பினர்:
1) மார்க்க சம்பந்தமானவர்கள், 2) போர் சேவகர்கள் (அரசியல் உலகம்), 3) அறியாமையின் உலகம் (போகிறவர்களும், வருகிறவர்களும்), 4) விசுவாசிகள் (உள்ளான ஆவிக்குரிய கருத்தை அறியாமல் சிலுவைக்குப் பகைஞராக வாழ்பவர்கள்).
சிலுவை முக்கியமானது. இரட்சிக்கப்படுகிற நமக்கு அது தேவ பெலனாக காணப்படுகிறது. ரோமர் 1:16ஆம் வசனத்தில், “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது”
உலகத்தை இரட்சிக்க தேவன் தெரிந்துகொண்ட பாதை இது. பயங்கரமான பாதை, இயேசுவின் சிலுவை மரணம் மிகுந்த வேதனை, வருத்தம், பாடு நிறைந்த மரணம். மேலும் அணுஅணுவாக சாகிற மரணம் இது.
1) இரட்சிக்கும்படி சிலுவையின் மூலம் தேவ வல்லமை வெளிப்பட்டது.
2) ரோமர் 5:8ஆம் வசனத்தில், “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” சிலுவையில் அன்பு வெளிப்பட்டது. நாம் பாவிகளாக இருக்கும்போது, (துரோகிகளாக) இயேசு நமக்காக மரித்தார்.
3) ஏசா.53:4ஆம் வசனத்தில் “மெய்யாகவே, அவர் நம் துக்கங்களைச் சுமந்தார்” பாடுகள், துக்கங்களைப் போக்குமிடம் சிலுவை.
4) ஏசாயா 53:5,6ஆம் வசனங்களில், “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்”
நம்முடைய எல்லா அக்கிரமங்களையும், சிலுவையில் இயேசு சுமந்து தீர்த்தார். பாவத்தின் தண்டனையை சிலுவையில் சுமந்தார் (சிலுவையிலேயே தான் நம்முடைய அக்கிரமங்களை சுமந்தார்). 1பேதுரு 2:24ஆம் வசனத்தில், “நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர் தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்” சிலுவையின் மூலமாக தேவனுக்கும், நமக்கும் புதிய உறவு ஏற்படுகிறது. சிலுவையில் தான் பிதாவின் கரத்துடன் பாவிகளின் கரத்தை இணைத்தார். சமரசம் பண்ணினார். மனிதனை தேவனோடு ஒப்புரவாக்கின இடம் சிலுவையே.
5) 2கொரி.5:21ஆம் வசனத்தில், “நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்” பாவம் செய்யாத இயேசு, நம்முடையப் பாவங்களுக்காக, எல்லா பாவங்களையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு சிலுவையில் மரித்தார்.
சிலுவை எப்படிப்பட்ட இடத்தை வகிக்கிறது?
1) சிலுவை தேவனால் அங்கீகரிக்கப்பட்ட இடம்:
பாவ மன்னிப்பை நாம் பெற்றுக்கொள்ளுகிற இடம் சிலுவையே.
2) பாவ மன்னிப்பாகிய மீட்பு கிடைத்த இடம்:
1யோவான் 2:1,2ஆம் வசனங்களில், “…நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிறவராயிருக்கிறார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்”
3) சிலுவை வெற்றியின் இடம்:
கொலோ.2:14,15ஆம் வசனங்களில், “நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார்” சிலுவை மரணத்தினால் பாவத்தின்மேல் வெற்றி, சாபங்கள், மரண தண்டனையிலிருந்து வெற்றி கிடைத்த இடம்.
4) மனிதனை தேவ குடும்பத்தின் அங்கமாக ஏற்ற இடம்:
எபி.2:11,12ஆம் வசனங்களில், “…பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.” தேவ பிள்ளையாகும்படி அதிகாரம் தேவன் தருகிறார். யோவான் 1:12ஆம் வசனத்தில், தேவனுடைய நாமத்தை விசுவாசிக்கிறவர்கள் அவருடைய பிள்ளைகளாக அங்கீகாரம் பெறுகிறார்கள்.
5) பிரிவினைகள் உடைக்கப்பட்ட இடம்:
எபே.2:13,14 “முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்தார்…” என்று பவுல் கூறுகிறார். சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தினாலே சமீபமாக்கினார். இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனோடு ஒப்புரவாக்கினார்.
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! சிலுவை மரணத்தினாலே பாவங்களிலிருந்தும், சாபங்களிலிருந்தும் விடுதலையாக்கப்பட்டோம். சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் தேவனோடு சமாதானமாகும் சிலாக்கியம் பெற்றோம். இயேசுவின் இரத்தத்தினால் தேவனுக்கு விரோதமாய் வாழ்ந்த நாம் அவருடைய பிள்ளையாகும் சிலாக்கியம் பெற்றோம். மேலும் சிலவை மரணத்தினால் இயேசுவின் ஒரே சரீரமாக தேவனுக்கு முன்பாக ஒப்புரவாக்கினார். அல்லேலூயா!!




