அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதிய நிருபத்தில் அந்தச் சபையை இவ்விதமாக வாழ்த்துகிறார்.
அப்படியே நீங்கள் யாதொருவரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். 1கொரி1:7
வரங்களில் குறைவில்லாதவர்களாய் வருகைக்கு காத்திருந்தார்கள். அந்தக் கடைசிக் காலத்தில் வரங்கள் எந்த அளவுக்கு அவசியம், வரங்களிலே நாம் விழிப்புள்ளவர்களாய், உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டிய அவசியத்தையும் பார்ப்போம். ஆவியின் கனி, வரங்களோடு இணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தை பார்ப்போம்.
ஆவியின் வரங்கள்
ஆவியின் வரங்கள் பொதுவான பிரயோஜனத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது சபையில் ஒவ்வொருவரின் பிரயோஜனத்திற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆவியின் வரங்கள் பொதுவாக மற்றவர்களின் உபயோகத்திற்காக பயன்பட்டாலும் சில வரங்கள் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வின் பிரயோஜனத்திற்காகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆவியின் வரங்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட விதத்தில் பரிசுத்த ஆவியானவர் அளிக்கும் ஈவு. இந்தக் கடைசி நாட்களில் பொல்லாங்கன் தேவப்பிள்ளைகள் மேல் தாக்க முயற்சிக்கும் போது, கர்த்தர் ஆவியின் வரங்களைப் பயன்படுத்தி, சபையை வசனத்தைக் கேட்கும் மற்ற மனிதர்களை விடுவிக்கிறார். எனவே, நாம் ஆவிக்குரிய வாழ்வில் வளரவும், மற்றவர்களை அவ்விதமாய் ஊக்குவிக்கவும் வரங்கள் அவசியம்.
அந்நிய பாஷையின் வரம்
அந்நிய பாஷையின் வரம் மிகவும் பயனுள்ள இனிமையான வரம். அது தேவனிடத்தில் பேச பயன்படும் வரம். தேவனோடு ரகசியங்களைப் பேசப் பயன்படும் வரம். அந்நிய பாஷையின் வரம் பேசுகிறவனுக்கு பக்தி விருத்தி உண்டாக்க பயன்படும் வரம். எனவே தான், பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் ஒவ்வொருவருக்கும், இந்த வரத்தை அடிப்படை வரமாக கர்த்தர் தருகிறார். இது தனிப்பட்ட ஜெப வாழ்க்கைக்கு அவசியமான தேவையான வரம். இப்படி இது தேவையான வரமாயிருப்பதால் விசுவாசிகள் யாவரும் இந்த வரத்தைக் கேட்டு பெற்றுக் கொள்வது நல்லது. வரங்கள் அவசியம். அது தேவனோடு தொடர்பு கொள்ள, அவர் ஆலோசனையைப் பெற, அவரது வல்லமையைப் பெற உதவுகிறது. அந்நிய பாக்ஷையின் வரம் தனிப்பட்ட ஆவிக்குரிய வாழ்வின் பக்தி விருத்திக்கு பயன்பட்டாலும், மற்ற வரங்கள் மற்றவர்களுக்கு பக்தி விருத்தி உண்டாக்க பயன்படுகிறது.
வரங்களில் உண்மை
வரங்கள் உண்மையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் பணத்துக்காகவோ, புகழ்ச்சிக்காகவோ பயன்படுத்தக்கூடாது. கேயாசியைக் குறித்து பார்க்கிறோம். நாகமான் குணமானவுடன், அவன் பின்னாலே சென்று, பணத்தைப் பெறுகிறான். எலிசா அதைக் கண்டு பிடித்து விடுகிறான். முடிவிலே, நாகமானை பிடித்திருந்த குக்ஷ்டரோகம், கேயாசியைப் பிடித்தது. எலிசாவின் ஸ்தானத்தில் இருக்க வேண்டிய கேயாசி பணத்திற்கு ஆசைப்பட்டு தனது ஸ்தானத்தை இழந்து போகிறான். நமது இலக்கு இயேசு கிறிஸ்து வருகையில் பங்கடைய வேண்டும் என்பதே. ஆவியின் வரங்களை சுயலாபத்திற்காக பயன்படுத்தி, வருகையில் பங்கடையும் பாக்கியத்தை இழந்து போக வேண்டாம். இயேசு கிறிஸ்து சீக்கிரமாய் வருகிறார்.
வரங்களைப் பயன்படுத்த வேண்டும்
தாலந்துகளை பற்றிய உவமையை நற்செய்தி நூல்களில் வாசிக்கிறோம். கர்த்தர் ஒருவனுக்கு 5 தாலந்துகளும், மற்றொருவனுக்கு 2 தாலந்துகளும், மற்றொருவனுக்கு 1 தாலந்தும் தருகிறார். அந்த தாலந்துகளைப் பயன்படுத்தி மேலும் தாலந்துகளை சம்பாதிக்கின்றனர். கர்த்தர் மேலும் தாலந்துகளை சம்பாதித்தவர்களைப் பாராட்டி நல்லது; உண்மையும், உத்தமுமான ஊழியக்காரனே எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்று கூறுகிறார். ஆனால் தாலந்துகளைப் பயன்படுத்தாத ஊழியக்காரனை தண்டிக்கிறார். வரங்களைப் பயன்படுத்தாத ஊழியக்காரன் பயந்து அதைப் பயன்படுத்தவில்லை என்று கூறுகிறான். பயம் வேதனையுள்ளது. நாம் வரங்களைப் பெற்றிருந்தால் பயன்படுத்த வேண்டும். இதுவரை வரங்களை, தாலந்துகளை பயன்படுத்தாமல் இருந்தால் பயன்படுத்துவோம். கர்த்தருக்கு உண்மையாக ஜீவிப்போம். கர்த்தரின் வருகையில் பங்கடைவோம். இயேசு சீக்கிரமாய் வருகிறார்.
தேவ அன்பைத் தரித்துக் கொள்வோம்
அன்பை நாடுங்கள் ஞான வரங்களையும் விரும்புங்கள்; விசேக்ஷமாய் தீர்க்கதரிசன் வரத்தை விரும்புகள். கொரி 14:1
தீர்க்கதரிசன் வரங்களைப் பயன்படுத்தி சகல அறிவை உடையவனாயிருந்தாலும், குணமாக்கும் வரங்களைப் பயன்படுத்தி அநேகரைக் குணமாக்கினாலும் அன்பில்லையானால், அதில் பயனில்லை. ஊழியத்தை வல்லமையாய் செய்தும், குடும்பத்தை நேசிக்கவில்லை யென்றால் பலனில்லை. மற்ற ஊழியர்களை நேசிக்கவில்லை யென்றால் பலனில்லை. மற்ற ஊழியர்களை நேசிக்கவில்லை யென்றால் பயனில்லை. அன்பு கூறாமல் வரங்களைப் பயன்படுத்தி போலியான வாழ்க்கை வாழ்ந்தால், வருகையில் பங்கடைய உதவுவார். அன்பில்லாதவன் தேவனை அறியான். சகோதரனை நேசிக்காதவன் வருகையில் எப்படிப் பங்கடைய முடியும்? எச்சரிக்கையாய் இருப்போம். தேவ அன்பு நம்மை நிரப்ப கர்த்தரிடத்தில் விண்ணபிப்போம்.
ஆவியின் கனி
ஆவியின் வரங்களா, கனியா என்று பல முறை கேட்பதுண்டு. வரங்கள் மட்டும் இருப்பது பயனற்றது. எனவே ஆவியின் வரங்களோடு கனி தரும் வாழ்விலே வளர ஜெபிப்போம். ஆவியின் கனி பரலோகம் செல்ல உதவி செய்யும். ஆவியின் வரங்கள் மற்றவர்களை பக்தி விருத்தியடையச் செய்யும். ஆகவே, ஆவியின் வரங்களை, ஆவியின் கனியோடு இணைத்துப் பயன்படுத்துவோம். இயேசு சீக்கரமாய் வருகிறார். ஆவியின் வரங்களை ஆவியின் கனிவோடு இணைத்துப் பயன்படுத்துவோம். இயேசு சீக்கிரமாய் வருகிறார். ஆமென்!