கிறிஸ் துவுக்குள் பிரியமானவர்களே!
பிரியமானவர்களே, ஒரு மனிதன் தன்மேல் முழுமையாக நம்பிக்கை வைத்து தன்னையே விசுவாசிப்பதை தேவன் விரும்புகிறார். விசுவாசம் ஒரு தனி மனிதனிடம் உருவானபின்பு என்ன நடக்கிறது? பொன்னைவிட விலையேறப் பெற்ற அந்த விசுவாசம் சோதிக்கப்படுகிறது. நம் விசுவாசம் சோதிக்கப்படும்போது நாம் தேவன்மேல் நம்பிக்கை வைக்கிறோம். விசுவாசம் நம்மை புதிய மனிதனாக மாற்றுகிறது. தேவ வார்த்தைகளை விசுவாசிக்கும்போது விசேஷமான அறிவு கிடைக்கிறது. விசுவாசம் தேவனுக்குப் பிரியமான வாழ்க்கை வாழ நம்மை உந்தித் தள்ளுகிறது. கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறது. விசுவாசிக்கும்போது தேவ எச்சரிப்பு கிடைக்கிறது. பேழையாகிய சபை கட்டப்பட உதவுகிறது. விசுவாசம் மனிதனை தேவனுக்குக் கீழ்ப்படியச் செய்கிறது. விசுவாசத்தினால் ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான் (எபி.11:8). விசுவாசிக்கும்போது தேவனால் நடத்தப்படுகிறது.
விசுவாசம் உலகத்தில் பரதேசியைப் போல வாழச் செய்கிறது. விசுவாசிக்கும் போது உலகம் நமக்கு சதமல்ல என்ற எண்ணம் வரும். உலக சிந்தை நம்மை ஆட்கொள்ளாது; என்னத்தை உண்போம் என்னத்தை உடுப்போம் என்ற கவலை இராது. விசுவாசிக்கிறவர்கள் தேவ ராஜ்ஜியத்தைக் கட்டுவதிலேயே கவனம் செலுத்துவார்கள். தேவபிள்ளை ஆடம்பர வாழ்வு வாழ முடியாது. விசுவாசம் உம்மை உலகத்தில் கடந்துபோகும் பயணிகளைப் போல மாற்றுகிறது.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம். தேவன் ஒருவர் உண்டென்றும் அவர் தம்மிடத்தில் சேருகிறவர்களுக்குப் பலன் அளிக்கிற வரென்றும் விசுவாசிக்க வேண்டும் (எபி.11:6). தேவன் நம்மைப் படைத்தவர்; அவரே நம்மில் விசுவாசத்தைத் தொடக்கினவர்; அவரே இந்த விசுவாச ஓட்டத்தை முடிக்க வல்லவர். வேதம் தேவனு டைய வார்த்தை என்று விசுவாசிக்க வேண்டும்(எபி.11:3). அவிசுவாசம் தேவனுடைய கிரியைகள், அற்புதங்கள் நடைபெறத் தடையாக இருக்கிறது (மத்.13:58). கிரியை யில்லாத விசுவாசம் செத்தது என்று யாக்கோபு 2:17ல் பார்க்கிறோம். விசுவாசம் நற்கிரியைகள் மூலம் வெளிப்பட வேண்டும்.
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில்…
சோதனை ஆவியிலே ஆத்துமாவிலே சரீரத்திலே வருகிறது.
இயேசுவுக்கு சரீரத்தால்(1) சோதனை வந்தது. இயேசு சோதனையை ஜெயித்தார். இயேசு வனாந்தரத்தில் பிசாசினால் சோதிக்கப்படுகையில், இயேசுவுக்குப் பசி வந்தபோது சாத்தான் அந்த நேரத்தை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தான். ஆனால் இயேசு தேவனுடைய வார்த்தையைக் கூறி அவனை ஜெயித்தார் (மத்.4:4). 5ரூ வட்டிக்குக் கடன் வாங்கலாம் என்று பிசாசு சோதிப்பான். ஆனால் வட்டியில்லாமல் கொடுக்க ஒருவர் மேலே இருக்கிறார் என்று தேவனை விசுவாசிக்க வேண்டும். தேவன் கொடுத்த வாக்கை விசுவாசிக்காமல் குறுக்கு வழியை நாடிச்செல்வது சரியல்ல.
இயேசு ஆத்துமாவிலே(2) சோதிக்கப்பட்டார். அவரது தற்புகழ்ச்சிக்கு ஒரு சோதனை வந்தது. “மேசியாவாக வருகிறவர் உப்பரிகையிலிருந்து குதித்தாலும் ஒன்றும் செய்யாது” என்ற வழக்கச்சொல் இஸ்ரவேல் நாட்டில் வழங்கி வந்தது. அதனால் உப்பரிகையிலிருந்து தாழக் குதியும். தூதர்கள் உம்மைக் கையில் ஏந்துவார்கள் என்று சாத்தான் கூறினான். அற்புதம் செய்து தன்னை உயர்த்த இயேசு விரும்பவில்லை. ஆத்துமாவிலே தாழ்மையாக நடந்துகொண்டார். இயேசு ஆத்துமாவிலே வந்த சோதனையை தேவ வசனத்தைக்கொண்டு ஜெயித்தார் (மத்.4:5-7).
இயேசு ஆவியிலே(3) சோதிக்கப்பட்டார். தேவன்மேல் வைக்கும் விசுவாசம் இருந்ததால் இயேசு ஜெயித்தார். “நீர் ராஜாதி ராஜா, ஏன் சிலுவைக்குப் போக வேண்டும், என்னைப் பணிந்துகொண்டால் எல்லாவற்றையும் தருவேன்” என்று பிசாசு அதிகாரத்தைக் கொடுப்பதாகக் கூறி ஆவியிலே சோதித்தான். ஆனால் இயேசு அவனை ஜெயித்தார். “…நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமை யை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்று யாக்கோபு 1:2,3ல் பார்க்கிறோம். சோதனையை சகித்து உத்தமர்களென்று விளங்குகிற மனிதர்களுக்கு தேவன் ஜீவகிரீடத்தைத் தருகிறார் (யாக்கோபு 1:12) “அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்” என்று பக்தன் யோபு கூறுகிறான் (யோபு 23:10).
ஆபிரகாம் வாழ்க்கையிலே…
1. ஆபிரகாம் விசுவாசிகளின் தகப்பன். உண்மையான தேவனைக் கண்டுகொள்ள விரும்பினான். கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தான் போகுமிடம் இன்ன தென்று அறியாமல் புறப்பட்டுப் போனான். விசுவாசத் தினால் ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்ப்படிந்தான் (எபி.11:8).
2. ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் தொண்ணூறாவது வயதில் பிள்ளைபேறு பெற சாத்தியமில்லாத சூழ்நிலையில் விசுவாசித்து பிள்ளை பெற்றாள். தேவனுடைய வாக்கை விசுவாசித்தாள் (எபி.11:11). விசுவாசத்திற்கு விரோதி நமது சூழ்நிலையே. சாத்தியக் கூறுகளை பார்க்கக்கூடாது. நம்பிக்கை இழக்கக்கூடிய சூழ்நிலையைப் பார்க்கக்கூடாது. மனிதன்மேல் நம்பிக்கை வைக்காமல் தேவன்மேல் விசுவாசம் வைத்து சுதந்தரிக்க வேண்டும். சாராள் தனது சரீரத்தை, பெலவீனத்தை, வயதை சூழ்நிலையைப் பார்க்கவில்லை. தேவனையே பார்த்தாள். விசுவாசம் சாதிக்க முடியாததை சாதிக்க வைக்கிறது. சூழ்நிலைகள் தேவப் பிள்ளைகளுக்கு விரோதமாக இருக்கும். ஆனால் தேவன் அனுகூலமாகவே இருப்பார்.
3. விசுவாசத்திற்கு பரீட்சை உண்டு (எபி.11:17). ஆபிரகாம் ஈசாக்கை விசுவாசத் தினால்தான் பெற்றான். ஆனால் அந்த விசுவாசத்திற்குப் பரீட்சை வந்தது. ஆபிரகாம் தேவனுடைய வாக்கை அப்படியே விசுவாசித்தபடியால் ஜெயித்தான். சோதனையை ஜெயிக்க வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொண்டான். வேதத்தில் எழுதப்பட்ட வார்த்தை கள் நம்முடன் இடைபடுகிறது. தேவன் நேராகவும் பேசி நம்மை வழிநடத்துகிறார்.
4. விசுவாசத்தினாலே ஆபிரகாம் பரதேசியைப் போல கூடாரத்தில் குடியிருந்தான். அநேக பிள்ளைகள் ஆபிரகாமுக்கு இருந்தபோதிலும் வாக்குத்தத்தத்தை சுதந்தரிக்கப் போகும் ஈசாக்கோடும், யாக்கோபோடும் கூடாரங்களில் குடியிருந்தான் (எபி.11:9). யாக்கோபு பதினைந்து வருடங்கள் ஆபிரகாமுடன் வாழ்ந்தான். ஆபிரகாம் தன் விசுவாசத்தை ஈசாக்குக்கும் பின்பு யாக்கோபுக்கும் போதித்தான்.
ஆகையால், மேகம் போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க பாரமான யாவற்றையும் நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும், முடிக்கிறவருமா யிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம் (எபி.12:1).