கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் இஸ்ரவேலராகிய தம் ஜனத்தை மிகவும் நேசித்தார். அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி வாழவேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் அவர்களோ தேவனைவிட்டு தூரமாய் விலகி மாயையைப் பின்பற்றி வீணாய் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? என்கிறார். மேலும் தேவர்களல்லாத தேவர்களை தங்களுக்குத் தெரிந்துகொண்டு ஜீவனுள்ள தேவனை விட்டுவிட்டார்கள். என் ஜனங்கள் வீணானவைகளுக்காக தங்கள் மகிமையை மாற்றினார்கள். எனவே தேவன் எரேமியா தீர்க்கதரிசியை சிறுவயதிலேயே அழைத்தார். எரே.1:7 “…கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய் நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக” என்று கூறினார். எரேமியாவை தீர்க்கதரிசியாக கனப்படுத்தினார்.
எரேமியா தேவன் சொல்லிய வார்த்தைகளைக் கொண்டு இஸ்ரவேல் ஜனங்களை எச்சரித்தார். எரே.2:13 வசனத்தில் “என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள்” நாமும் நம் தேவனாகிய கர்த்தர் பாவ உலகத்திலிருந்து பிரித்தெடுத்து நடத்திக்கொண்டு போகுங்காலத்தில் அவரைவிட்டுப் போகிறதினால் தேவன் உன்னை வெறுத்துவிடாதபடி அவரை உறுதியாக பின்பற்ற வேண்டும். அந்நிய தேவர்களான வெடிப்புள்ள தொட்டியைத் தெரிந்துகொள்ளக் கூடாது. திருப்தி செய்யாத உலக காரியங்களை நாம் நாடித் தேடக்கூடாது.
வெடிப்புள்ள தொட்டிகள் எவை என்று பார்ப்போம்
1) செல்வப் பெருக்கம்:
சங்.52:7 வசனத்தில், “இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள்” அநேகர் ஜீவனுள்ள தேவனைச் சார்ந்துகொள்ளாமல் தங்கள் செல்வப் பெருக்கமாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தெரிந்துகொள்கிறார்கள். மேலும் நீதி.17:23 துன்மார்க்கன் நீதியின் வழியைப் புரட்ட மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான். மேலும் மாற்.10:24, “…ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது!” எனவே செல்வ பெருக்கமாகிய வெடிப்புள்ள தொட்டியை நம்பாதிருங்கள்.
2) பிரபுகளின் இருதய யோசனையை நம்புதல்:
சங்.146:3ஆம் வசனத்தில், “பிரபுக்களையும், இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்” மேலும் சங்.10:4,6ல் “துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே” அவன் தான் அசைக்கப்படுவதில்லை. தலைமுறை தலைமுறை தோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்கிறான். நீதி.28:26, “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான்”
3) ஆயுதபலம் நம்மைக் காக்கிறவர்களை நம்புதல்:
ஏசாயா 31:1ல் “சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப் போய், குதிரைகள்மேல் நம்பிக்கை வைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ!” சங்.20:7,8ஆம் வசனங்களில், “சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மைபாராட்டுவோம்”
4) அறிவு, ஞானத்தின் மேல் நம்பிக்கை:
ஏசாயா 47:10,11,12 வசனங்களில், “உன் துன்மார்க்கத்திலே நீ திட நம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய்” தேவனை விட்டுவிட்டு அறிவையும் ஞானத்தையும் சார்ந்துகொள்ளக் கூடாது. அது வெடிப்புள்ள தொட்டியைப் போன்றது.
5) பட்டயம், ஈட்டி, அந்நிய தேவன்மேல் நம்பிக்கை:
பெலிஸ்தியனான கோலியாத், ஜீவனுள்ள தேவனை நிந்தித்தான். 1சாமு.17:45 “அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன்.”
6) மனுஷன்மேல் நம்பிக்கை:
எரே.17:5, “மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” கர்த்தர்மேல் நம்பிக்கை வைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். மேலும் எரே.17:13 “இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்.”
இதை வாசிக்கும் அன்பு நண்பரே! ஜீவனுள்ள தேவனை விட்டுவிட்டு இஸ்ரவேலர் வெடிப்புள்ள தொட்டிகளாகிய செல்வத்தின் பெருக்கத்தை நம்புதல், பிரபுக்களின் யோசனையை நம்புதல், ஆயுதபலம் அறிவு, ஞானத்தைச் சார்ந்துகொள்ளுதல்.ஈட்டி, பட்டயம், கேடகம் அந்நிய தேவர்கள்மேல் நம்பிக்கை, மனுஷர்கள்மேல் நம்பிக்கை போன்ற அநேக உலகப் பிரகாரமான வெடிப்புள்ள தொட்டிகளைத் தெரிந்துகொண்டு, ஜீவனுள்ள தேவனை விட்டுவிலகி, தேவனுடைய மகிமையை இழந்து சோரம்போனார்கள். 1தீமோ.6:12ஆம் வசனத்தில், “விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்;” என்று கூறியபடி வாழுவோம். மேலும், 1தீமோ.6:17ஆம் வசனத்தில், “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும்,…” நாம் அனுபவிக்கிறதற்கு சகலவித நன்மைகளையும் நமக்கு சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்து வாழுவோம்! மாரநாதா! – அல்லேலூயா!