ஜெப மாதிரி – ஸ்வர்ண ரோலா

Written by Susila Walker

November 23, 2020

இத்தாலி தேசத்தில் பாராரா என்ற ஊரில் பிறந்தவர். சிறுபிராய முதல் பக்தியும் அமைதலும் புத்திக்கூர்மை உடையவராகவும் காணப்பட்டார். தனது ஆத்தும குறைகளை உணர்ந்து தனது வாழ்க்கையை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார். அநேக மணி நேரங்களாக ஜெபத்திலும் தேவனோடு நெருங்கி உறவாடினார். அடிக்கடி உபவாசிப்பதும் முழங்காலில் மணிக்கணக்காக நின்று தேவனை வேண்டிக் கொள்வதும் அவர் வாழ்க்கையில் முக்கியம் பெற்றது. உலக வாழ்க்கையில் வெறுப்புற்று கிறிஸ்தவ துறவறம் பூண்டார். ஜனங்களின் பாவங்களைக் கண்டார். திருச்சபையின் சீர்கேடு என்ற பெயர் பெற்ற கவியொன்றை இயற்றி சபையின் பாவங்களைக் கண்டித்து எடுத்து உணர்த்தினார்.

ஒருநாள் ஒரு சிநேகிதருடன் சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது பரலோகம் திறக்கப்பட்டன. ஒரு அசீரிய வாக்கு இவ்விஷயங்களை சபைக்கு அறிவிக்க வேண்டும் எனக் கோரியது. ஆவியின் அபிஷேகம் பெற்றவராய் பணிவிடை செய்தார். இவரது பிரசங்கங்கள் மகா வல்லமையுள்ளதாகக் காணப்பட்டன. இவரது பிரசங்கங்களைக் கேட்ட மக்கள், பேச்சற்று சித்தபிரமை கொண்டவர்கள் போல வசனத்துக்கு நடுக்கமுற்று வீடு திரும்பினர். அவர் ஜெபிக்கும்போது ஒரு பரம ஊக்கமும் வாஞ்சையும் அவரை முழுவதும் மறுரூபப்படுத்துவதையும் மக்கள் அறிந்தார்கள். அடிக்கடி தனித்த இடங்களில் சென்று ஜெபிப்பார். கிறிஸ்மஸ் தினத்தன்று பிரசங்க பீடத்தில் 5 மணி நேரங்கள் ஞானதிருஷ்டியிலேயே இருந்துவிட்டார். இன்னொரு தடவை கர்த்தாவே, நீர் ஆசீர்வதிக்கப்பட்டவர், உமது பிரமாணங்களை எனக்குப் போதியும் என்ற வசனத்தைத் தியானித்துக் கொண்டிருக்கும்போது ஒரு பரம ஒளி தனக்குள் வந்து எல்லா சந்தேகங்களையும் நீக்கி பூரண நம்பிக்கை தனக்கு உண்டானதாகவும் கூறுகிறார். மக்கள் தங்கள் இழிவான வாழ்க்கையை விட்டு திரும்பினர். கேவலமான புஸ்தகங்களை எரித்தனர். மக்கள் ஜெபிக்க ஆரம்பித்தனர். ஏழைகள் ஆதரிக்கப் பட்டனர். வியாபாரிகள் தங்கள் அநியாய சம்பாத்தியங்களைத் திரும்பக் கொடுத்தனர். மாயையான உல்லாசங்கள் நிறுத்தப்பட்டன. பட்டணத்திலுள்ள நாடக மேடைகள், நாடக ஆடைகள், இழிவானவைகள் நிறுத்தப்பட்டன. மாயையான உல்லாசங்கள் கைவிடப்பட்டன. நாடக ஆடைகள், முகமூடிக்கள், காம நூல்கள், அகோர காட்சிப்படங்கள் திரட்டப்பட்டு நெருப்பிலிடப்பட்டன. 8 ஆண்டுகள் மட்டுமே இவ்விதமாக பயன்படுத்தப்பட்டார். தனது மரணம் இரத்த சாட்சியாக அமையும் என்று முன் அறிந்தார். அவர்மேல் கோபம் கொண்ட போப் ஆண்டவர் ஸ்வர்ண ரோலாவைத் துன்பப்படுத்தி அக்கினியிலிட்டார். மரிக்கும் தருணத்தில் எனக்காக என் ஆண்டவர் மிகவும் பாடுபட்டாரே என்ற வார்த்தைகளுடன் மரித்தார்.


பல பக்தி நூல்களை எழுதியுள்ளார். தாழ்மை, அன்பு, ஜெபம் இவைகளைப் பற்றிய நூல்கள் இயற்றினார். தேவ வார்த்தையின் மேன்மை எப்படிப்பட்டதென்று தெளிவாக விளக்கினார். இரவெல்லாம் ஜெபத்தில் தரித்திருப்பார். தேவ தரிசனங்களைப் பெற்றார். அநேக சம்பவங்களை தீர்க்கதரிசனமாக கூறியுள்ளார். இவர் பிரசங்கிக்கும்போது இடிமுழக்கம் சரமாரியாய் வந்துகொண்டிருக்கும். இவரே ஆவியால் நிறைந்த பிரசங்கங்கள் திருச்சபைக்கு ஒரு புதுயுகத்தைப் பிறப்பித்தது.






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This