கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
ஒவ்வொரு மனிதனுக்கும் தேவன் பாதுகாப்பைத் தருகிறார். மனிதர்கள் வெயிலினால் பாதிக்கப்படும்போது நிழலைத் தேடுகின்றார்கள். நிழல் இளைப்பாறுதலையும், ஆறுதலையும், பாதுகாப்பையும் தருகிறது. இதைத் தேடிப் பெற்று அனுபவிக்க வேண்டும். சங்கீதம் 91:1ஆம் வசனத்தில், “உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்” என்று கூறப்பட்டுள்ளது. சர்வ வல்லவரின் நிழல் எப்பொழுதும், நீதிமானுக்கு உண்டு. இது இலவசமானது, தேவன் எந்த மனிதனுக்கும், தேவப் பிள்ளைகளுக்கும் கொடுக்க விரும்புகிறார். நாம் தேவனுடைய பிரசன்னத்தில் அமர்ந்து இளைப்பாற வேண்டும். தேவ பிரசன்னத்திற்கு இணையானது எதுவும் இல்லை. தேவ பிரசன்னத்தில் இருப்பவனுக்கு தேவனுடைய பாதுகாப்பும், அரவணைப்பும் அளவில்லாமல் கிடைக்கும்.
தேவன் தம்முடைய ஜனங்களை எப்படிப் பாதுகாக்கிறார் என்று பார்ப்போம்
1. கன்மலையின் வெடிப்பில் பாதுகாப்பு:
யாத்.33:22ஆம் வசனத்தில், “என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்” தேவன் “என்னண்டையில் ஒரு இடம் உண்டு. மோசேயிடம் அங்கே கன்மலையில் நில்” என்றார். தேவனை ஒருபோதும் ஒருவரும் காண முடியாது. தேவனின் மகிமை கடந்து செல்லும்போது, தேவன் நம்மை கன்மலையான இயேசுவுக்குள் வைத்துக் காக்கிறார். தேவனிடம் ஒருவரும் நேரடியாகச் செல்ல முடியாது. கிறிஸ்துவாகிய கன்மலையின் வெடிப்பில் வைத்து, தம் கரத்தால் மூடி, பாதுகாக்கிறார்.
2. செட்டைகளின் நிழலில் பாதுகாப்பு:
சங்கீதம் 57:1ஆம் வசனத்தில், “எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்.”
தாவீது சவுலுக்குத் தப்பியோடி கெபியில் ஒதுங்குகையில், தனக்கு நஷ்டம் நேரிடாதபடி என் ஆத்துமா உம்மை அண்டிக்கொள்ளுகிறது. விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலில் வந்து அடைவேன் என்கிறார். தேவன் உண்மையுள்ளவர், தாவீதை சவுலின் கைக்கு விலக்கிப் பாதுகாத்தார். தேவன் தாவீதுகூடவே இருந்து, விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் தனது செட்டைகளுக்குள் மூடி மறைத்துக்கொண்டார். தேவன் ஆபத்து நேரத்தில்கூட தமது செட்டைகளுக்குள் வைத்து நம்மை பாதுகாக்கிறார்.
3. மேகத்தின் நிழலினால் பாதுகாப்பு:
ஏசாயா 25:4 “கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்” மேலும் வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல் அந்நியரின் மும்முரத்தைத் தணியப் பண்ணுவீர். மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும் என்கிறார் ஏசாயா. கொடூரமானவர்கள் தேவ ஜனத்தை தாக்கும்போது தேவன் அவர்கள் கையிலிருந்து தப்புவிப்பார். அவர்களுக்கு அடைக்கலமாயிருப்பார். வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாயிருப்பார். இஸ்ரவேல் ஜனங்களை மேகத்தினால் 40 ஆண்டுகள் பராமரித்தார். கடுமையான வெயில் அவர்களை தாக்காமல் பாதுகாத்தார். பெலவந்தர்கள் ஆரவாரம் செய்யும்போதும் தேவன் மேகத்தின் நிழலினால் வறட்சியான இடத்தின் வெப்பம் தணிவதுபோல அக்கிரமங்கள் மிஞ்சி வல்லமை கொள்ளாமல் அடக்குவார். தேவன் ஏழைகளுக்கு பெலனும், எளியவனுக்குத் திடனும் வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமாயிருப்பார்.
4. கரத்தின் நிழலினால் பாதுகாப்பு:
ஏசாயா 51:16ஆம் வசனத்தில், “நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன்” தேவன் தன் சரீரமாகிய திருச்சபையைப் பாதுகாக்கிறார்.
5. தாயின் செட்டைகளின் கீழ் பாதுகாப்பு:
மத்.23:37ஆம் வசனத்தில், “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று” என்கிறார்.
எருசலேம் – தேவனால் நேசிக்கப்பட்ட பட்டணம். ஆனால் பின்வாங்கிப் போயிற்று. தூரம்போன விசுவாசியை அழைக்கிறார். சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன், உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று. தேவ அன்போ வருந்தியழைக்கிறது. குஞ்சுகளுக்கு தாயின் செட்டைகள் எப்படி அவசியமோ அப்படியே தேவ பிள்ளைகளுக்கு திருச்சபை அவசியம்.
தேவன் வேடனாகிய சாத்தானின் கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளை நோய்க்கும் தப்புவிப்பார். அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார். அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய் என்கிறார். ஆதி.28:15ஆம் வசனத்தில், “நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பி வரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார்”
அன்பு நண்பரே! சர்வ வல்ல தேவனின் நிழலில் தங்குபவனுக்குப் பாதுகாப்பு எப்பொழுதும் உண்டு. சங்கீதம் 121:4ஆம் வசனத்தில் “இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை” என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் தேவனுடைய பிள்ளைகளுக்கு அவருடைய நாமமே பெரிய பாதுகாப்பு. யோவான் 17:11ஆம் வசனத்தில், “…நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்” என்று இயேசு ஜெபித்தார். “கர்த்தருடைய நாமமே” பலத்த துருகம். நீதிமான் அதற்குள் ஓடி, சுகமாயிருப்பான். தேவன் தமது பிள்ளைகளை கிறிஸ்துவாகிய கன்மலையின் வெடிப்பில் வைத்து பாதுகாக்கிறார். தாயின் செட்டைக்குள் இருப்பதுபோல சபையில் வைத்துப் பாதுகாக்கிறார். விசுவாசிகள் தேவன் தரும் பாதுகாப்பான இடங்களைவிட்டு விலகி சாத்தான் கையில் விழாதபடி ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அல்லேலூயா!!!




