பெரிய எறும்பும், எட்டுக்கால் பூச்சியும்

Written by Reverent Selvakumar

August 23, 2021

தரையில் ஓடிக்கொண்டிருந்த பெரிய எறும்பை வழிமறித்த எட்டுக்கால் பூச்சி, கடுமையாக தாக்கத்தொடங்கியதைப் பார்த்து கவனத்தைத் திருப்பினேன். நான் பார்த்தபோது, எறும்பும் தன்பங்குக்கு விடாமல் எட்டுக்கால் பூச்சியைத் தாக்கிக் கொண்டிருந்தது. தீவிரமான சண்டை நடந்து கொண்டிருந்த வேளையில், எட்டுக்கால் பூச்சி திடீரென தீவிர தாக்குதலை நிறுத்திவிட்டு, எறும்பைத் தன் காலால் இழுக்க ஆரம்பித்தது.ஒரு பக்கம் சிறிய அளவிலான தாக்குதலும், மறுபக்கம் பெரிய அளவிலான இழுப்பும் நடந்துகொண்டிருந்தது. எட்டுக்கால் பூச்சியின் இந்த இரட்டைத் தாக்கு தலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் எறும்பு திணறிக்கொண்டிருந்தது. இதுவரை கடுமையாகத் தாக்கிய எறும்பை எங்கே இழுத்துச் செல்ல முயற்சிக்கிறது என்று வியப்பாய் பார்த்தேன்! ஆம்! தரையிலிருந்து எறும்பை கொஞ்ச கொஞ்சமாய் இழுத்து சற்று உயரத்தில் இருந்த ஒட்டடைக்கு கொண்டுசென்று அந்த வலையில் சிக்க வைத்துவிட்டது அந்தத் தந்திரகார எட்டுக்கால் பூச்சி.


அதன்பின்பு, எட்டுக்கால் பூச்சி சண்டையிடுவதை நிறுத்தி ஓரிடத்தில் அமைதியாய் இருந்தது. தற்போது, எறும்பு அந்த ஒட்டடையிலிருந்து தப்பித்துச் செல்வதற்காக தன் னுடைய முழு பெலத்தையும் செலவழித்துக் கொண்டிருந்தது. எட்டுக்கால் பூச்சியோ, அவ்வப்போது எறும்பைத் தாக்குவதும், பின்பு அமைதியாய் இருப்பதுமாக இப்படியே காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தது.ஏற்கனவே, வலையிலிருந்து தப்பிப்பதில் பலத்தை இழந்து சோர்வடைந்திருந்த எறும்பு, எட்டுக்கால் பூச்சியின் கோரத்தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இறந்து விட்டது. இதற்காகவே காத்துக்கொண்டிருந்த எட்டுக்கால் பூச்சி பொறுமையாய் எறும்பை சுவைத்து சாப்பிடத் தொடங்கியது. ஆம்! தரையில் இருக்கும் எறும்பின் பெலம், ஒட்டடையில் தொங்கும்போது இல்லை என்பது உண்மை! அதைப் பயன் படுத்திய எட்டுக்கால்பூச்சி அதை எளிதில் கொன்றுவிட்டது.


முதலாவது, சாத்தான் செய்யும் மிகப்பெரிய தந்திரம், தேவனுடைய ஐக்கி யத்திலிருந்து உன்னை பிரிப்பதுதான்! தேவனுக்கும் உனக்கும் உள்ள தொடர்பில் தொய்வு ஏற்பட்டால், உன்னுடைய உள்ளான மனிதன் பெலவீனம் அடைகிறான். இதைப் பயன்படுத்தி, சத்துரு அடுத்த கட்டமாக உன்னை பாவத்தில் தள்ளிவிடுவான். பாவத்தில் சிக்கிய ஆத்துமாவை நிதானமாக பொறுமையாகக் கொன்று வெற்றி அடைவான்.
எனதருமை தம்பி தங்கையர்களே! உங்களுக்கும் தேவனுக்கும் தொடர்பை ஏற் படுத்தும் எந்த சூழ்நிலையையும் உதாசீனப்படுத்திவிடாதீர்கள்! உங்களுக்கும் தேவனுக்கும் இடையே உள்ள உறவில் இறுக்கம் இருக்கும்வரைக்கும் யாராலும் உங்களை ஒன்றும் செய்துவிட முடியாது. எனவே, தொடர்ந்து தேவனுக்குள் எழும் புங்கள்! மீண்டும் முழங்காலை முடக்குங்கள்! ஜெபியுங்கள்! வெற்றியை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்!!


“என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார்” (மீகா 7:8)






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This