கடந்த வருடம், ஒரு போதகரின் மகள் திருமண வரவேற்பில் கலந்துகொள்ளும்படி, வேலூர் வரை செல்ல வேண்டிய சூழ்நிலை வந்தது. சென்னையிலிருந்து காட்பாடி வரை ரயிலில் சென்று, அங்கிருந்து வேலூர் செல்வது எளிது. எனவே நான் ரயிலில் செல்லத் தீர்மானித்தேன். குறைந்த தூரம் எனவே முன்பதிவு செய்யவில்லை. மதியம் புறப்பட்டு திருமண வரவேற்பில் பங்கேற்று, இரவு இரயிலில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தேன்.
அது ஒரு “முன்பதிவு செய்யப்படாத” ரயில் பெட்டி, ஆண்கள், பெண்கள், சிறியோர், பெரியோர் என பலர், உட்காரக்கூட இடம் இல்லாதபடி, அமர்ந்தோ, நின்றோ பயணித்துக் கொண்டிருந்தனர். அந்த ரயில் பெங்களுரிலிருந்து சென்னை வரை செல்லும் ரயில். ஒருவேளை அந்தப் பயணிகளிடம் ரூ.400 இருந்திருந்தால் அவர்கள் “முன்பதிவு” செய்து சென்றிருக்கலாம். “ரூ.800” இருந்திருந்தால் “ஏ.சி.வசதியுடன்” பயணித்திருக்கலாம். அவர்களோ ரூ.200 கொடுத்து, “பதிவு செய்யப்படாத” இருக்கையில் இடர்பாடுகளோடு பயணித்துக் கொண்டிருந்தனர்.
பல பெண்கள் பட்டபாட்டைப் பார்த்தால், கண்களே கலங்கிவிட்டது. நான் இருந்த பெட்டியில் சாமான்கள் வைக்கும் இடத்தில், மிக்க இடைஞ்சலின் மத்தியில் உட்கார்ந்திருந்தாள். அவள் பெங்களுரில் ஏதோ மென்பொருள் (Software) சம்பந்தப்பட்ட பணியினை செய்பவள். வாரம் ஒருமுறை சனிக்கிழமைகளில் இப்படி பயணித்து, சென்னையிலுள்ள தன்னுடைய கணவன் மற்றும் சிறு மகனைக் கண்டு, பின்பு மீண்டுமாக திங்கள் காலை இதே சூழ்நிலையில் பெங்களுர் திரும்ப வேண்டும் என்ற நிலை அவளுக்கு.
அந்த சகோதரி தன்னுடைய மகனிடம் “20 ரூபாய்க்கு” விளையாட்டு சாமான் வாங்கியுள்ளேன் எனவும், மேலும் தன்னுடைய கணவனிடம் இரவு 12.00 மணிக்கு “தாம்பரம்” பஸ் நிலையத்தில் தனக்காக சைக்கிளில் காத்திருக்கும்படியும் கேட்டுக் கொண்டபோது அவளின் வீட்டு சூழ்நிலை தெளிவாகப் புலப்பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள்ளே, எல்லா முக்கிய வழிதடங்களுக்கும் பேருந்துகள் வரும். எனவே நான் “மந்தைவெளி” செல்லும் பேருந்தில் ஏறி என்னுடைய வீட்டிற்குச் செல்வது வழக்கம். “ஏ.சி” பெட்டியில் பயணித்த அநேகப் பயணிகள் கூட அந்தப் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்கள்.
இதற்கிடையில், ஏதோ “ஆட்டோ, ஆட்டோ” என ஒரு தெரிந்த குரல் காதில் ஒலித்தது. திரும்பிப் பார்த்தால் அந்தக் கிறிஸ்தவப் பெண்மணி, ஒரு ஆட்டோ ஓட்டுநரிடம் தாம்பரம் செல்ல ரூ.400 என பேரம் பேசிக் கொண்டிருந்தாள். அதே பேருந்து நிலையத்தில் ரூ.30/- கொடுத்தால் “ஏ.சி” பேருந்தில் தாம்பரம் வரை பாதுகாப்பாக, விரைவாகச் செல்ல முடியும். ஆனால் இந்த சகோதரி இரவு 11.00 மணிக்கு ஆட்டோவில் செல்லப் பேரம் பேசிக்கொண்டிருந்தாள்.
ஒருவேளை அவர் ரூ.30/- கொடுத்து “ஏ.சி” பேருந்தில் சென்றிருந்தால், அவள் தன்னுடைய அன்பு மகனை “30 நிமிடம்” முன்பாகவே பார்த்திருக்க முடியும், மேலும் “மிச்சம்” செய்த ரூ.370/-க்கு பெரிய விளையாட்டு பொருள் சாமானையாவது வாங்கிச் சென்றிருக்கவும் முடியும். மகனை சந்தோசப் படுத்தவும் முடியும். அவளோ ஆட்டோவில் போக தீர்மானமாய் பேரம் பேசிக் கொண்டிருந்தாள்.
இப்படித்தான் அநேகர் அறியாமையால் வாடுகிறார்கள். கிடைத்தப் பணத்தையும் விரயம் செய்து வறுமையில் வாடுகிறார்கள். இவர்கள் அறியாமையால், இவர்கள் குடும்பம் மட்டுமல்ல, பல ஊழியங்களுமே செயல்பட முடியாமல் ஸ்தம்பிக்கிறது.
ஆண்டவர் கொடுத்த பணத்தை கிரமமாக செலவு செய்வோம். நமது குடும்பங்களும், ஊழியங்களும் திரளாய்ப் பெருகட்டும்.
“…உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்” (லூக்.19:26)