மதங்களைப் பற்றிய தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் கேலப் இன்டர்நேஷனல் எனும் அமைப்பு ஒரு அறிக்கையில், “உலகில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் (நாத்திகர்கள்) எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கிறது. மேலும், வாழ்க்கை என்பது இந்த உலகத்தோடு (மரணத்துடன்) முடிந்துவிடக்கூடியது என நம்புபவர்கள் கோடிக்கணக்கில் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள்” என்ற அதிர்ச்சியான தகவலை தெரிவித்திருந்தது.
ஆம்! மனிதன் தான் சார்ந்த மதத்தை இப்பூமியில் தன்னுடைய அடையாளமாக, அங்கீகாரமாக, பாதுகாப்பாக நினைக்கிறான். சில கிறிஸ்தவர்கள், “வேலைக்காக, கல்யாணத்திற்காக, கல்லறைக்காக ஒரு சபையில் கட்டாயமாக அங்கத்தினராக இருக்க வேண்டும்” என்று நினைப்பதுபோல! உண்மையில் கிறிஸ்தவ மதம் உலகில் வாழும் மனிதனுக்கான அடையாளமாக எண்ணப்பட்டால், கிறிஸ்தவ மார்க்கம் மனிதனுக்குள் வாழும் உள்ளார்ந்த மனிதனுக்கான மறுஉலகிற்கான வழியாக எண்ணப்படவேண்டும்.
நண்பரே! உலக வாழ்வையும் உன்னத வாழ்வையும் ஒரே தராசில் எடைபோடுவதென்பது சத்தியமாக சாத்தியமில்லை. உலக வாழ்விற்கான காரண காரியங்களை நேரில் பார்த்துவிடுவதால் அதில் நம்பிக்கை வைப்பது எப்போதுமே எளிதாக உள்ளது. ஆனால், உன்னத வாழ்க்கை என்பது மரணம் கடந்த வாழ்க்கையாய், கண்ணின் காட்சிக்கு, மனதின் எண்ணத்திற்கு மொத்தத்தில் ஐம்புலனுக்கு எட்டாத உலகமாய் இருப்பதால் அதை விசுவாசிப்பதென்பது கடினமாக உள்ளது.
பொதுவாக மனிதர்கள் முடிவு சார்ந்தவர்களாகவே (Result oriented) இருக்கிறார்கள். நியாமாய் வாழ்ந்த விசுவாசி ஒருவர், கடினமாக உழைத்து, சிறுக சிறுகச் சம்பாதித்து அழகிய பங்களா ஒன்றைக் கட்டிமுடித்தார். கிறிஸ்தவன் ஒருவன் லஞ்சம் வாங்கி, கொள்ளையடித்து, கொஞ்ச நாளில் கோடிஸ்வரனாகி பெரிய பங்களா ஒன்றை கட்டிவிட்டான். இரண்டு பங்களாக்களும் வருவோர் போவோரின் கண்களை உறுத்தியது. உலகமானது இவ்விருவரையும் ‘வெற்றியாளர்கள்’ என்ற ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தாலும் பரலோகத்தின் பார்வை வேறாகவே உள்ளது.
அந்தப் பட்டிணத்தில் கொடிய சுனாமி உருவாகி கடல் தன் இருப்பிடத்தை விட்டு இவ்விருவரின் பங்களாக்களுக்குள் நுழைந்து கோரத்தாண்டவம் ஆடியது. ஊர் முழுவதும் மரண ஓலங்கள். இருவரின் பங்களாக்களும் இடிந்து, இருவரும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மறுவுலகம் செல்கிறார்கள். ஒருவன் ஆபிரகாமின் மடியில், மற்றொருவன் பாதாளத்தின் சிறையில்.
பூமியில் இருவரின் பிணங்களைப் பார்த்த ஜனங்கள் “என்ன பங்களா கட்டி என்ன ப்ரயோஜனம்! இப்படி அற்ப ஆயுசுல போய் சேர்ந்துட்டாங்களே!” என்று சொன்னார்கள். பரலோகத்தில் ” நீதியின்படி வாழ்ந்து பங்களா கட்டியவரே பரலோகத்திற்கு வாரும்” என்ற குரல் ஒலித்தது. அதே நேரத்தில் பாதாளத்தில், “ஊரை அடிச்சு உலையில் போட்டு பங்களா கட்டியவரே வாரும் புழுக்களின் படுக்கைக்கு” என்ற கேலியின் குரல் ஒலித்தது.
“நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்” (ஏசாயா:57-2)