கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் தேசத்தை ஆசீர்வதிக்க விரும்புகிறார். தேவனுடைய திருச்சபை மக்கள் மூலம் உலக மக்கள் கிறிஸ்துவண்டை வந்து நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டும் என்று விரும்புகிறார். ஒரு மனுஷனும் கெட்டுப்போவது தேவனுடைய சித்தமல்ல. சிலர் ஆண்டவரின் கையில் கனத்திற்கு உரிய பாத்திரமாக பயன்படுகின்றனர். சிலர் அசதியாய் நிர்விசாரிகளாய் தனக்காகவே வாழ்ந்து மடிகிறார்கள். நாம் தேவனால் பயன்படுத்தப்படும் கனத்துக்குரிய பாத்திரமாய் மாற எப்படி வாழ வேண்டும்? என்று ஆராய்ந்து பார்த்து செயல்பட வேண்டும்.
ரோமர் 12:11 வசனத்தில், “அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.” அசதி, சோம்பல், அஜாக்கிரதை – விசுவாசிகளுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே விழிப்புள்ளவர்களாய் நாம் எதற்காக அழைக்கப்பட்டோமோ, அதனை நோக்கி முன்னேற வேண்டும். மேலும், ரோம.6:22ஆம் வசனத்தில் “இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.” பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்ட பின் தேவனுக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுத்தால் மட்டுமே பரிசுத்த ஜீவியம் நமக்குள் ஆரம்பமாகிறது. பரிசுத்தமில்லாமல் நாம் செய்யும் ஊழியம் அங்கீகரிக்கப்படாது.
எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் தேவனுக்கு ஊழியம் செய்ய முடியும் என்று பார்ப்போம்?
தேவனை பின்பற்ற வேண்டும்:
யோவான் 12:26ஆம் வசனத்தில் “ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.” நாம் ஆண்டவரைப் பின்பற்ற வேண்டும். அவர் பின்னே போகவேண்டும். பின்நோக்கி பார்க்கவே கூடாது. எங்கு போனாலும் அவர் பின் செல்வேன், வசனத்தின்படி நடப்பேன். உபதேசம் கடினமாகும்போது பின்வாங்குகிறார்கள். கஷ்ட, நஷ்டமான வேளையில் பின்வாங்குகிறார்கள்.
பயத்துடனே கர்த்தரை சேவியுங்கள்:
சங்.2:11ஆம் வசனத்தில், “பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள்…” கண்ணியத்தோடு, பயபக்தியுடன் கர்த்தரை சேவியுங்கள். கர்த்தருடைய காரியங்களில் துணிந்து பிரவேசிக்கக் கூடாது. தூதர்கள் கூட பிரவேசிக்க பயப்படும் இடங்களில் முட்டாள்கள் துணிந்து பிரவேசிப்பார்கள். பயப்படும் இடங்களில் தேவ காரியங்களில் துணிந்து பிரவேசிக்கிறார்கள். சவுல் துணிந்து பலியிட்டான். தண்டனை பெற்றான். உரியா ராஜா துணிந்து பலியிட்டான். குஷ்டரோகியாக மாறினான்.
உத்தமமான வழிகளில் நடப்பவனே ஊழியம் செய்யக்கூடியவன்:
சங்.101:6ஆம் வசனத்தில், “தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான்” தேவன் உத்தமர்களையே தேடுகிறார்.
இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யக்கூடாது:
மத்.6:24ஆம் வசனத்தில் “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது” இரண்டு எஜமான்களுக்கு ஊழியம்செய்ய முடியாது. ஆண்டவருக்காக கொடுக்க வேண்டிய நேரத்தை கொடுக்காமல் உலகப் பொருளுக்காக, பொருளை சேர்ப்பதற்காக நேரத்தை செலவிட்டு ஊழியம் செய்யகூடாது.
பழைய மனிதன் ஊழியம் செய்ய முடியாது:
ரோமர் 7:6ஆம் வசனத்தில், “இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப் பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம்” புதிய மனிதனைத் தரித்துக்கொண்டவர்கள் மட்டுமே ஊழியம் செய்ய வேண்டும். புதிய முறைகளைக் கற்றுக்கொண்டே இருப்பதால் மட்டுமே புதிதாக வைத்துக்கொள்ள முடியும். டாக்டர்கள், காண்டிராக்டர்கள், டீச்சர்கள், இஞ்சினியர்கள் தங்களை நவீன கால நடைமுறைமைக்கு ஏற்றபடி கற்றுத் தேறினவர்களாக வைத்துக்கொள்கிறார்கள். பழைய மனிதனுடைய செய்கைகளை களைந்துபோட்டு, புதிய மனிதனை தரித்துக்கொண்டவர்களே ஊழியம் செய்ய முடியும்.
மனத்தாழ்மையோடு, வெகு மனத்தாழ்மையோடு ஆண்டவரை சேவிக்க வேண்டும்!
அப்.20:19ஆம் வசனத்தில், “வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன்.” மனத்தாழ்மையோடும், வெகு மனத்தாழ்மையோடு ஆண்டவரை சேவிக்க வேண்டும். கேவலமாக பேசும்போதும், நிந்திக்கும்போதும் தாழ்மையோடு காணப்பட வேண்டும். ஜாதி, குடும்ப பெருமைக்கு செத்த நிலையில் காணப்பட வேண்டும்.
அன்போடு ஊழியம் செய்ய வேண்டும்:
கலா.5:13ஆம் வசனத்தில் “…அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்” அன்போடு ஊழியம் செய்ய வேண்டும். கிறிஸ்துவின் அன்பினால் நிறைந்து ஊழியம் செய்ய வேண்டும். கிறிஸ்துவின் அன்பினால் நெருக்கி ஏவப்பட்டு கிறிஸ்துவின் ஊழியம் செய்ய வேண்டும். ஆண்டவரை நேசிக்க நேசிக்கத்தான் ஊழியம் செய்ய முடியும். கர்த்தருக்கு கல்வாரி அன்பினால் நிறைந்து ஊழியம் செய்யுங்கள்.
அன்பு நண்பரே! நாம் சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும், கர்த்தருக்கு ஊழியம் செய்ய வேண்டும். உண்மையான சீஷனைப் போல அவரைப் பின்பற்ற வேண்டும். பயத்தோடும், நடுக்கத்தோடும் ஊழியம் செய்ய வேண்டும். உத்தமமான வழிகளில் நடக்க வேண்டும். பழைய மனுஷனுடைய சுபாவங்களை களைந்துபோட்டு, தாழ்மையோடும், அன்போடும் ஊழியம் செய்ய வேண்டும். அப்பொழுது கனத்துக்குரிய பாத்திரமாய் தேவனால் பயன்படுத்தப்பட முடியும். எஜமானுடைய சந்தோஷத்துக்கும், அங்கீகாரத்துக்கும் உரியவர்களாக மாறமுடியும்! மாரநாதா!




