கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
பிரியமானவர்களே! ஒரு மனிதனின் ஆவிக்குரிய முன்னேற்றத் திற்கு மிகப்பெரும் தடையாயிருப்பது பெருமையே. பெருமையுள்ளவர்க ளுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார் என்றும் தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார் என்றும் யாக்.4:6ல் பார்க்கிறோம். தேவனுடைய கிருபை நம்மேல் இருக்க நாம் ஆவியில் தாழ்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும்.
மத்.5:3ல் ஆவியில் எளிமையுள்ளவர்களுக்கே பரலோக ராஜ்யம் என்று பார்க்கிறோம். எனவே, நாம் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடி அந்த பரம ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்ள தாழ்மையை அணிந்துகொள்ளுவோமாக. மாயமான தாழ்மை கூடாது. சிலர் தோற்றத்தில் தாழ்மையுள்ளவர்கள் போல் காட்சியளிப்பார்கள். ஆவியிலோ பெருமையுள்ளவர்களாயிருப்பார்கள். நாம் கிறிஸ்துவைப்போல் மாற வேண்டுமானால் தாழ்மையுள்ளவர்களாயிருக்க வேண்டும். அதுவே, நமது அணிகலனாயிருக்க வேண்டும். மனத்தாழ்மை நமக்கு கனத்தைக் கொண்டு வருகிறது (நீதி.29:23). நமது அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்து சிலுவையின் மரணபரியந்தம் தன்னைத் தாழ்த்தினார். அவர் தன்னை மிகவும் தாழ்த்தினபடியால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார் (பிலி.2:9).
இயேசு கிறிஸ்துவின் தெரிந்தெடுத்தல் முக்கியமானது வானத்திற்கும் பூமிக்கும் அதிகாரியான அவர் ஏழைப் பெற்றோரின் மகனாக மனித அவதாரம் எடுத்தார். தங்கள் மூத்த குமாரனாகிய இயேசுவை பிரதிஷ்டை செய்யக் கொண்டுவரும்போது, ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவர்களுக்கு சக்தியில்லாததால் ஒரு ஜோடு காட்டுப்புறாக்களைக் கொண்டு வந்தனர். லேவி.12:8; லூக்.2:22,24 ‘பிறந்ததோ ஒரு மாட்டுக்கொட்டில், வளர்ந்ததோ நாசரேத்தூரிலிருந்து யாதொரு நன்மை வருமோ’ என்று ஏளனமாக கருதப்பட்ட நாசரேத் பட்டணம். வேலையோ தச்சு வேலை. தாமார், ராகாப், ரூத், பத்சேபாள் போன்ற யூத ஜாதியல்லாத ஸ்திரீகளின் வழி வந்தவர். இவ்வாறு நமது ஆண்டவர் தாழ்மையின் அவதாரமாக இந்த உலகில் வந்தார். பெருமை அபிஷேகிக்கப்பட்ட கேரூப் பாதாளத்தில் தள்ளியது. மற்றவர்களை அற்பமாய் எண்ணுவது தாழ்மையல்ல. மற்றவர்களை நம்மிலும் மேன்மையுள்ளவர்களாக எண்ணவேண்டும். ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ள வேண்டும். கனம்பண்ணுவதில் முந்திக்கொள்ள வேண்டும். இயேசு தம்மைத்தாமே வெறுத்து தாழ்மையை அணிந்து கொண்டார். நம் முடைய சுயம் சாக இடங்கொடுக்க வேண்டும். சீடர்களின் கால்களைக் கழுவுமளவு அவரிடம் தாழ்மை இருந்தது.
மற்றவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்க்கிறவர்களிடம் தாழ்மை இராது. நம்முடைய தேவன் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர். அவரிடம் நமக்கு இளைப்பாறுதல் உண்டு.
அப்போஸ்தலருக்குள்ளே முதன்மையானவனும் வேத சாஸ்திரங்களைக் கற்றுத்தேர்ந்தவனுமாகிய பவுல் நான் பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவன் என்று தன்னைத் தாழ்த்துகிறார் (எபே.3:8). பவுல், சிலுவையைக் குறித்தே மேன்மை பாராட்டினார்.
மனத்தாழ்மையுள்ளவர்களுக்குக் கிடைக்கும் ஏழு ஆசீர்வாதங்களை இங்கு பார்க்கலாம்.
முதலாவதாக தேவன் மனத் தாழ்மையுள்ளவர்களை நோக்கிப் பார்க்கிறார்
மிகக் கொடிய ராஜாவாகிய ஆகாப் நாபோத்தைக் கொலை செய்தான். தீர்க்கதரிசியாகிய எலியா அவனைக் கண்டித்து உணர்த்தியபோது இரட்டைப்போர்த்து, உபவாசம் பண்ணி தாழ்மையாய் நடந்துகொண்டான். உடனே தேவன் அவனை நோக்கிப் பார்த்தார். அவன்மேல் நினைத்திருந்த பொல்லாப்பை வரப்பண்ணவில்லை (1இராஜா.21:27-29). நினிவே மக்கள் தங்களைத் தாழ்த்தியபோது தேவன் அவர்களை நோக்கிப் பார்த்தார். சிறுமைப்பட்டு ஆவியில் நொறுங்குண்டவர்களையே தேவன் நோக்கிப் பார்க்கிறார் (ஏசாயா 66:2).
இரண்டாவதாக தேவன் மனத் தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறார் (லூக்.14:11)
நாம் அனைவரும் பூமியில் உயர்ந்த நிலைக்கு வரப் பாடுபட்டுக்கொண்டிருக்கி றோம். ஆனால் நாம் நம்மைத் தாழ்த்தும்போது தேவன் நம்மை உயர்த்துகிறார். மனுஷரால் உயர்த்தப் படுவதைக் காட்டிலும் தேவனால் உயர்த்தப் படுவதே நல்லது. மோசேயின் பணிவிடைக் காரனாகிய யோசுவா மோசேயின் ஸ்தானத்துக்கு உயர்த்தப்பட்டான். எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த எலிசா எலியாவின் ஸ்தானத்துக்கு உயர்த்தப்பட்டான், எனவே நாம் உயர்த்தப்பட மனத்தாழ்மையை அணிந்துகொள்ள வேண்டும்.
மூன்றாவதாக நாம் தாழ்மைப்படுவோமானால் தேவன் தேசத்திற்கு ஷேமத்தைக் கொடுக்கிறார் (2நாளா.7:14)
கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போகும்போது, நம்முடைய தேசத்தில் வறட்சி, பஞ்சங்கள், கொள்ளை நோய்கள், யுத்தங்கள் உண்டாகிறது. தேவப் பிள்ளைகளாகிய நாம் நம்மைத் தாழ்த்தி உபவாசித்து ஜெபம் பண்ணும்போது தேசத்திற்கு ஷேமம் உண்டாகிறது.
நான்காவதாக தேவன் மனத் தாழ்மையுள்ளவனுக்கு ஐசுவரியத்தையும், மகிமையையும், கனத்தையும் கொடுக்கிறார்
ஐசுவரியத்தையும், கனத்தையும் தந்து மேன்மைப்படுத்த நம்முடைய கர்த்தராலே ஆகும் (1நாளா.29:12). மொர்தேகாய் எஸ்தர் ராஜாத்தியோடும், யூத ஜனங்களோடும் மூன்று நாள் உபவாசித்து தன்னைத் தாழ்த்தினான், தேவன் அவனை பெரியவனாக்கினார் (எஸ்தர் 10:3). பிதாவானவரே சகல மகிமைக்கும் கனத்துக்கும் ஸ்தோத்திரத்திற்கும் பாத்திரமானவர். இயேசுகிறிஸ்து தம்மைத் தாழ்த்தினதால், பிதாவானவர் அவரைக் கனப்படுத்தினார் (யோவான் 8:54). நாம் நம்மைத் தாழ்த்தி, குயவனாகிய அவருடைய கையிலே நம்மை அவருடைய சித்தத்தின்படி வனைய ஒப்புக் கொடுக்கும் போது நம்மை கனத்திற்குரிய பாத்திரமாக வனைகிறார் (ரோமர் 9:21).
ஐந்தாவதாக தேவன் மனத்தாழ்மையுள்ளவர்களுக்கு கிருபையளிக்கிறார் (யாக்.4:6)
கிருபை இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டாகிறது (யோவான் 1:16). நாம் நிர்மூலமாகாமலிருக்க நம்மைத் தாழ்த்தி அவருடைய கிருபைக்காக காத்திருப்பது அவசியம். போராட்டங்கள், பாடுகள் நிறைந்த உலகில் அவருடைய கிருபை நமக்குப் போதுமானது. ஆயக்காரன் தான் ஒரு பாவி என்று உணர்ந்து தன்னைத் தாழ்த்தி தேவனிடம் கிருபையாயிருக்கும்படி மன்றாடினான். தேவன் அவனுக்கு கிருபையளித்தார். அவனை நீதிமானாக்கினார்.
ஆறாவதாக தேவன் தாழ்மையுள்ளவர்கள் நடுவில் வாசம் பண்ணுகிறார் (ஏசாயா 57:15)
நாம் அவருக்கு முன்பாக நொறுங்குண்டு பணிந்த ஆவியோடு வரும்போது அவர் நம் நடுவே வாசம் பண்ணுகிறார். நாமே தேவன் வாசம் பண்ணும் ஆலயம். எகிப்தின் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்த மோசே, தன் பாதரட்சைகளைக் கழற்றி, தன்னைத் தாழ்த்தி பற்றியெரிகிற முட்செடியில் தேவன் பேசியதைக் கேட்டபோது, நான் திக்குவாயும், மந்த நாவுமுள்ளவன் என்று அறிக்கையிடுகிறார். நாம் நம்மைத் தாழ்த்தும்போதுதான் தேவ சத்தத்தைக் கேட்க முடியும்.
ஏழாவதாக தேவன் தாழ்மையுள்ளவர்களைப் பரலோக இராஜ்யத்தில் பெரியவனாக வைப்பார் (மத்.18:4)
சிறுபிள்ளைகளைப் போல் நம்மைத் தாழ்த்தும்போது தேவன் பரலோக ராஜ்யத்தில் நம்மைப் பெரியவனாக வைப்பார். நாள்தோறும் வாதிக்கப்பட்டு ஐசுவரியவான் வீட்டு வாசலிலே அநாதையாய்க் கிடந்த லாசரு ஆபிரகாமின் மடியில் உட்காருமளவு உயர்த்தப்பட்டான்.
எனவே, பிரியமான தேவப் பிள்ளைகளே! நாம் நம்மைத் தாழ்த்தி மனத்தாழ்மையை அணிந்துகொள்வோமாக!