இஸ்ரவேல் புத்திரர் மற்ற ஜாதியாரைப் போல் எங்களுக்கும் ஒரு இராஜா வேண்டுமெனக் கேட்டார்கள். அதன் விளைவாக தேவன் சவுலை இஸ்ரவேலின் மேல் இராஜாவாக்கினார். இந்த சவுல் இராஜாவாகிறதற்கு முன்பு மிகவும் தாழ்மையுள்ளவனாகக் காணப்பட்டான். இராஜாவானவுடன் பேலியாளின் மக்கள் அவனை அசட்டை பண்ணியும் காது கேளாதவன் போல இருந்தான். இது அவனிடத்தில் காணப்பட்ட நல்ல சுபாவம். இவன் கர்த்தராலே தம்முடைய சுதந்திரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணப்பட்டவன். ஆரம்ப நாட்களில் அவன் மூலம் கர்த்தர் இஸ்ர வேலுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார். சவுல் ஓராண்டு ஆட்சி நடத்தியபின் அவன் கர்த்தருடைய காரியங்களில் துணிகரங் கொண்டான். தேவனுடைய மனிதனின் ஆலோசனையைப் புறக்கணித்தான். தேவ கட்டளையை முழுமையாக நிறைவேற்றாமல் பகுதி நிறைவேற்றி பாராட்டையும் தேவ ஒப்புதலையும் பெற விரும்பினான். தாவீதும் தம்முடைய சுதந்திரத்தின் மீது தலைவனாக தேவனால் ஏற்படுத்தப் பட்டவன். சவுலைப் போல் முறைப்படி அபிஷேகம் பண்ணப்பட்டவன். ஆரம்பத்தில் தாழ்மையுள்ளவனாயிருந்து பின் மனமேட்டிமையடையவில்லை. அவன் வாழ்நாள் முழுவதுமே கர்த்தருக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தினவனாகக் காணப்பட்டான்.
இன்று திருச்சபையில் சவுலைப் பின்பற்றுகிறவர்கள் தான் அதிகம். பதவியில் இருக்க இருக்க தாழ்மை பறந்துவிடுகிறது. நல்லாலோசனை கொடுக்கக் கூடிய சாமுவேல் போன்றவர்கள் அசட்டை செய்யப்படுகிறார்கள். ஆரம்பத்தில் கொண்டிருந்த வாஞ்சை “தேவனை எப்படியும் பிரியப்படுத்த வேண்டும்” என்பதே. ஆனால், இப்பொழுது தன்னையும், தன்னை அண்டினோரையும் திருப்தி செய்தாலே போதும் என்ற எண்ணம் வந்துவிட்டது. சவுலை இராஜாவாகத் தெரிந்துகொண்டதன் நோக்கம், தேவ ஜனங்களின் முக்கிய எதிரிகளான பெலிஸ்தரையும் அமலேக்கியரையும் முறியடித்து ஜனங்களை தங்கள் சுதந்தரத்தில் நிம்மதியாய் வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே. ஆரம்பத்தில் இதைச் செய்த சவுல் பின் நாட்களில் தேவ பிள்ளைகளையே தன் எதிரிகளாகக் கருதி அவர்களை உயர்வடைய விடாமல் தடுப்பதிலும், ஒழித்துக்கட்டுவதிலுமே தன் கவனத்தைச் செலுத்தி நாற்ப தாண்டுகளை வீணடித்துவிட்டான். எதிரிகள் வளர்ந்து பெருகினர். தேவ ஜனங்கள் தாழ்த்தப் பட்டார்கள். உயர்ந்த பதவிக்கு வருகிறவர்கள் உண்மையான எதிரியாகிய பிசாசையும் அதன் கிரியைகளையும் எதிர்க்காமல் தாவீதைப் போல் தேவனை உண்மையாக நேசிக்கிற தேவ பிள்ளைகளை பகைப்பதில் அல்லது தாழ்த்துவதில் முனைந்து நிற்கின்றனர். இது எத்தனை பரிதாபம்! உண்மை எதிரிகை கொட்டிச் சிரிக்கிறான்.
தாவீதை விரட்டிடும் சவுலின் கரங்களை இன்றும் ஆவிக்குரிய வட்டாரத்தில் காண்கிறோம். இவர்களுக்கு யார் முன்னேறினாலும் பரவாயில்லை தாவீது முன்னேறக் கூடாது. தாவீதை மற்றவர்கள் புகழக்கூடாது. இதுதான் முக்கியம். தாவீதைப் புகழுகிறவர்களையும் நேசிக்கிறவர்களையும் சவுல் கொலை செய்ய அஞ்சவில்லை. அது ஏபோத்தைத் தரித்த ஆசாரியனாயிருந்தாலும் விடவில்லை. எவ்வளவு துணிகரம்! தேவனுக்காகப் பிரித்தெடுக்கப்பட்ட குற்றமற்ற ஆசாரி யர்களைக் கொன்றான். தாவீது ஆசாரியர்களை ஆதரித்தான், கனப் படுத்தினான். தாவீது பெலிஸ்தியரை மடங்கடித்து வெற்றி பெற்றான், அவன் தேவப்பிள்ளைகளின் உண்மையான எதிரிகளை ஒழித்துக் கட்டுவதிலேயே கவனம் செலுத்தினான். சவுல் பதவிக்கு வந்தபின், அவனைச் சுற்றி நின்று இராஜ்ய பாரத்தின் மேன்மையையும் சுகத்தையும் அனுபவித்தவர்கள் பெரும்பாலும் அவன் கோத்திரத்தைச் சேர்ந்த வர்களே. “பென்யமீன் புத்திரரே தாவீது இராஜாவானால் இந்த மேன்மை உங்களுக்குக் கிடைக்குமா?” என்று சவுல் அவர்களைப் பார்த்து அடிக்கடி கேட்பான். தாவீது இராஜாவான பின் அவனோடு இருந்தவர்கள், அவனோடு பாடநுப வித்தவர்களும் தேசத்திலே வீரதீர செயல்களைச் செய்து தங்களை விசேஷித்தவர்கள் என்று நிரூபித்தவர்களுமே. தலைவர்கள், தங்களைச் சுற்றி நிற்கிறவர்கள் உறவினர்களாக இருக்கட்டும் என்று நினைக்கக்கூடாது. உறவினர்கள் தகுதியுள்ள வர்களாய் இருக்க வேண்டும். “எவன் சாலகத்தின் வழியாய் ஏறி எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற குருடரையும் முறிய அடிக்கிறானோ அவன் தலைவனாய் இருப்பான்” என்றான். அதனால் உறவினனான யோவாப் தலைவனானான். தாவீதைச் சுற்றிலும் நல்ல பலசாலிகள்; நல்ல அறிவாளிகள்; சவுலைச் சுற்றிலும் சவுலையும் இஸ்ரவேலையும் காப்பாற்ற முடியாத மதிப்பு மிக்க சொந்தக்காரரான ஊழியர்கள்; சவுலின் செம்பு பறிபோனது, வஸ்திரத் தொங்கல் அறுபட்டதுதான் மிச்சம். எதிரிகள் கோட்டைக்குள் புகுந்தார்கள். வந்தது அயர்ந்த நித்திரை சவுலின் படைக்கு. தலைவர்களைச் சுற்றிலும் விழித்திருக்கிற படைகள் தேவை. இவர்கள் காசுக்காகவோ பதவிக்காகவோ செயல்படுகிறவர்கள் அல்ல, தேவனை நேசிக்கிறதின் காரணமாகவே ஜீவனையும் பணயம் வைத்து சேவை செய்கின்றனர். இன்று ஊழியம் வளராமலிருப்பதற்கு ஒரு காரணம் தலைவர்கள் தங்களைச் சுற்றிலும் சாட்சியுள்ளவர்களையும் நிரூபிக்கப் பட்டவர்களையும் வைக்காது துதிபாடுகிறவர்களை வைத்துக் கொள்வதுதான். தலைவர்கள் என்று சொல்லும் போது எல்லா தலைவர்களையும் குறிக்கும். சபை மேய்ப்பர்களும் இதில் உள்ளடக்கம். சவுல் பல்லாண்டு ஆட்சி புரிந்தும் தேவனுக்கு ஆலயம் கட்டவேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு இருக்கவுமில்லை. அதற்கான பொருட்களை சேர்க்கவு மில்லை.
தேவன் தெரிந்துகொண்ட மனிதன் மேல் குற்றஞ்சாட்டி அவனை ஒழித்துக் கட்டுவதிலேயே தன் காலத்தை விரயமாக்கினான். தாவீது பதவிக்கு வந்ததும் உடன்படிக்கைப் பெட்டியை அதற்குரிய இடத்திற்கு கொண்டுவந்தான். கர்த்தருக்கு ஆலயம் கட்டவேண்டுமென்று துடியாய் துடித்தான். கட்ட உத்தரவு கிடைக்காதிருந்தும் திரளான பொக்கிஷங்களைச் சேர்த்தான். உசிதமானதையெல்லாம் கர்த்தருக்கென்று நேர்ந்துகொண்டான். தலைவர்களின் நோக்கம் சபையைக் கட்டுவதிலேயும் அதற்கான காரியங்களைச் செய்வதிலுமே இருக்கவேண்டும். உசிதமானதை யெல்லாம் தனக்காக அல்ல, கர்த்தருக்கே கொடுக்க வேண்டும், இன்று அநேகரின் கரங்களில் ஏலியின் குமாரர் கரங்களிலிருந்த முக்கூரான ஆயதங்கள் இருக்கின்றன. அதைக்கொண்டு கொழுமையானதை எடுத்துக்கொள்கிறார்கள். “யார் என்னைக் கேட்க முடியும்” என்று நினைக்கிறார்கள். ஒருவரும் கேட்காவிட்டால் மேலே இருந்து ஒருவர் கர்த்தருடைய பணங்களைத் தாறு மாறாய் சொந்த உபயோகத்திற்காய் செலவு செய்வதைப் பார்த்துக்கொண்டிருக்கிறாரே. இந்த அறிவு அநேகருக்கில்லை, ஆரம்பத்தில் ஊழியங்களில் கஷ்டப்படுகிறார்கள். ஊழியம் வளர்ந்த பின்னர் முந்திய கஷ்டங்களை சாக்குக்காட்டி அனுபவிக்கத் தொடங்கி ஆடம்பர வாழ்க்கைக்குள் பிரவேசிக்கின்றார்கள். தேவன் அளிக்காத வாழ்வை வாழ விரும்புகிறார்கள். சவுல் கொள்ளையிலிருந்து பலி செலுத்த நினைத்தான். தாவீதோ பலிப்பொருளை இலவசமாய் வாங்கிச் செலுத்த சம்மதியாமல் விலைக்கிரயமாய் வாங்கி செலுத்தினான். சவுலும் நாற்பது வருடங்கள் அரசாண்டான். தாவீதும் நாற்பது வருடங்கள் அரசாண்டான். சவுலின் ஆட்சி காலத்தில் இஸ்ரவேலர் அடிக்கடி எதிரிகளின் முன் நிற்க பெலனற்றவர்களாகவே இருந்தார்கள். ஆனால் தாவீது எதிரிகளின் மேல் முழுமையாக வெற்றி சிறந்தவனாகக் காணப்பட்டான். எத்தனை ஆண்டு பதவியில் இருக்கிறோம் என்பது முக்கியமல்ல. எப்படி ஜீவித்தோம் என்பதே முக்கியம். இன்றும் அநேகர் எத்தனை வருடங்கள் என்பதிலேயே நோக்கமாய் இருக்கிறார்கள். ஓராண்டு இருந்தாலும் “தேவ சித்தம் செய்தேன்” என்று சொல்ல வேண்டும். ஜனங்கள் மேல் துன்பமோ, வாதையோ வந்தபோது, தாவீது, “யாரால் வந்தது?” என்று கண்டுபிடிக்க, சவுலைப் போல் சீட்டுப்போட்டு பார்க்கவில்லை. “நான்தான் பாவம் செய்தேன். இந்த ஆடுகள் என்ன செய்யும்” என்று தேவனை நோக்கி கெஞ்சி அவர் இரக்கத்திற்காக மன்றாடினான்.
தேவன் தமது ஜனங்கள் தம்மை ஆராதிக்க வேண்டும் என்பதற்காகவே, எகிப்திலிருந்து அழைத்து வந்தார். நியாயாதிபதிகள் காலம் வரை சரியான ஆராதனை நடத்தப்படவில்லை. சவுல் இராஜாவான பிறகும் ஆராதனை முறைகளை ஏற்படுத்த எவ்வித முயற்சியும் செய்யவில்லை, ஆனால் தாவீதோ பாடகர் குழுக்களை ஏற்படுத்தி நேர்த்தியான பற்பல வாத்தியக் கருவிகளைச் செய்து, கர்த்தருக்கு ஆராதனை செய்யவும், துதி செலுத்தவும் ஜனங்களுக்குக் கற்றுக்கொடுத்தான். அவனே ஆராதனைக்குரிய பல நல்ல சங்கீதங்களை எழுதியிருக்கிறான். சவுலின் ஆபத்துக் காலத்தில், அவன் தன்னைத் தாழ்த்தி தேவனைத் தேடாமல் குறி சொல்லுகிறவர்களையே நாடினான். தாவீதோ ஒவ்வொரு சமயங்களிலும் தேவ ஆலோசனையின் படி நடந்து வெற்றி வாகை சூடினான். சவுலின் முடிவு தற்கொலை. பரிதாபம்! தாவீதோ “தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ் செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டான்” (அப்.13:36), என்று வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இன்றும் ஒரு (ஆவிக்குரிய) யுத்தம் ஆவிக்குரிய வட்டாரத்தில் நடந்துகொண்டே இருக்கிறது. இது கர்த்தர் வரும் வரை நடக்கும். ஆனால் வேதத்தில் சொல்லப்பட்டபடி “ஆவிக்குரியவர்கள் (தாவீதின் குடும்பம்) வரவர பலப்பட்டார்கள். மாம்சத்துக்குரியவர்கள் (சவுலின் குடும்பம்) வரவர பலவீனப்பட்டு போவார்கள் (2சாமு.3-1) என்பது திண்ணம்”. அதிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினது போல இப்பொழுதும் நடந்துவருகிறது.
திருச்சபையில் தாவீதைப் போன்றவர்கள் பெருகட்டும். தாவீதை விரட்டும் சவுல் கரங்கள் தளரட்டும். சவுலா, தாவீதா என்பதே இன்றைய பிரச்சனை.