கர்த்தருக்குள் பிரியமானவர்களே,
நம்முடைய தேவன் பரிசுத்தர், அவர் நம்மை பரிசுத்த வாழ்க்கை வாழவேண்டும் என்று அழைக்கிறார். பரிசுத்தமில்லாமல் ஒருவனும் பிதாவை தரிசிக்க முடியாது. பரலோக இராஜ்ஜியத்தில் தீட்டுள்ளதும், பொய்யையும் நடப்பிக்கிற ஒருவனும் உள்ளே பிரவேசிக்க முடியாது. பரிசுத்த ஆவியானவர் நம்மை பரிசுத்தமாக்குகிறவர். நம் வாழ்க்கையின் குறைகளை பரிசுத்தப்படுத்தி நிறைவாக்குகிறார். பரிசுத்தம் உள்ளவன் இன்னும் பரிசுத்தமடைந்து, மகிமையின் மேல் மகிமை அடைந்து அவருடைய சாயலைத் தரித்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். யோசு.3:5 வசனத்தில் “யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.” பரிசுத்தம் என்பது உலக ஆசை இச்சைகளை விட்டு வேறு பிரிந்து தேவனுக்காக வைராக்கியமாக வாழ்வது ஆகும். தேவன் நம்மை அசுத்தமாக வாழ அல்ல, பரிசுத்தமாக வாழவே அழைக்கிறார். பரலோகத்தில் கூட தூதர்கள் தேவனை “சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர் என்று ஓயாமல் புகழ்ந்து மகிமைப்படுத்துகிறார்கள்”.
தேவனால் அழைக்கப்பட்டு, தெரிந்துகொள்ளப்பட்டவர்களை தேவன் நீதிமான்களாக்குகிறார்.
1. நீதிமான்களாக்கப்படுதல் (Justification) – தேவனுடைய பார்வையில் தேவன் நேரடியாக பார்க்காமல் இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மூலம் பார்க்கிறார். அப்பொழுது நாம் நீதிமான்களாகப்படுகிறோம்.
2. நீதிமான்களாக்கப்பட்ட பின்பு நாம் பரிசுத்தவானாக மாற வேண்டும் (Sanctification) – தேவன் நீதிமானை சோதித்து, புடமிட்டு, தேவன் பரிசுத்தப்படுத்துகிறார்.
3. பரிசுத்தமாக்கப்பட்டவர்களை மகிமைப்படுத்துகிறார். (Glorification) கனத்துக்குரிய பாத்திரமாக மகிமையினாலும், கனத்தினாலும் முடி சூட்டிப் பயன்படுத்துகிறார்.
ரோமர் 8:30 வசனத்தைப் பார்க்கும்போது “எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.”
நீதிமான்களாக்கப்படுதல், பரிசுத்தமாக்கப்படுதல், மகிமைப்படுத்தப்படுதல் போன்றவைதான் கிறிஸ்தவ மூல உபதேசங்கள்.
பரிசுத்தமாக்குதல்
தேவனுடைய பிள்ளைகள் இரட்சிக்கப்பட்டவுடன் தேவன் சில சலுகைகள் கொடுத்து வழிநடத்துகிறார். இந்த வனாந்தர வாழ்க்கையில் நயங்காட்டி அழைக்கிறார். அன்புடன் அரவணைத்து எல்லா நன்மைகளையும் கொடுத்து சந்தோஷப்படுத்துகிறார். ஜெபங்களுக்கு உடனே பதில் கொடுக்கிறார். ஆனால் பரிசுத்தமாக்கப்படும் அனுபவத்தில் – தேவன் விரும்புகிற பரிசுத்தத்தை நாம் அடையும் வரை நம்மை புடமிட்டு, சோதித்து குமாரனுக்கு ஒப்பான சாயல் வரும்வரை சிட்சித்து உபத்திரவத்தின் குகையில் வைத்து உருவாக்குவார். ஜெபங்களுக்கு உடனே பதில் வராது. பாரம்பரிய ஜாதி, கட்டுகளிலிருந்து விடுதலை பெற ஜெபம், உபவாசம் தேவை.
யோவே.2:15 “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்”
பரிசுத்தமாக்குதலில் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியான தேவன் மூவருக்கும் பங்குண்டு. எப்படி ஒரு பாவி மனந்திரும்பி, இரட்சிக்கப்படும்போதும் ஞானஸ்நானம் எடுக்கும்போதும் திரியேக தெய்வம் மூவரும் இணைந்து செயல்படுகிறார்கள்.
1தெச.5:23 வசனத்தில், சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரம் முழுவதும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. மேலும் எபி.2:11 வசனத்தில் “…பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்;” மேலும் 1கொரி.6:11 வசனத்தில், “…கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள்…” என்று கூறப்பட்டுள்ளது.
4. தேவனுடைய வசனத்தின் மூலமாக நாம் சுத்திகரிக்கப்படுகிறோம். யோவான் 17:17 வசனத்தில் “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” மேலும் எபே.5:26 வசனத்தில் “தாம் அதைத்(சபையை) திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்” என்றும் கூறப்பட்டுள்ளது. தேவ ஆவியானவர் சபையை திருவசனத்தால் சுத்திகரிக்கிறார்.
5. யோவே.2:15 “சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்” சபையாக உபவாசித்து கண்ணீரோடும், அழுகையோடும் புலம்பலோடும் தேவனுடைய சமூகத்தில் மனந்திரும்புவார்கள் என்கிறார். ஜனத்தைக் கூட்டுங்கள். சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்கிறார். ஜெபமும், உபவாசமும், தேவனுடைய சமூகத்தில் காத்திருந்து ஜெபிப்பதும் சபையை பரிசுத்தப்படுத்தும். கடைசியாக தேவனுடைய இரத்தத்தினால் தேவன் நம்மை பரிசுத்தப்படுத்துகிறார். எபி.9:14 வசனத்தில் “நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்!” மேலும் எபி.13:12 “…இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகர வாசலுக்குப் புறம்பே பாடுபட்டார்.”
பழைய ஏற்பாட்டில் யோபு என்ற பக்தன் யோபு 1:5 வசனத்தில், “விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான்.” விருந்தில் கறைபடுவது உண்டு. பேச்சு அதிகமாக இருக்கும் . தகப்பனே தாயே உன் பிள்ளைகளுக்காக, பரிசுத்த வாழ்க்கைக்காக தேவ சமூகத்தில் உபவாசித்து ஜெபிக்கிறாயா?
ஏன் சுத்திகரிக்கப்பட வேண்டும்? (அல்லது) ஏன் பரிசுத்த வாழ்க்கை வாழ வேண்டும்?
முதலாவதாக – வெற்றி வாழ்க்கைக்காக சுத்திகரிப்பு தேவை
யோசு.3:5, “…உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்…” என்கிறார் யோசுவா. கிறிஸ்தவ வாழ்க்கையில் இரட்சிக்கப்பட்ட ஆரம்பத்தில் தேவன் ஜெபத்திற்கு உடனே பதில் கொடுத்து அநேக ஆசீர்வாதங்களையும், சலுகைகளையும் கொடுத்திருந்தாலும் பரலோகத்தை சுதந்தரிக்க, பரலோகத்தில் தேவன் நமக்கு வைத்திருக்கும் நித்திய ஆசீர்வாதங்களை சுதந்தரிக்க ஆயத்தமாக வேண்டும். வல்லமையைப் பெற்றுக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தெய்வ பயத்தோடு பூரணப்படுத்தக் கடவோம். பயத்தோடு பரிசுத்தத்தில் பூரணராகுவோம். தெய்வீக சுகம் என்பது பிள்ளைகளின் அப்பம். பிள்ளைகளின் Birth right. அதை சுதந்தரிக்க வேண்டும். சத்துருவை ஜெயிக்கும் நிலைமை தான் பரிசுத்தமான வாழ்க்கை. கர்த்தர் நமக்காக பந்தியை ஆயத்தப்படுத்தி, எண்ணெயால் அபிஷேகிப்பார். யோசு.7:13 “நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது” என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். சத்துருவை எதிர்க்க, ஜெயிக்க, பரிசுத்த வாழ்க்கை அவசியம்.
இரண்டாவதாக – சாபம் அகல சுத்திகரிப்பு தேவை
இயேசுவின் இரத்தம் பாவத்தையும் சாபத்தையும் போக்கினாலும், பழைய பாவ வாழ்க்கைக்கு மீண்டும் செல்லும்போது மீண்டும் சாபம் வரும் (எபி.6:4-8) வசனங்களின்படி மறுதலித்துப் போனவர்கள் தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைகிறார்கள். சபிக்கப்படுகிறதற்கேற்றதாய் முட்செடிகளையும், முள் பூண்டுகளையும் விளைவிக்கும் நிலத்தின் முடிவு – சுட்டெரிக்கப்படுவதே. சாபமும் பரிசுத்தமும் இணைந்து செல்லாது. பரிசுத்த வாழ்க்கை வாழ்ந்தால் சாபம் நம்மில் இராது.
மூன்றாவதாக – அற்புதம் நடக்க, சுத்திகரிப்பு தேவை
யோசு.3:5, “…உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்…” நாம் நம்மை தாழ்த்தி ஜெபித்தால் கர்த்தர் பெரிய காரியங்களையும், அற்புதங்களையும் செய்வார்.
நான்காவது – கர்த்தரின் சத்தம் கேட்க, மகிமையைக் காண சுத்திகரிப்பு தேவை
யாத்.19:10,11 வசனங்களில், கர்த்தர் மோசேயை நோக்கி, “நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார்.”
பயத்தோடு உள்ளான வாழ்க்கையையும் வெளிப்புற வாழ்க்கையையும் பரிசுத்தப்படுத்த வேண்டும். தீர்க்கதரிசிகளான மோசேயும், ஆரோனும் பரிசுத்தமாக இருந்ததால் கர்த்தரின் சத்தம் கேட்டது. கர்த்தரின் மகிமையை ஜனங்கள் கண்டார்கள்.
ஐந்தாவதாக – தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற சுத்திகரிப்பு தேவை
ஆதி.32:28 வசனத்தில், “அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்.” யாக்கோபு – எத்தனாக தகப்பனையும், சகோதரனையும் ஏமாற்றினான். தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியில் பிறந்தும், பரிசுத்த பெற்றோரின் மகனாக வாழ்ந்தும் பரிசுத்தம் இல்லை. கர்த்தரை விட்டு தூரமாய்ச் சென்றான். மீண்டும் அவனை கானானில் அனுப்புவதற்கு முன்பு பரிசுத்தப்படுத்தி, குறைவுகளை சரி செய்த பின்பு அனுப்ப தேவன் விரும்பினார். யாக்கோபை இஸ்ரவேலாக மாற்றிய பின்னரே கானானுக்குள் அனுமதித்தார். நாம் ஆசீர்வாதம் பெற நம் குறைகளை தேவ சமூகத்தில் அறிக்கை செய்து விட்டுவிட வேண்டும்.
ஆறாவதாக – நற்கிரியை செய்ய பரிசுத்தம் தேவை
2 தீமோ.2:21 “…ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்.” அநேகருக்கு நற்கிரியை செய்ய விருப்பம் உண்டு, செய்ய முடியாது. ஏனெனில் ஜீவியத்தில் அசுத்தம், பாவம், பாலிய இச்சைகள் ஜீவியத்தை கறைப்படுத்துகிறது. பரிசுத்த வாழ்க்கை வாழ்பவர்களே தேவனின் கரத்தில் கனத்துக்குரிய பாத்திரமாக பயன்பட முடியும்.
ஏழாவதாக – இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பாக மாறுவதற்கு சுத்திகரிப்பு தேவை
1யோவான் 3:2,3 வசனங்களில் பார்க்கும்போது “பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்.”
அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். மேலும் 2கொரி.6:18 வசனத்தில், “…நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.” 2கொரி.7:1 வசனத்தில், “…பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” அவரது வருகையின் நாளில் அவருக்கு ஒப்பாயிருப்போம் என்று நம்புகிறோம். எனவே இப்படிப்பட்ட நம்பிக்கை நமக்கு இருப்பதால் நம்மை சுத்திகரித்து வருகைக்கு ஆயத்தமாவோம்.
இதை வாசிக்கும் அன்பு நேயரே! இயேசுவின் வருகையின் நாள் மிகவும் சமீபம். அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாமும் மாறி அவரை தரிசிக்க வேண்டும். அவருடைய சாயலாக மாறியவர்கள் தான் அவரோடுகூட வருகையில் எடுத்துக்கொள்ளப்படுவார்கள். எனவே சத்துருவாகிய பிசாசை ஜெயிக்கவும், சாபங்களை விட்டு விலகி தேவ ஆசீர்வாதங்களை சுதந்தரிக்கவும் அற்புதங்களைப் பெறும்படியாகவும், நற்கிரியைகளைச் செய்து கனத்துக்குரிய பாத்திரமாக மாறவும் நம்மை பரிசுத்தமாக்கிக் கொள்ளுவோம்.
அல்லேலூயா! மாரநாதா!