சமாரியாவின் வாசலிலே

Written by Pr Thomas Walker

December 4, 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
“…நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்” (2இராஜா.7:1) என்று தேவனுடைய மனுஷன் எலிசா சொன்னான். இது எப்படி முடியும்? சமாரியாவில் கொடிய பஞ்சம். ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக் காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயிறு ஐந்து வெள்ளிக் காசுக்கும் விற்கப்பட்டது. ஸ்திரீகள் தங்கள் பிள்ளைகளை சமைத்து சாப்பிட்டார்கள். அவ்வளவு கொடிய பஞ்சம். இந்த வறுமை நிறைந்த சூழ்நிலையில் எலிசா சொன்ன செழுமை எப்படி ஏற்பட முடியும்? இதைக் கேட்ட இராஜாவின் பிரதானி ஒருவன், “இதோ கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா?” என்றான். தேவனுடைய மனுஷன் பிரதியுத்தரமாக, “உன் கண்களால் அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிட மாட்டாய்” என்றான்.
இந்திய தேசத்திலே ஒரு மாபெரும் எழுப்புதல் ஏற்படும். “இந்தியாவிலா? இது எப்படி முடியும்? எங்கும் விக்கிரக ஆராதனை நிறைந்திருக்கிறது. பிசாசுகள் வல்லமையாய் கிரியை செய்கின்றன. கிறிஸ்தவரின் எண்ணிக்கை மிகக் குறைவு. எழுப்புதல் நடக்கவே நடக்காது” என்ற சப்தமே கிறிஸ்தவ வட்டாரமெங்கும் கேட்கப்படுகிறது. சமாரியாவுக்கு செழுமை கொண்டு வருவது தேவனுக்கு எப்படி எளிதாய் இருந்ததோ அப்படியே இந்தியாவுக்கு எழுப்புதல் தீயைக் கொண்டுவருவதும் அவருக்கு எளிது.


அன்று சமாரியாவின் செழுமைக்கு தேவன் பயன்படுத்தியவரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் உண்டு. இன்று அநேகர் சில பெரிய ஊழியக்காரர் மூலமாகவோ அல்லது தங்களை ஆவிக்குரியவர்கள் என சமுதாயத்தில் காட்டிக் கொண்டிருக்கிறவர்கள் மூலமாகவோ எழுப்புதல் வரும் என்று நினைக்கிறார்கள். சமாரியாவை செழுமையாக்க தேவன் பயன்படுத்தியவர்கள் நான்கு குஷ்டரோகிகள்; சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்கள்; அருவருக்கப்பட்டவர்கள்.


யோவான்ஸ்நானகன் காலத்தில் ஒரு எழுப்புதல் ஏற்பட்டது. ஜனங்கள் திரளாய் மனந்திரும்பி அவனிடம் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். இந்த எழுப்புதலுக்கு பரிசேயரோ மற்றும் நியாயசாஸ்திரிகளோ கைகொடுக்கவில்லை (லூக்.7:30). மாறாக ஆயக்காரரும், பாவிகளும் மனந்திரும்பினார்கள். தேவனால் பயன்படுத்தப்பட்டார்கள். இயேசுவானவர் நாட்களின் எழுப்புதலிலும் பரிசேயரோ மார்க்கத் தலைவர்களோ மனந்திரும்பவில்லை. அற்பமாய் எண்ணப்பட்ட ஆயக்காரரும் மீன்பிடிக்கிறவர்களுமே பயன்படுத்தப்பட்டார்கள். சமாரியாவின் செழுமைக்கு பயன்பட்டோர்களிடம் சில தகுதிகள் இருந்தது. முதலாவதாக எதிரியின் பலமான அபாயமான முன்னணிக்கு பிரவேசிக்கத் துணிந்தார்கள். செத்தாலும் பரவாயில்லை என்று தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். தேவனும் எழுப்புதலுக்கு இப்படி துணிந்து தங்கள் பிராணனையும் பணயம் வைக்கிறவர்களையே பயன்படுத்த விரும்புகிறார். இவர்கள் இருட்டோடே எழுந்து முன்னணிக்குப் போனார்கள். இன்று அநேகர் தேவ ஊழியத்திற்கு நல்ல காலம் வர காத்திருக்கிறார்கள். டூவீலர் கிடைத்தால் போகலாம்; சப்போர்ட்  (நிதி உதவி) கிடைத்தால் போகலாம் என நினைக்கிறார்கள். இதுதான் போக வேண்டிய நேரம். உனக்கிருக்கிற கொஞ்ச பெலத்தோடே போ, தேவன் பார்த்துக்கொள்வார். விடியட்டும் என்று காத்திராதே. ஆத்துமாக்கள் அழிந்துகொண்டிருக்கிறார்கள். நீ இருட்டோடே போனால் சத்துருவும் இருட்டோடே போவான்.

முன்னணி வீரர்கள்:
முன்னணிக்குப் போகிறவர்களுக்கு பலமான சோதனை உண்டு. இன்று முன்னணிக்கு இருட்டோடே துணிந்து வந்த பலர் முன்னணிப் பரீட்சையில் வெற்றிப் பெற முடியவில்லை. அந்த குஷ்டரோகிகளுக்குப் புசிக்கவும், குடிக்கவும் கிடைத்தது. வெள்ளி, பொன், வஸ்திரம் நிறைய கிடைத்தது. தேவையை சந்திப்பது பாவமல்ல. அவர்கள் புசித்தார்கள், குடித்தார்கள். தவறல்ல. ஒளித்து வைத்ததுதான் தவறு. முன்னணி வீரர்கள் போஜனப் பிரியராய் இருக்கக் கூடாது. வெள்ளியும் பொன்னும் ஊழியத்தில் பயன்படுத்த கொடுக்கப்படும். சில சமயங்களில் தாராளமாகக் கிடைக்கும். சேர்த்துவைக்க அல்ல. அப்படிப்பட்டவர்கள் சேர்த்து குவித்து வைக்கும் தொல்லையை அடைவர் என வேதம் கூறுகிறது. பண ஆசையே எல்லாத் தீமைக்கும் வேர். விசுவாசத்தை மறுதலிக்கவும் அது காரணமாயிருக்கிறது. முன்னணி ஊழியரே ஜாக்கிரதை, பரலோகில் பொக்கிஷங்களைச் சேருங்கள்.

ஆவிக்குரிய உள்ளுணர்வு:
முன்னணியில் கண்ட சிறப்பான செழுமையைப் பற்றி வறுமையால் வாடிக்கொண்டிருக்கும் சமாரியனுக்குச் சொல்ல முடியாமல் அவர்கள் கவனம் பொருளாசைக்கு நேராகத் திருப்பப்பட்ட போது திடீரென்று அவர்களுக்குள் ஒரு பலமான உள்ளுணர்வு ஏற்பட்டது. “நாம் செய்வது நியாயமல்ல” என்பது. இன்று ஆவியானவர் அளிக்கும் உள்ளுணர்வை அசட்டை செய்வோர் அநேகர். அவர்கள் கவனம் ஊழியத்தைவிட்டு திசை திருப்பப்பட்டு விட்டது. அந்தோ பரிதாபம்! “இந்த நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள். நாம் மவுனமாயிருந்து பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்” உடனே அறிவிப்போம் என்ற சொல்லி நகரத்திற்குச் சென்றார்கள். சமாரியாவின் வறுமை நீங்கினது. செழுமை ஏற்பட்டது. தேவனுடைய மனுஷன் சொன்னபடியே அதைக் கண்டார்கள். விசுவாசியாதவன் கண்டான். அதிலே அவனுக்குப் பங்கில்லை.


இப்படிப்பட்ட எழுப்புதல் இந்தியாவிலே ஏற்படும் என்று விசுவாசிப்பவர்கள் காண்பார்கள், பங்கு பெறுவார்கள், பயனடைவார்கள். விசுவாசியாதோர் காண்பார், ஆனால் அதன் ஆசீர்வாதத்தை இழப்பர். பொழுது விடியுமட்டும் (நல்ல காலம் வருமட்டும்) காத்திருக்கலாகாது. இன்றே அறிவிக்க தீவிரப்படுவீர். இந்தியாவில் 6,00,000 கிராமங்களில் சபை கிடையாது. அறிவிக்க வேண்டியவர்களை சாத்தான் திசை திருப்பிவிட்டான். அநேகருக்கு அறிவிக்க ஆசை இருந்தும் இதுதான் அதற்குரிய நேரம் என்று உணரவில்லை. ஆத்துமாக்கள் கிறிஸ்துவற்றவர்களாய் சவக்காடுகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஒருநாள் எஸ்தர் ராணிக்கு முன்னணிக்குச் செல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சாவை எண்ணி சாக்குபோக்கு சொன்னாள். மொர்தெகாயினால் வலுவாய் உணர்த்தப்பட்ட பின் செத்தாலும் சாகிறேன் பரவாயில்லை, என் ஜனம் காக்கப்பட வேண்டும் என்று முன்னணி சென்றாள். எதிரி வீழ்ந்தான். தேவ ஜனத்துக்கு துர்ச்செய்தி மாறி, நல்ல செய்தி கிடைத்தது. இதை சூசான் நகரத்திலுள்ள யூதரும், எஸ்தரும், மொர்தேகாயும் அனுபவித்து அதைக் கொண்டாடினால் போதுமா? இது நியாயமா? 127 நாடுகளுக்கும் இச்செய்தி செல்ல வேண்டுமே! நற்செய்தி சூசானில் கிடைத்தும் 127 நாட்டிலுள்ளவர்களுக்கு கிடைக்காவிட்டால் அந்நாடுகளில் வசிக்கும் யூதர் அழிவை சந்திப்பார்கள். மாற்று கட்டளை (நற்செய்தி) குதிரைகள் மேலும் வேகமான ஒட்டகங்கள் மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது. யூதரின் அழிவுக்கென்று நியமிக்கப்பட்ட நாளுக்கு முன் அனுப்ப எல்லா நடவடிக்கைகளையும் சூசானில் இருந்த யூதர் எடுத்தனர். அதன் பயனாக மாபெரும் விடுதலை. துக்கம் சந்தோஷமாக மாறியது.


இந்தியாவில் மாபெரும் எழுப்புதல் ஏற்பட செத்தாலும் சாகிறேன், முன்னணிக்குப் போவேன், நற்செய்தி வேகமாக அறிவிப்பேன் என்று தீவிரம் காட்டுவோர் தேவை. தேவன் முன்னணி வீரர்களை தேடிக்கொண்டிருக்கிறார். இதுதான் ஆவிக்குரிய நாள் – காத்திருக்கலாகாது என்போரை தேடிக்கொண்டிருக்கிறார். இதில் நாம் ஒரு வேகமான அஞ்சற்காரராக இருப்போமா? சிந்திப்பீர்! செயல்படுவீர்!!






Author

You May Also Like…

Share This