ஒரு நாள், நான் என்னுடைய காரை, ஓட்டிச் சென்றபோது, அதன் எஞ்ஜின் பகுதியிலிருந்து, சில வித்தியாசமான சத்தங்கள் வந்தது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நமது கிறிஸ்தவ நண்பர்கள் பலரிடமும் பழகிய அனுபவத்தில், என்னுடைய வாகனத்தில் வந்த சத்தத்திற்கும், பிசாசுக்கும் தொடர்பு இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், சத்தம் வந்தது மட்டுமல்லாது, ஸ்டியரிங் வீலும், திருப்புவதற்கு சற்று கடினமாக இருந்தது.
காலையில் என்னுடைய வாடிக்கை மெக்கானிக்கிடம் காரை எடுத்துச் சென்றேன். நான் அவரிடம் சென்று, தம்பி, ஏதோ “பிசாசின் சேட்டை” எஞ்ஜின் பகுதியில் விநோத சத்தம் வருகிறது என்று சொன்னேன். அவரோ ஒரு இந்து நண்பர். அவர் சிரித்துக்கொண்டே, வேறு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? எனக் கேட்டார். நான் அவரிடம் “ஸ்டியரிங் வீலும்” திருப்ப சற்று கடினமாக இருக்கிறது எனக் கூறினேன்.அவர் ஒன்றும் சொல்லாமல், உள்ளே சென்றார். ஒரு கேனில் ஆயில் கொண்டு வந்து, ஸ்டியரிங் ஆயில் டேங்கில் ஊற்றினார். பிறகு என்னை, காரை எடுத்துக்கொண்டு போகக் கூறினார். ஆயிலுக்கு பணம் வேண்டாம் எனக் கூறிவிட்டார். பின்பு காரில் எந்த பிசாசின் சத்தமும் வரவில்லை. ஸ்டியரிங் வீலும் சரியாகி விட்டது.
டேங்கில் போடப்பட்ட “கொஞ்சம் ஆயில்” பிசாசை விரட்டிவிட்டது. இப்படித்தான் நாம், நம்முடைய அன்றாட வாழ்வின் பிரச்சனைகளுக்கு, பிசாசு என நினைத்துக் கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது “எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்” அதைப் புரிந்துகொள்ள, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, விசுவாசத்தில் உறுதியாயிருந்து, பிசாசுக்கு எதிர்த்து நிற்போம். கிறிஸ்துவுக்காக, கொஞ்சக் காலம் பாடநுபவிக்கிற நம்மை, தேவன் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக!