கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
நாம் ஆராதிக்கும் தேவன் உயிருள்ளவர். நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். வானத்திலும், பூமியிலும் சர்வ வல்லவர். உலகத்தின் முடிவு பரியந்தமும் நம்மோடு இருந்து வழி நடத்துபவர். வானத்திலும், பூமியிலும் சகல அதிகாரமும் உடையவர். நமக்காக யுத்தங்களைச் செய்கிறவர். தேவன் தெரிந்துகொள்ளப்பட்ட அவருடைய ஜனத்துக்கு ஒப்பானவர்கள் யாருமில்லை. மீகா 2:13ஆம் வசனத்தில் “தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார். கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்” தேவன் தம்முடைய ஜனத்தின்மேல் அக்கறையுள்ளவர், விசாரிக்கிறவர். எனவே அவர்மேல் நம்பிக்கை வைத்து அவரைச் சார்ந்துகொள்ள வேண்டும். நம்முடைய வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுது ஜெயத்தை சுதந்தரிக்க முடியும்.
நாம் எவற்றையெல்லாம் நினைக்க வேண்டும்?
1) இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று நினைத்துக்கொள்:
2தீமோ.2:8ஆம் வசனத்திலே தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசு கிறிஸ்து என் சுவிசேஷத்தின்படியே மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். நம் இருதயத்தின் எண்ணங்கள் பல காரியங்களை நினைக்கலாம், முக்கியத்துவம் கொடுக்கலாம். ஆனால் பிரதானமான காரியம் தேவனால் இயேசு மரித்தோரிலிருந்து எழுந்தவர் என்பதை மறக்காமல் நினைத்துக்கொள்ள வேண்டும்.
2) எகிப்திலிருந்து புறப்பட்டதை நினைத்துக்கொள்:
உபா.16:3ஆம் வசனத்தில் “நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்;” எகிப்திலிருந்து புறப்பட்ட நாளை இரட்சிக்கப்பட்ட நாளாக நினைத்துக்கொள். தேவன் நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கிய நாளை நினைக்க வேண்டும்.
3) அடிமைத் தனத்திலிருந்து உன்னை மீட்டுக்கொண்டதை நினைக்க வேண்டும்:
உபா.15:15ஆம் வசனத்தில் “நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்;” நாம் எப்படி பாவத்துக்கும் சாத்தானுக்கும் அடிமைகளாக இருந்தோம். தேவன் பஸ்கா பலியாகிய இயேசுவின் விலையேறப் பெற்ற இரத்தத்தால் நம்மை மீட்டுக்கொண்டார் என்று நினைவுகூர வேண்டும்.
4) அவரின் வழிகளை நினைத்துப்பார்க்க வேண்டும்:
உபா.8:2ஆம் வசனத்தில், “…அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக” வனாந்திரத்தில் கஷ்டமான சூழ்நிலைகளில் தேவன் எப்படி வழிநடத்தி நம்மை பாதுகாத்தார், பராமரித்தார் என்று நினைப்பாயாக.
5) அவர் பதிலளிக்கிறவர் என்று நினைத்துப்பார்க்க வேண்டும்:
உபா.7:9,10ஆம் வசனத்தில், “…உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய்” தேவன் தம்மை தேடுகிறவர்களுக்கு பதிலளிக்கிறவர், ஆயிரம் தலைமுறை மட்டும் உண்மையை காக்கிறவர். தம்மை பகைக்கிறவர்களுக்கு பதிலளிப்பவர் என்று நினைக்க வேண்டும்.
6) ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைக்க வேண்டும்:
உபா.5:15ஆம் வசனத்தில் “நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார்.”
தேவன் பாவக் கட்டிலிருந்த நம்மை எப்படி அவரின் அன்பின் குமாரனுடைய ராஜ்ஜியத்திற்கு நம்மை விடுதலையாக்கி கொண்டுவந்தார் என்று நினைத்து, ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க வேண்டும்.
தேவன் இயேசுவை ஏன் எழுப்பினார்!
1) மரணம் இயேசுவை கட்ட முடியவில்லை
அப்.2:24ஆம் வசனத்தில் “தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது”
2) மகிமைப்படுத்தி, சாட்சியாக நிறுத்தும்படி எழுப்பினார்
அப்.3:15ஆம் வசனத்தில், “ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம்” சீஷர்களுக்கு 40 நாட்கள் காட்சி கொடுத்தார். அப்போஸ்தலர் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து வல்லமையாக சாட்சி பகிர்ந்தனர்.
3) உபத்திரவங்களை, துன்பங்களை தடுக்கும்படி எழுப்பினார்
அப்.9:3ஆம் வசனத்தில் “அவன்(சவுல்) தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான்” சவுலை தமஸ்கு வரும்வரை விட்டுவிட்டார். பிறகு அனுமதிக்கவில்லை. திராணிக்கு மேல் சோதிக்காதவர். எல்லாவற்றிற்கும் அளவு உண்டு. தப்பித்துக்கொள்ள வழி செய்வார்.
4) பிதாக்களுக்கு அருளிய வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற எழுப்பினார்
அப்.13:33,34ஆம் வசனங்களில், “இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம்.”
5) பரிந்துபேசுகிறவராய் இருக்கிறார்
ரோமர் 8:34ஆம் வசனத்தில் “ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே” அவர் பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்தார், நமக்காக பிதாவிடம் பரிந்துபேசுகிறார்.
6) பாவ மன்னிப்பும், விடுதலையும் கிடைக்கிறது!
அப்.13:37,38,39ஆம் வசனங்களில் “தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது” தேவன், இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினதினால் பாவமன்னிப்பு உண்டாகிறது. நீதிமான்களாக மாற்றப்படுகிறோம்.
7) உயிர்த்தெழுந்ததால் பூரண கிருபை உண்டாகிறது
அப்.4:33ஆம் வசனத்தில் “கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது” நாமும் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி கொடுக்கும்போது பூரண கிருபை நம்மேல் இருக்கும்.
அன்பு நண்பரே! இயேசுவை தேவன் மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்று விசுவாசிக்க வேண்டும். தினமும் நினைக்க வேண்டும். ஓய்வுநாளில் நம்மை பாவத்திலிருந்து விடுதலையாக்கியதற்காக அவரை மகிமைப்படுத்தி ஆராதிக்க வேண்டும். அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் அமர்ந்து நமக்காக பிதாவிடம் பரிந்துபேசுகிறார். சோதனை உபத்திரவங்களிலிருந்து தப்புவிக்கிறார். திராணிக்குமேல் சோதிக்கப்பட அவர் இடம் கொடுக்கமாட்டார். இவர் உயிர்த்தெழுந்ததால் பாவ மன்னிப்பும், விடுதலையும் நமக்கு கிடைக்கிறது. உயிர்த்தெழுதலைக் குறித்து நாம் சாட்சி பகிரும்போது நம்மேல் பூரண கிருபை உண்டாகிறது. உயிர்த்தெழுதலுக்கு நாம் சாட்சிகளாய் வாழ்வோம்! இயேசுவின் நாமத்திற்கு எந்நாளும் மகிமை உண்டாவதாக! ஆமென்.