“இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்” (1கொரி.15:51)
இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகையின்போது உயிரோடிருக்கும் பரிசுத்தவான்கள் மறுரூபமடைவார்கள். கண்மூடித் திறப்பதற்குள் நாம் மறுரூபமாகி இருப்போம். எப்படி இருக்கும் என சிந்தித்துப் பாருங்கள். அவர் வரும் நாளையாவது, நாழிகையாவது அறிய மாட்டோம். ஆகவே நாம் வழக்கம் போல் பள்ளி செல்பவர்கள் பள்ளிக்கும், வேலைக்குச் செல்பவர்கள் வேலைக்கும் சென்றுகொண்டிருப்பார்கள். அந்த நாளுக்கும் மற்ற நாட்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இராது. ஆனால், திடீரென்று மேகங்கள் மேல் இயேசு வருவார். தமது பரிசுத்தவான்களைக் கூட்டிச் சேர்ப்பார். உயிரோடு இருக்கும் நாம், கண்ணிமைக்கும் நேரத்தில் மாறிப் போவோம்; மறுரூபமாவோம். எத்தனை ஆச்சரியம்! அந்த நாளை எண்ணி அகமகிழ்வோம். அவர் நம்மைச் சேர்த்துக்கொள்ளும் நாளை எண்ணிக் களிகூறுவோம். இந்தப் பூமியில் உள்ள துக்கங்கள் இல்லை, இனி இயேசுவோடு என்றும் ஆனந்தமாய் களிப்போம். எக்காளம் முழங்கும், இயேசு வருவார், நம்மை இனிதாய் சேர்த்துக் கொள்வார். அந்த நாளுக்காக ஆயத்தப்படுவோமா? இயேசு கிறிஸ்துவின் வருகையின் நாளைக் காண ஆவலோடு காணப்படுவோம்.
இயேசு கிறிஸ்துவின் முன் நிற்க பாத்திரவான்கள்
“உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” (லூக்கா 21:34)
உங்கள் இருதயம் பாரமடைய வேண்டாம். கவலையினால், பெருந்திண்டியினால், வெறியினால் பாரமடைய வேண்டாம். கவலை பெரிய நோய். பல நோய்களுக்கும் அதுதான் காரணம். அதுமட்டுமல்ல இயேசுவோடு நடக்க விடாதபடி நம்முடைய இருதயம் வழுவிப் போகிறதற்கும் அதுதான் காரணம். கவலை வந்ததும், அவிசுவாசம், முறுமுறுப்பு, பயம் இப்படிப் பல தவறான குணாதிசயங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. தேவனை விட்டு விலகுவதற்கேதுவாய் அவைகள் நெருக்குகின்றன. எனவேதான் விசுவாசம் வளரவிடாமல் நெருக்கும் முட் செடிகள் என்று உலகக் கவலையையும், ஐசுவரியத்தின் மயக்கத்தையும் இயேசு கூறியுள்ளார். முட்செடிகள் உள்ள இடத்தில் உள்ள விதைகள் வளர முடியாமல் தவிப்பதுபோல், இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசம் வளராமல் தடுமாறுகிறது. உலகக் கவலையையும், ஐசுவரியத்தின் மயக்கத்தையும் எடுத்துப் போடுவோம். கவலைப் படுவதினால் எதையாவது சாதிக்க முடியுமா? முடியாது. உங்கள் மனது, இருதயம் சமாதானம் இழக்கும். சரீரத்தில் வியாதி வரும், எனவே இன்று ஒரு தீர்மானம் செய்வோம். கவலையை என் உள்ளத்தில் இருந்து அறவே ஒழிப்பேன் எனத் தீர்மானம் செய்வோம். ஐஸ்வரியத்தின் மயக்கம் வேண்டாம். நமக்கு உள்ளவைகள் போதும் என இருப்போம். நாம் திருப்தி அடைய வேண்டும். இயேசு கிறிஸ்துவின் அன்பினாலே அவர் தரும் ஆசீர்வாதங்களிலே திருப்தி அடைய வேண்டும். இல்லாத பொருளுக்காக கண்களை அலையவிடக் கூடாது. மாயையான பொருளுக்காக உலகத்தை நோக்கி ஓடிவிடக் கூடாது. உங்களுக்கு இன்னது தேவை என்பதை பிதா அறிவார். அதைக் கட்டாயம் தருவார். அவர் உங்கள் பிதா. உங்களைப் பார்க்கிலும், உங்களுக்கு எது நல்லது என பிதாவுக்குத் தெரியும். எனவே உங்களுக்குத் தேவையானதைத் தருவார். எனவே கர்த்தரை முழுமையாய் விசுவாசியுங்கள். கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிடுங்கள். அவர் உங்களை ஆதரிப்பார். எத்தனை ஆச்சர்யம்! நீங்கள் நிம்மதியாகக் கர்த்தரை சேவித்து வருகையிலே இயேசு கிறிஸ்துவின் முன் நிற்கலாம். இயேசு கிறிஸ்து வரும்போது நிச்சயமாக எடுத்துக்கொள்ளப் படுவீர்கள். வேண்டாத பாவங்களை இறக்கி வைப்போம்; இயேசு கிறிஸ்து வருகையிலே இலகுவான இருதயத்தோடு பறந்து செல்வோம்.
விழித்திருந்து ஜெபிப்போம்
“ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார்” (லூக்கா 21:36)
ஜெபம் மிகவும் அவசியம். ஜெபத்தினால் கர்த்தரில் பலப்படுகிறோம். கர்த்தரின் சாயலைத் தரித்துக்கொள்கிறோம். நம்மில் அநேகர் ஜெப வேளைகளில், நமது உலகப் பூர்வமான தேவைகளுக்காகவே மட்டும் ஜெபிக்கிறோம். இவைகள் தேவைதான், ஆனால், வெறும் உலகப்பூர்வமான தேவைகளுக்காக மட்டுமே ஜெபித்தால் வளர்ச்சியடைய முடியாது. ஜெபம் தேவனோடு, நமது ஆண்டவரோடு ஐக்கியப்படச் செய்யும் ஒரு ஈவு. ஜெபத்திலே, இயேசுவையும் அவருடைய அன்பையும், வல்லமையையும் வாஞ்சித்துத் தேடவேண்டும். அப்பொழுது நாம் வளர்ச்சியடைய முடியும். எப்படி ஜெபிக்க வேண்டும் என ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு வழிகாட்டியுள்ளார். அதனை தேவனை மகிமைப்படுத்த, பிதாவின் சித்தம் நிறைவேற, தேவனுடைய ராஜ்யம் விரிவடைய ஜெபிக்க வேண்டும் எனவும், மற்றவர்களை மன்னித்து, மன்னிப்பைப் பெறவும், அன்றைய தின ஆகாரத்தைப் பெறவும், சோதனையின்றி காக்கப்படவும் ஜெபம் பண்ண வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. அப்போஸ்தலனாகிய பவுல் போல தேவனுடைய சித்தம் நிறைவேற, தேவ அன்பை அறிய, உள்ளான மனுஷனில் பரிசுத்த ஆவியில் பலப்பட இப்படிப் பல காரியங்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகிறோம். இப்படிப்பட்ட நாம் தேவனை அறியவும், அவருடைய சித்தம் செய்யவும், தேவ ராஜ்யம் விரிவடையவும் ஜெபம் பண்ண வேண்டும். பரத்துக்கடுத்த காரியங்களுக்காக ஜெபம் பண்ணி வளர்ச்சியடையும்போது, நம்முடைய ஜெபம் மிகுந்த பெலனுள்ளதாய் இருக்கும். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்; அப்பொழுது இவைகள் கூட கொடுக்கப்படும் என்றார். நமது ஜெபம் தேவனில் பலப்பட கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவில் வளர ஒரு கருவியாக இருக்கட்டும். இப்படி பரத்துக்கேதுவான காரியங்களில் நாம் நாட்டம் வைக்கும்போது, நாம் இருக்கும் உலகை அல்ல, பரம காரியங்களை வாஞ்சிக்கிறோம். அப்பொழுது, நாம் வருகையில் இயேசுவை சந்திக்க ஆயத்தப்பட வசதியாய் இருக்கும். ஜெபம் பண்ணி, கர்த்தருடைய வருகையில் எடுத்துக்கொள்ளப்படத் தக்கதாக விழித்திருப்போம்.