கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
தேவன் மனிதன் தன் பக்கமாக பாவத்தை விட்டு மனந்திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறார். “மனந்திரும்புங்கள் பரலோக ராஜ்ஜியம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கித்தார்”. மனந்திரும்பும் ஒரு பாவியின் நிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோசம் உண்டாகும் என்று இயேசு கூறினார். இன்றும் சபை விசுவாசிகள் தேவன் பக்கமாய் மனந்திரும்பி வாழவேண்டும் என்று கூறி அழைக்கிறார். –((சிமிர்னா, பிலதெல்பியா போன்ற ஆசியா மைனரில் உள்ள சபைகள் ஒரு குறைவும் இல்லாமல் நெருங்கி தேவனுடன் யோவான் வெளிப்படுத்தின விசேஷத்தில் கூறுகிறார்))– இன்றைய நாட்களில் உள்ள திருச்சபைகளிலும் சீர்கேடுகளும், பாவங்களும், தேவபக்தியின் வேஷத்தை தரித்துக்கொண்டு பெலனை மறுதலிக்கிறவர்களாக காணப்படுகின்றனர்.
சபை எந்த காரியங்களில் மனந்திரும்ப வேண்டும் என நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஆமோஸ் 4:6 வசனத்தில் “ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்” வெளிப்படுத்தின விசேஷத்தில் சபைகளின் குறைவுகளைப் பற்றி குறிப்பிடுகிறார்.
1) எபேசு சபை மக்கள் மனந்திரும்ப வேண்டிய விஷயம்:
வெளி.2:4,5 வசனங்களில், “ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கி விடுவேன்” என்றார்.
எபேசு சபையில் 8 நற்குணம் இருந்தும் ஒரே ஒரு குறை இருந்தது. அதுவும் அது விளக்குத் தண்டை எடுக்கப் போதுமானதாகயிருந்தது. மிகவும் ஆபத்தான நிலையில் ஆவிக்குரிய வாழ்வு காணப்பட்டது. அநேகர் ஆவிக்குரிய நிலைமையில் தோல்வியான நிலைமையில் தேவனோடு உள்ள ஐக்கியத்தில் குறைவுள்ளவர்களாய் ஆதி அன்பை இழந்து காணப்படுவர். ஆனாலும் உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களை வைத்து தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்வார்கள். ஆனாலும் தேவனுடைய பார்வையில் நாம் குறைவுள்ளவர்கள். நம்மை நாமே வஞ்சிக்கவோ, தேற்றிக்கொள்ளவோ கூடாது. எனவே மனந்திரும்பு என்று தேவன் எச்சரிக்கிறார்.
1) நற்கிரியை, 2) பிரயாசம், 3) பொறுமை, 4) பொல்லாதவர்களை சகிக்க கூடாத தன்மை, 5) சோதித்து பொய்யரைக் கண்டுபிடித்தல், 6) பாடுகளைச் சகித்தல் 7) பாடுகளில் பொறுமை 8) ஆண்டவரின் நாமத்துக்காக இளைப்படையாமல் பிரயாசம். இத்தனை நற்குணங்கள் இருந்தும் தேவ அன்பு இல்லாமல் இருக்க முடியும். தேவனை நேசிக்காமல் இருக்க முடியும்.
ஆலயத்தையோ, ஊழியத்தையோ நேசிக்கலாம். ஆனால் ஆண்டவரை நேசித்து அவரது கற்பனைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 1கொரி.13:1-3 “நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம் போலவும், ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் இருப்பேன். நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை”
கர்த்தரின் வருகையின்போது அன்பு, விசுவாசம் குறையும். வேதம் வாசித்தல், ஜெபம், சுவிசேஷ ஊழியம் இடைவிடாமல் எப்பொழுதும் செய்யவேண்டும். இந்த காரியங்களில் குறைவுபட்டால் அன்பு குறைந்துவிட்டது என்பதற்கு அடையாளம்.
2) பெர்கமு சபை மக்கள் மனந்திரும்ப வேண்டிய விஷயம்:
வெளி.2:14 வசனத்தில், “ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்” நிக்கொலாய் மதஸ்தர்-சபையார் ஒன்றும் தெரியாதவர்கள். அபிஷேகம் பண்ணப்பட்ட குரு தான் எல்லாம் செய்யவேண்டும் என்று சொல்லுதல் பொருளாசையை விட்டு திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார். போதகருக்கு நாங்கள் அடிமை என்கிறார்கள். இப்படிப்பட்ட குறைகள் நம்மிடமிருந்தால் நாம் அவற்றை நம்மைவிட்டு சரிசெய்ய வேண்டும்.
3) தியத்தீரா சபை மக்கள் மனந்திரும்ப வேண்டிய விஷயம்:
வெளி.2:20 வசனத்தில் “ஆகிலும், உன்பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்” தியத்தீரா சபையாரைப் போல துர் உபதேசத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. மனிதரைப் பிரியப்படுத்தக் கூடாது. ஊழியக்காரர்கள் மனிதனைப் பிரியப்படுத்தினால் நாம் கர்த்தருடைய ஊழியக்காரர் அல்லவே. நாம் தேவனைப் பிரியப்படுத்தி வாழவேண்டும்.
4) சர்தை சபை மக்கள் மனந்திரும்ப வேண்டிய விஷயம்:
வெளி.3:2,3,4 வசனங்களில், “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்;…” மனந்திரும்பாதவனை ஜீவ புத்தகத்திலிருந்து அவன் நாமத்தை கிறுக்கிப் போடுவார். ஆயத்தமில்லாமல் வாழ்ந்தால் பெயர் கிறுக்கப்படும்.
5) லவோதிக்கேயா சபை மக்கள் மனந்திரும்ப வேண்டிய விஷயம்:
வெளி.3:14-19 வசனங்கள் இது கடைசி காலத்தில் உள்ள சபை. நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். …நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்னும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால் நீ ஜாக்கிரதையாயிருந்து மனந்திரும்பு என்கிறார்.
இரண்டு வகை விசுவாசம் உண்டு. அறிக்கையிட்டுப் பெற்றுக்கொள்வது, கொடுத்தால் தேவனிடத்தில் பெற்றுக்கொள்ளும் அன்பு இது திருப்பிப் போடப்படாத அப்பம் போன்ற நிலை. அக்கினியில் புடமிடப்பட்ட விசுவாசம் தேவை. யோபுவைப் போல விசுவாசத்திற்கான சோதனைகள் வந்தாலும் நிலைத்திருக்க வேண்டும். நிர்பாக்கியம் வெற்றியில்லாத வாழ்க்கை. தன்னை ஐசுவரியவான் என்று சொல்லுவது பரிதபிக்கப்படத்தக்க வாழ்க்கை. லவோதிக்கேயா சபை இம்மைக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ளுதல், ஆவிக்குரிய தரித்திரம், குருடன், ஆத்தும பாரம்-தரிசனம் இல்லாத வாழ்க்கை, பாரம்பரியத்தைப் பின்பற்றுதல், தேவநீதியைத் தேடாமல் சுயநீதியில் நடத்தல், மாம்சத்துக்குரியவர்களாக காணப்படுதல், ஆவிக்குரிய நிலைமையில் வளர்ச்சியில்லாமல் காணப்படுதல். இதுவே லவோதிக்கேய திருச்சபையின் நிலை.
அன்பு நண்பரே! தேவ ஆலோசனை என்னவென்றால், இன்றைய திருச்சபைக்குத் தேவை சோதிக்கப்பட்ட விசுவாசம். கொன்றுபோட்டாலும் அவர்மேல் நம்பிக்கையாக இருக்கவேண்டும். அவர் எங்களை விடுவிக்காமல் போனாலும் அவர் பேரில் நம்பிக்கையாயிருப்பேன் என்ற விசுவாசம் தேவை. அக்கினிச் சூலையிலிருந்து வெளிவந்தவர்களின் விசுவாசத்தை நேபுகாத்நேச்சார் கண்டு வியந்து தேவனைப் புகழ்ந்தான். மேலும் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி உடை உடுத்த வேண்டும், ஆவியின் அபிஷேகம் பெற்று ஆவிக்குரியவர்களாய் வாழவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். ஆமென்!