நினைத்துக்கொள்ளுங்கள்

Written by Pr Thomas Walker

June 21, 2007

பிரியமான தேவனுடைய பிள்ளைகளே! சில காரியங்களை நாம் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள வேண்டும். சில காரியங்களை நினைத்துக் கலங்கக்கூடாது. ‘நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று வேதம் கூறும் சில காரியங்கள் உண்டு. அவற்றைக் குறித்து நாம் இங்கு பார்க்கலாம்.

முதலாவதாகதரித்திரரை நினைத்துக்கொள்ள வேண்டும் (கலா.2:10)
தரித்திரரை நாம் எப்பொழுதும் நினைக்க வேண்டும். தேவன் இவ்வுலகத்தில் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்பு கூருகிறவர்களாகவும், தாம் வாக்குத்தத்தம் பண்ணின ராஜ்யத்தை சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்து கொள்ளவில்லையா என்று யாக்.2:5ல் பார்க்கிறோம். கர்த்தரே ஒருவனை தரித்திரம் அடையச் செய்கிறவரும், மற்றொருவனை உயர்த்துகிறவருமாயிருக்கிறார் (1சாமு.2:7). தரித்திரரை ஒடுக்கும்போது அவர்களைப் படைத்த கர்த்தரை நாம் நிந்திக்கிறோம் (நீதி.14:31) என்பதை மறந்துபோகக் கூடாது. நாம் இயேசு கிறிஸ்து அடைந்த தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாக இருக்கிறோம் (2கொரி.8:9). தரித்திரரை கனம்பண்ணும் போது அவர்களை உண்டாக்கின கர்த்தரை கனம் பண்ணுகிறோம் (நீதி.14:31). தேவனைக் கனம் பண்ண விரும்பும் நாம் தரித்திரருக்கு இரங்க வேண்டும். உத்தம விதவைகள், ஏழைகள், சபையில் போஷிப்பிக்கப்பட வேண்டும். தரித்திரனாகிய லாசருவுக்கு இரங்காத ஐசுவரியவான் நரகத்தில் தள்ளப்படுவதை பார்க்கிறோம். நாம் பெற்ற ஐசுவரியத்தின் ஒரு பகுதியை தரித்திரருக்கு செலவிடுவதில் தயக்கம் கூடாது. தரித்திரனுக்கு இரங்குகிறவனோ ‘பாக்கியமடைவான்’ என்று நீதி.14:21 கூறுகிறது. அதனால் நாம் தரித்திரரை நினைத்துக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாகலோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ள வேண்டும் (லூக்கா 17:32)
லோத்தின் மனைவி கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிய தாமதித்தாள். பின்னிட்டுப் பார்த்தாள். உப்புத்தூணாய் மாறிப்போனாள். அவள் கால்கள் சோதோமுக்கு வெளியே இருந்தாலும் உள்ளம் சோதோமுக்குள் இருந்தது. அவள் சோதோமை விட்டாலும் சோதோம் அவளை விடவில்லை. தேவனுக்காக விட்டுவந்த அருவருப்பான காரியங்களில் மனம் இருக்குமானால் நமது நிலை பரிதாபமானது. பின்வாங்கிப் போகிறவர்கள் மேல் தேவன் பிரியமாயிருக்க மாட்டார் (எபி.10:38). நாம் தேவனுடைய வசனத்தை விசுவாசித்து அவரில் வேர் கொள்ளாவிட்டால் தேவனைவிட்டு பின்வாங்கிப் போவோம். தேவனைவிட்டு பின்மாற நினைக்கும் காரியங்கள் நம் மனதில் வரும்போது லோத்தின் மனைவியை நினைத்துக்கொள்ள வேண்டும்.
மூன்றாவதாகஓய்வு நாளை பரிசுத்தமாக ஆசரிக்க நினைக்க வேண்டும் (யாத்.20:8)
புதிய உடன்படிக்கையின்படி ஏழுநாளும் பரிசுத்தமாகவே ஜீவிக்க வேண்டும். உலகமெங்கும் உள்ள சபை விசேஷமாக கூடி தேவனை ஆராதிக்க இயேசு உயிர்த்தெழுந்த நாளான வாரத்தின் முதலாம் நாளை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். அந்த நாளை தேவனுக்காக ஒதுக்கி, அவரை ஆராதிக்கவும், அவருக்காக ஊழியஞ் செய்யவும் வேண்டும். “என் பரிசுத்தநாளாகிய ஓய்வு நாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மன மகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று” என்று ஏசாயா 58:13,14ல் பார்க்கிறோம். ஓய்வுநாளில் நம் சொந்த விருப்பப்படி எதையும் செய்யக்கூடாது.


இஸ்ரவேலர் எகிப்தில் அடிமையாயிருந்ததையும், அவர்களை தேவன் அற்புதமாய் மீட்ட விதத்தையும் நினைத்து அவருக்கு நன்றி கூறி ஆராதிக்கவே தேவன் ஓய்வு நாளை நியமித்தார் (உபா.5:15). நாம் தேவனை ஏற்றுக்கொண்டு அவருடைய பிள்ளையாக மாறுமுன்பு எப்படி கனமற்ற, துடைத்துப்போடும் குப்பையாக, அடிமையாக இருந்தோம் என்பதை நினைத்து, அவருக்கு நன்றி கூறி அவரை ஆராதிக்க வேண்டும்.
நான்காவதாகதேவனுடைய நேசத்தை நினைக்க வேண்டும் (உன்.1:4)
“திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்” என்று உன்.1:4ல் பார்க்கிறோம். நேசத்துக்காக ஏங்கும் மக்கள் அதிகம். மனிதருடைய நேசம் மாறி மறையக்கூடியது. அதனால் ஏமாற்றமே மிஞ்சும். தேவனிடம் நேசத்தை வைக்கும்போது நாம் ஏமாற மாட்டோம். கர்த்தரோ எப்போதும் நம்மேல் நினைவாய் இருக்கிறார். தேவன், தம்முடைய அன்பின் கயிறுகளால் நம்மை இழுத்துக்கொள்கிறார் (ஒசியா 11:4). தம்மையே நமக்காக ஒப்புக்கொடுத்த அந்தத் தியாக அன்பை நாம் எப்பொழுதும் நினைக்க வேண்டும். கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து, அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாக மாற வேண்டுமென்று பவுல் வேண்டிக்கொள்கிறார் (எபே.3:18,19). அறிவுக்கெட்டாத அந்த அன்பை நாம் எப்பொழுதும் நினைக்க வேண்டும். தேவனுடைய அன்பிலே நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும் (யூதா 21). ஆதியில் தேவன் மீது கொண்டிருந்த அன்பை ஒருபோதும் விட்டுவிடக் கூடாது; “நேசம் மரணத்தைப்போல் வலிது” (உன்.8:6) என்று எழுதப்பட்டிருப்பது போல அவருக்காக வைராக்கிய வாஞ்சையாயிருக்க வேண்டும்.

ஐந்தாவதாககிறிஸ்துவினிமித்தம் கட்டப்பட்டிருப்பவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும் (கொலோ.4:18)
கிறிஸ்துவின் சுவிசேஷத்தை தைரியமாய் அறிவிக்க முடியாதபடி கட்டப்பட்டிருக்கிற தேவ மனிதர்களுக்காக, மாநிலங்களுக்காக, நாடுகளுக்காக ஜெபிக்க வேண்டும். சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருப்பவர்களை நினைக்கும்போதுதான் அவர்களுக்காக ஜெபிக்க முடியும். ஆதி அப்போஸ்தலர்கள் கூடி ஜெபித்தபோது சிறைச்சாலையில் கட்டப்பட்டிருந்த பேதுரு விடுவிக்கப்பட்டான் (அப்.12:6-7). பல தேவ தாசர்களின் ஜெபத்தின் பலனாக ரஷ்யா, சீனா போன்ற கம்யூனிச நாடுகளில் சுவிசேஷம் விரைவாக பரவி வருகிறது. இன்று கிறிஸ்துவினிமித்தம் கட்டப்பட்டவர்கள் சிறையிலடைக்கப்பட்டவர்கள் பலர் உண்டு. அவர்களை நினைத்துத் திறப்பிலே நிற்க வேண்டும். “கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று…. அறிந்திருக்கிறேன்” (அப்.20:23) என்று பவுல் கூறுகிறார். இப்படிப்பட்ட தேவ மனிதர்களை, மிஷனரிகளை நாம் நினைக்க வேண்டும். அவர்களுடைய தியாகங்களை நாம் நினைக்க வேண்டும்.


தேவன் நினைத்துக்கொள்ளும்படி கூறும் காரியங்களில், எந்த காரியங்களை நினைக்கத் தவறியிருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்து அதை சரி செய்வோமாக!






Author

You May Also Like…

Share This