என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

Written by Pr Thomas Walker

January 4, 2019

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே!
    இந்த புதிய ஆண்டில் தேவன் பெரிய காரியங்களை நம் வாழ்வில் செய்வார். நமது சுவிசேஷ வேலையைப் பெருகச் செய்து கிராமங்களில் சபைகள் ஏற்படச் செய்வார். ஞாயிறு பள்ளிகளில் மாணவர்களை பெருகச் செய்வார். சபையின் அங்கத்தினர்களின் எண்ணிக்கையைப் பெருகச் செய்வார். ஊழியத்தின் எல்லைகளை பெருகச் செய்து விஸ்தாரமாக்குவார். மிஷனெரி பணித்தளங்கள் விரிவடைந்து ஆத்துமாக்களை அநேகர் இரட்சிப்பைக் கண்டுகொள்ள உதவிசெய்வார். தேவ சமூகத்தில் நம்பிக்கையுடன் இலக்கு வைத்து ஜெபித்து முன்னேறுவோம். இந்த ஆண்டு நற்பணியின் ஆண்டு.
தேவன் யோவேல் 2:26 வசனத்தில் “என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை” என்கிறார். மேலும் பிலி.1:20 வசனத்தில் “நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப் போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப் படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும்” என்று பவுல் கட்டுகளிலும், காவலிலும் இருப்பதைக் குறித்து வெட்கப்படவில்லை என்கிறார். 2தீமோ.1:8 வசனத்தில் “…அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவ வல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி” என்கிறார். தீமோத்தேயு தன்னுடைய கட்டுகளைக் குறித்து வெட்கப்படாமல் சுவிசேஷத்திற்காக தன்னைப் போல தீங்கநுபவிக்க வேண்டும் என்கிறார். ரோமர் 1:16ல் “கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்” என்கிறார்.
ஏசா.50:9 வசனத்தில் கர்த்தர் துணை செய்கிறார், ஆதலால் நீ வெட்கப்படுவதில்லை. என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? என்கிறார்.

நாம் வெட்கப்படாதிருக்க வேண்டுமானால் செய்ய வேண்டியவை எவை? என்று பார்ப்போம்
1.
சங்.34:5 “அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை:
வானத்துக்கு நேராக நீங்கள் நோக்கிப் பார்த்து ஜெபிக்கும்போது, வெட்கப்படுவதே இல்லை. உதாரணமாக, எலியா வானத்தை நோக்கிப் பார்த்து ஜெபித்தபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கியது. 450 பாகால் தீர்க்கதரிசிகளும் எலியாவினால் வெட்டப்பட்டனர். பாகால் தீர்க்கதரிசிகள் 450 பேர்களும் எலியாவுக்கு முன்பாக நிற்கமுடியாமல் வெட்கப்பட்டுப் போனார்கள் (1இராஜா.18:22-40).

2. ஏசா.49:23 “நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை…”
ஏசா.49:23 வசனத்தில் நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய் என்றார். லூக்கா 2:25ஆம் வசனத்தில் சிமி யோன் மேசியாவை காணுமுன்னே மரணமடைய மாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அறிவிக்கப்பட்டு, இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாய் காணப்பட்டான். அவன் வெட்கப்பட்டு போகவில்லை. மேலும் ஏசா.40:31 வசனத்தில் “கர்த்தருக்குக் காத்திருக்கிற வர்களோ புதுப்பெலன் அடைவார்கள்” என்கிறார்.

3. சங்.119:6 “நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை
நாம் தேவனுடைய கற்பனைகளை மதித்து நடக்கும்போது நாம் வெட்கப்படுவதில்லை. கர்த்தருடைய வசனத்திற்கு நடுங்குகிறவனையே நோக்கிப் பார்க்கிறார். சங்.119:98-100 வசனங்களில் பார்க்கும்போது, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தியானிக்கும் போது சத்துருக்களிலும் அதிக ஞானத்தையும், போதித்தவர்களெல்லாரிலும் அதிக அறிவை யும், முதியோர்களைப் பார்க்கிலும் அதிக ஞானத்தையும் தருவார். கர்த்தருடைய வேதத்தை மதித்து நடக்கிறவர்கள் ஒருநாளும் வெட்கப்படுவதில்லை.

4. சங்.119:80 “நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது
நான் தேவனுடைய பிரமாணங்களை உத்தமமாய் பின்பற்றி வந்தால் ஒருபோதும் வெட்கப்படுவதில்லை. உதாரணமாக எசேக்கியா இராஜா உத்தமமாய் பின்பற்றியதால் மரணத்துக்கு ஏதுவான வியாதியிலிருந்து குணமடைந்தான் (ஏசா.38:1-5). உன்.4:7 வசனத்தில் மணவாட்டியான சபையைப் பார்த்து “என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை” என்கிறார். மணவாட்டி உத்தமியாக வாழ்ந்தால் வருகையின் நாளில் வெட்கப்பட வேண்டியதில்லை.

5. ரோமர் 9:33 “அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை
ரோ.9:33 வசனத்தில் பார்க்கும்போது “அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்கிறார். நாம் விசுவாசத்தோடு அவரை நாம் நம் தேவைக ளுக்காக நோக்கும்போது வெட்கப்படுவதில்லை. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான். அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. மேலும் ரோம.10:11 “அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று” வேதம் சொல்லுகிறது. தேவன் இயேசு கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்தில் விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான். விசுவாசிக்கிறவனுக்கு ஆக்கினை தீர்ப்பு இல்லை. அவரை நம்புகிறவன் வெட்கப்பட மாட்டான்.

6. 2தீமோ.1:12 “…நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை
  2தீமோ.2:12 வசனத்தில் பவுல் இவ்வாறு கூறுகிறார் “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்”. பல பாடுகளை பட்டபோதிலும் பவுல் தான் வெட்கப்பட்டுப் போவதில்லை என்கிறார். 2தீமோ.1:12 “…நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக் கொள்ள வல்லவராயிருக்கிறார்” ஆகையால் எந்த பாடுகளையும், நிந்தையையும் அவருக்காக அனுபவித்தாலும் நான் வெட்கப்பட்டுப் போவதில்லை என்கிறார்.

7. 1யோ.2:28 அவரில் நிலைத்திருந்தால் வெட்கப்படுவதில்லை
   2தீமோ.2:5 வசனத்தில் பார்க்கும்போது “…சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப் படான்” நாம் சட்டத்தின்படி யுத்தம் செய்யாவிட்டால் வெட்கப்படுவோம், தேவ சித்தம் செய்கிறவன் வெட்கப்படுவதில்லை. 1யோ.2:28ல் அவரில் நிலைத்திருந்தால் வெட்கப் படுவதில்லை என்று பார்க்கிறோம். மேலும் யோவா.15:1,2,4 வசனங்களில் அவர் மெய்யான திராட்சச் செடி. அவரில் கனி கொடுக்கிற கொடியை அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி சுத்தம் செய்கிறார். கொடியானது திராட்சச் செடியில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்க முடியாது. அதுபோல நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால் கனி கொடுக்க மாட்டீர்கள் என்கிறார்.
யோவேல் 2:26 வசனத்தில் யோவேல் தீர்க்கதரிசி இவ்வாறு கூறுகிறார் “நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை”.
யோவேல் 2:25 “…வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்” என்று வாக்குப்பண்ணுகிறார்.

யாத்.10:5 வசனத்தில் “தரை காணாதபடிக்கு அவைகள் (வெட்டுக்கிளிகள்) பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற  செடிகளையெல்லாம் தின்றுபோடும்” அப்படி வெட்டுக்கிளியி னாலும், கல்மழையினால் விளைச்சலின் பலன் சேதப்படுத்தலும், நம்முடைய நஷ்டங்களை யெல்லாம் திரும்பவும் கொடுத்து நம்மை மகிழ்ச்சியாக்குவார். துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு ஈடாக நன்மையும் கிருபையும் இவ்வாண்டில் நம்மைத் தொடரும்படி வழிநடத்து வாராக. அவருடைய ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. ஆமென்! அல்லேலூயா!






Author

You May Also Like…

Share This