கானானின் ஆசீர்வாதங்கள்

Cannan

Written by Pr Thomas Walker

June 21, 2005

ஆபிரகாமை அழைத்த மகிமையின் தேவன் அவனை நோக்கி, “நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார்” (அப்.7:2,3). கானான் தேசத்துக்குப் புறப்பட்டவர்கள் கல்தேயருடைய பட்டணத்தை விட்டது உண்மை. ஆனால் ஆரான்மட்டும் வந்தபோது அங்கேயே இருந்துவிட்டார்கள் (ஆதி.11:31) போகவேண்டிய தூரம் வெகுதூரம். ஆனால் பாதியிலேயே நின்றுவிட்டார்கள். ஆரான் செழிப்பான இடமாக இருந்தபடியால் அங்கேயே தங்கிவிட்டார்கள்.
ஆபிரகாமுடன் பழைய மனிதனுக்கு அடையாளமான அவன் தகப்பன் தேராகு கூட இருந்தான். பழைய புளித்த மா நமக்குள் இருப்பதால் புதிய மனிதனால் கிரியை செய்ய முடியவில்லை. பழைய மனிதன் போதும் போதும் என்று கூறி தேக்கநிலையை உண்டுபண்ணி பயணத்தை தடைசெய்கிறான். வேத வாசிப்பு போதும், தியானம் போதும், ஜெபம் போதும் என்று எல்லாவற்றிற்கும் தடையை உண்டுபண்ணுவதே பழைய மனிதனின் வேலை. பழைய மனிதனைக் களைந்துபோட்டு புதிய மனிதனைத் தரித்துக்கொள்ள வேண்டும். தேராகு ஆரானிலே மரித்தான்.
தேராகு மரித்தபின்பு தேவன் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, “நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” என கட்டளையிடுகிறார் (ஆதி.12:1). நாம் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து புறப்படும்போதே ஆசீர்வாதத்தை சுதந்தரிக்க முடியும். தேவன் ஆபிரகாமுக்கு கானான் தேசத்தை வாக்குப் பண்ணினார். இந்த கானான் தேசம் எப்படிப்பட்டது என்பதை இங்கு ஆராயலாம்.

***முதலாவதாககானான் தேசம் பாலும் தேனும் ஓடுகிற தேசம் (உபா.11:9)
பால் ஒருவருடைய வளர்ச்சிக்கு உதவுகிறது. தேவன் ஒருவரை பெலப்படுத்துகிறது. தேவ வசனத்துடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கையே பாலும் தேனும் உள்ள தேசம். நாம் வளர வேண்டுமானால் திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின் மேல் வாஞ்சையாயிருக்க வேண்டும் (1 பேதுரு 2:3). இயேசு, வேத வசனத்தில் எழுதியிருக்கிறதே என்று கூறி சாத்தானை ஜெயித்தார். தேவனுடைய வசனத்தை தாவீது இரவும் பகலும் தியானித்தான். நாம் தேவனுடைய வசனத்தை நேசிக்க வேண்டும்; அதை வாசிக்க வேண்டும்; அதைக் கைக்கொள்ள வேண்டும். அப்பொழுது நாம் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர முடியும். பரம கானானுக்குள் பிரவேசிக்க முடியும். தேவ வசனம் நம்மை குணமாக்குகிறது; (சங்.107:20), வழுவாதபடி காக்கிறது (சங்.119:9), உயிர்ப்பிக்கிறது (சங்.119:25,107), கால்களுக்கு தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது (சங்.119:105) பேதைகளை உணர்வுள்ளவனாக்குகிறது (சங்.119:130) நம் தேவனுடைய வார்த்தை சமூலமும் சத்தியம் (சங்.119:160).
தேன் ஒருவரை பெலப்படுத்துகிறது. தேவனுடைய வார்த்தைகள் நாவுக்கு தேனைப் போல் மதுரமானவைகள். தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு அந்த மகிமையான பரம கானானுக்குள் பிரவேசிப்போமாக.

***இரண்டாவதாககானான் தேசம் நாம் கடினமாக உழைக்க வேண்டிய தேசம் (உபா.11:10)
இஸ்ரவேலர் எகிப்தில் எளிதாக நீர் பாய்ச்சினார்கள். ஆனால் கானான் தேசத்திலோ கடினமாக உழைக்க வேண்டும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இது ஆவிக்குரிய பிரச்சனைகளை மேற்கொள்ளும் வாழ்வைக் குறிக்கிறது. நம் கைகளின் பிரயாசத்தை சாப்பிட வேண்டும். கடின உழைப்பு மிகவும் அவசியம். சோம்பேறியின் கைகள் தான் வேலை செய்ய சம்மதியாது (நீதி.21:25). சோம்பேறி குளிருக்குப் பயந்து உழ மாட்டான் (நீதி.20:4). பரம கானானுக்குள் பிரவேசிக்கும் நாம் ஒருபோதும் சோம்பேறிகளாக இருக்கக்கூடாது.

***
மூன்றாவதாககானான் தேசம் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ள தேசம் (உபா.11:11)
எகிப்து ஒரு சமபூமி. அங்கு ஏறி இறங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கானானோ பள்ளத்தாக்குகளும் மலைகளும் உள்ள தேசம். இது ஏற்றமும் இறக்கமும் உள்ள வாழ்க்கையைக் குறிக்கிறது. இது அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ள வேண்டிய தேசம் (சங்.84:6). மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் தேவனுடைய கோலும் தடியும் நம்மைத் தேற்றுவதை உணரக்கூடிய தேசம் (சங்.23:4,5). நம் தேவன் பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளைத் திறக்கிறார் (ஏசாயா 41:18). கன்மலைத் தேனினால் நம்மைத் திருப்தியாக்குகிற தேசம். நாம் மலையின் மேல் ஏறும்போது நம் வாழ்க்கை மற்றவர்களுக்கு மறைந்திருக்காது (மத்.5:14). எனவே நமது சாட்சி வாழ்க்கையைக் காத்துக்கொள்ள வேண்டும். மலைகளின் அனுபவம் தனித்து ஜெபம் பண்ணும் அனுபவத்தைக் குறிக்கிறது. இயேசு மலையின்மேல் தனித்து ஜெபம் பண்ணினார் (மாற்.6:46). வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து அந்தப் பரம கானானை சுதந்தரிக்க வேண்டும்.

***நான்காவதாககானான் தேசம் கர்த்தர் விசாரிக்கிற தேசம் (உபா.11:12)
கர்த்தர் நம்மை அனுதினமும் விசாரித்து நமது தேவைகளையெல்லாம் சந்திக்கிற தேசம். கர்த்தர் நம்மை விசாரிக்கிறவரானபடியால் நமது கஷ்டங்கள், பாரங்களை அவர்மேல் வைத்து விடலாம். கர்த்தர் சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிற தேவன் (யோபு 36:6, சங்.140:12). மனிதரால் விசாரிக்கப்படாவிட்டாலும் தேவனால் நாம் விசாரிக்கப்படுவோம்.

***ஐந்தாவதாககானான் தேசம் கர்த்தருடைய கண்கள் நோக்கமாக உள்ள தேசம் (உபா.11:12)
தம்மைப் பற்றும் உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்கு ஏற்ற வேளையில் உதவி செய்ய கர்த்தருடைய கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (2நாளா.16:9). கர்த்தருடைய ஆலயத்தின்மேல் கர்த்தருடைய கண்கள் நோக்கமாயிருக்கிறது (1இராஜா.9:3). மனுஷருடைய நடைகளை சீர்தூக்கிப் பார்க்கும்படி கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (யோபு 34:21). அவருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (யோபு 36:7; சங்.34:15). கர்த்தருடைய கண்கள் நம்மைப் பார்ப்பதை உணர்ந்து அந்த பரம கானானுக்கு நடை பயில்வோமாக.

***
ஆறாவதாககானான் தேசம் கூடாரங்களில் குடியிருக்கும் வாழ்க்கை (எபி.11:9)
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானான் தேசத்திலே ஆபிரகாம் ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களில் குடியிருந்தான் (எபி.11:9). இது ஒரு பரதேசியின் வாழ்க்கை. இங்கு சேர்த்து குவித்து வைக்கும் தொல்லை இல்லை. இது ஒரு கடந்துபோகும் வாழ்க்கை. யாக்கோபு ஒரு கூடாரவாசியாக இருந்தான். தன் முன்னோராகிய பரிசுத்தவான்களுடன் கூடாரங்களில் குடியிருந்தான். கூடார வாழ்க்கை என்பது பரிசுத்தவான்களுடன் குடியிருக்கும் வாழ்க்கை. கூடார வாழ்க்கை கர்த்தரை ஆராதிக்கும் ஒரு வாழ்க்கையைக் குறிக்கிறது. நான் உமது கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன் என்று சங்.61:4யிலும் தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்து வைப்பார் என்று சங்.27:5யிலும் வாதை உன் கூடாரத்தை அணுகாது என்று சங்.91:10யிலும் வாசிக்கிறோம். பரதேசியைப் போல கூடாரங்களில் குடியிருந்தாலும் கர்த்தர் நம்மைக் காக்கிறார்.

***ஏழாவதாககானான் தேசம் காத்திருக்க வேண்டிய தேசம் (எபி.11:10)
ஆபிரகாம் கூடாரங்களில் குடியிருந்தபடியே தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரமுள்ள நகரத்துக்காக காத்திருந்தான். அந்த நகரம் நாம் நித்திய நித்தியமாக வாழும் இடம். ஆபிரகாம் நித்திய நம்பிக்கையுள்ளவனாயிருந்தான். யோபுவிடமும் அந்த நம்பிக்கை இருந்தது. பூமிக்குரிய கூடாரத்தில் வாழ்ந்தாலும் கைவேலையல்லாத நித்திய வீடு நமக்கு உண்டு என்று அறிந்திருக்க வேண்டும் (2கொரி.5:1).
ஆபிரகாம் பஞ்சம் உண்டானபோது தேவன் வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தைவிட்டு எகிப்திற்கு போனபடியால் அவமானப்பட்டான். ஒருபோதும் தேவன் வைத்த இடத்தைவிட்டு போகக்கூடாது. தேவன் எலியாவை போஷித்ததுபோல காகங்களைக் கொண்டு நம்மைப் போஷிக்க வல்லவராக இருக்கிறார். அவர் வைத்த இடத்தில் இருக்கவே நம்மை அழைத்திருக்கிறார். இஸ்ரவேலருக்கு பாலும் தேனும் ஓடும் செழிப்பான கானான் தேசத்தை வாக்குப் பண்ணின தேவன் நமக்குப் பரம கானானை வாக்குப் பண்ணியிருக்கிறார். ஆகையால் நமக்கு நியமிக்கப்பட்ட ஓட்டத்திலே பொறுமையாக ஓடி அந்த பரம கானானை அடைவோமாக.






Author

You May Also Like…

Share This