ஜெப மாதிரி

Written by Susila Walker

February 23, 2021

கனம் ராக்லாண்ட் அவர்கள் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் நம் இந்தியாவின் தென் பகுதியான இடங்களில் ஊழியம் செய்தது நாம் அறிந்ததே. விசேஷமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் இறுதிநாட்களில் பாடுகள், வியாதியோடு தன் தொப்பியில் கஞ்சி வாங்கிக் குடித்து, இவ்வாறு ஊழியம் செய்து மரித்துப்போனார். அவர் கல்லறை இன்றைக்கும் சிவகாசி ஊரில் சாட்சி சொல்லுகிறது. “கோதுமை மணியானது….. செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்” (யோவான் 12:24) என்ற வசனத்தின்படி அநேக தேவ பிள்ளைகள் எழும்பியிருக்கின்றனர் அந்த சிவகாசி ஊரில்.


19ஆம் நூற்றாண்டில் பல பெண் ஊழியர்கள் மேல்நாட்டிலிருந்து வந்து, சிவகாசி பகுதியில் பள்ளிகள் ஆரம்பித்து, அநேக பெண்களை ஆண்டவருக்குள் வழி நடத்தியிருக்கிறார்கள். பெண்களை ஜெப ஜீவியத்திலும், வேத தியானத்திலும் வளருவதற்கு உற்சாகப்படுத்தினார்கள். இந்த மேல்நாட்டு பெண் ஊழியர்களான எல்வின் அம்மா, ஸ்மித் அம்மா போன்றோரால் சிவகாசி பகுதியில் பெண்கள் மத்தியில் பெரிய எழுப்புதல் உண்டானது என்றால் மிகையாகாது.
1884-1939 வரை வாழ்ந்த சிவகாமியம்மாள் தன் கணவன் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவராயிருந்தாலும் இரகசியமாய் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றினார்கள். ஜெப வீராங்கனையாய் வாழ்ந்து தன் பிள்ளைகளை, விசேஷமாய் பெண் பிள்ளைகளை இயேசு கிறிஸ்துவை நேசிக்கும் பிள்ளைகளாய் வளர்ப்பதில் ஜாக்கிரதையாய் இருந்தார்கள். சிவகாமி அம்மாள் இரகசியமாய் ஞானஸ்நானம் எடுத்து, அன்பு அம்மாள் என்ற பெயர் வைத்தார்கள். தனது பெண் பிள்ளைகளை சிறு வயதிலேயே எல்வின் அம்மா மூலம் வேதத்தைக் கற்றுக்கொள்ள உற்சாகப் படுத்தி வந்தார்கள். கணவன் இந்து மதத்தில் தீவிரமாய் இருந்தபடியால் தனது ஆண் பிள்ளைகளைக் கர்த்தருக்குள் வழிநடத்த முடியாத சூழ்நிலை. அன்பு அம்மாள், அரிசி டின், நெல்மூட்டை அடியில் பைபிள், ஜெப புத்தகம், காலை தியானம், மாலை தியானம் இவைகளை மறைத்து வைத்து வாசிப்பார்கள். தன் கணவன் வெளியே சென்ற பின்பு, பிள்ளைகள் பள்ளிக்குச் சென்ற பின்பு சில இரகசிய கிறிஸ்தவ பெண்களுடன் சேர்ந்து ஒரு மணி நேரம் வாசித்து ஜெபிப்பார்கள். அன்பு அம்மாளின் இடைவிடாத ஜெபத்தின் மூலம் இவர்களின் தலைமுறையினர் ஆண்டவரை சேவிக்க அருள் புரிந்திருக்கின்றார்.


அன்பு அம்மாள் தனது பிள்ளைகளையும் தன் கணவர் இந்துவாக இருந்தபடியால் இந்து மதத்தில் உள்ளவர்களுக்கே திருமணம் செய்து கொடுத்தார்கள். இருந்தாலும் அன்பு அம்மாவின் ஜெபத்தால், தன் பெண் பிள்ளைகளின் ஜெபத்தினாலும் பிள்ளைகள் தாங்கள் போன குடும்பங்களில் சாட்சியாய் வாழ்ந்து இயேசுவை வாழ்வில் வாழ்ந்து காட்டி கற்புள்ள நடக்கையால் அன்பு அம்மாளின் பிள்ளைகள் தங்கள் தங்கள் கணவன்மாரை ஆதாயப்படுத்தினார்கள். “கர்த்தருக்கே மகிமை”. அன்பு அம்மாளின் 4ஆவது பிள்ளை செல்லத்தாய் (1908-1983) சிறுவயதிலேயே எல்வின் அம்மாவிடம் வேதபாடம் படித்தார்கள். 2ஆம் வகுப்பு வரை படித்தார்கள். படிப்பே வரவில்லை. ஆனால் வேத பாட பரீட்சையில் மட்டும் முதல் மார்க் எடுப்பார்கள். இதனால் எல்வின் அம்மா செல்லத்தாய் அம்மாவுக்கு முதல் பரிசு கொடுப்பார்கள்.


“…நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத் தாசனாக என்னை உருவாக்கினார்” (ஏசாயா 49:5). இந்த வார்த்தையின்படி செல்லத்தாய் அம்மாவை தெரிந்துகொண்டார் போலும். செல்லத்தாய் அம்மா சிறுவயதிலேயே ஜெபிக்கும் தாய். இவர்களுக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. தன் கணவர் இந்து தெய்வத்தை வழிபட்டு பூஜை செய்பவர்.
“மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்” (எபேசியர் 5:22) என்ற வசனத்திற்கேற்ப செல்லத்தாய் அம்மாள் தன் கணவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து வந்தார்கள். தினமும் மார்கெட் செல்லும்போது தனது அம்மா வீட்டில் வந்து ஜெபித்து வேதம் வாசித்து, பாட்டுப்பாடி தேவனை ஆராதித்து செல்வது வழக்கம்.
1937ஆம் ஆண்டு பலகாரம் செய்யும்போது கையில் எண்ணெய் பட்டதால் கை கொப்பளமாக வீங்கி நீர்கோர்த்து வேதனை அதிகரித்தது.
செல்லத்தாய் அம்மாவின் கணவர் தனது குருவை திருநீர் போட அழைத்து வருகிறேன் என்று சென்றார். செல்லத்தாய் அம்மா தனது தாய் வீட்டுக்குப் போய் ஊக்கமாய் ஜெபித்து டாக்டரிடம் போய் மருந்து கட்டிக்கொண்டு வந்தார்கள். செல்லத்தாய் அம்மா கணவர் குருவை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அந்த குரு செல்லத்தாய் அம்மாவை தூரத்தில் பார்த்தவுடன் “இவர்களிடம் கிறிஸ்து இருக்கிறார்; அவர்களை தொடாதே” என்று கூறுகிறார். அதனால் நான் தொட மாட்டேன் என்று கூறினான். செல்லத்தாய் அம்மாவின் கணவர் “ஆச்சரியப்பட்டு நீ கிறிஸ்தவளா?” என்று கேட்டார். ஆம் என்று செல்லத்தாய் அம்மா கூறினார்கள்.


எனக்கு அன்பானவர்களே! நம்மில் கிறிஸ்துவை மற்றவர்கள் பார்க்கிறார்களா?!!

செல்லத்தாய் அம்மா ஞானஸ்நானம் எடுத்து மேரி செல்லத்தாய் என்று இரகசியமாய் பெயர் வைத்தார்கள். செல்லத்தாய் அம்மாவின் தாய் அன்பு அம்மா மரணப் படுக்கையில் இருந்தார்கள். அன்பு அம்மா தன் பிள்ளைகள் அனைவரையும் அழைத்து நான் இன்று மாலை 5 மணிக்கு மரித்து விடுவேன். ஆண்டவர் எனக்குச் சொல்லுகிறார். வீடு எல்லாம் ஒழுங்கு பண்ணுங்கள் என்றார்கள்.


செல்லத்தாய் அம்மா மட்டும் அதிகம் அழுதார்கள். ஏன் அழுகிறாய் என்று அம்மா அருகில் அழைத்துக் கேட்டார்கள். அம்மா நீங்கள் செத்துப்போய் விட்டால் நான் எங்குபோய் தினமும் வேதம் வாசித்து ஜெபிப்பேன் என்று ஏங்கி ஏங்கி அழுதார்கள். இதை வாசிக்கும் அன்பு சகோதரர் சகோதரிகளே, சங்.42:1ல் மானானது நீரோடையை வாஞ்சித்து கதறுவது போல தேவனே என் ஆத்துமா உம்மை வாஞ்சித்து கதறுகிறது என்ற வார்த்தையின்படி உங்களுக்கு தேவன்மேல் தாகம் உண்டா? சிந்தித்துப் பார்க்க.


அன்பு-அம்மா உடனே தன் மகள் செல்லத்தாய் அம்மாவின் தலையில் கை வைத்து “ஆண்டவரே, இந்த பிள்ளையின் கணவன் உம்மை ஏற்றுக்கொள்ள கட்டாயம் உதவிசெய்யும்” என்று ஜெபித்து, பின்பு, அன்பு-அம்மாள் ஆண்டவர் தனக்குச் சொன்னபடியே அன்று மாலை 5 மணிக்கு மரித்தார்கள்.
செல்லத்தாய் அம்மாவின் கணவருக்கு இவள் கிறிஸ்தவள் என்று தெரிந்தவுடன் 10 வருடம் இந்து மதத்தைப் பற்றி அடிக்கடி போதிப்பார்கள். ஆனாலும் செல்லத்தாய் அம்மா கிறிஸ்துவை விடாமல் பற்றிக்கொண்டிருந்தார்கள். 1944ஆம் வருடம் செல்லத்தாய் கணவன் புன்னவன்னனுக்கு பவுந்திரம் என்ற நோய் வந்தது. மதுரை வடமலையான் ஆஸ்பத்திரியில் காட்டி சிகிச்சைப் பெற்று வந்தார்கள். செல்லத்தாய் அம்மா மகள் மதுரையில் இருந்ததால், ஆஸ்பத்திரியிலிருந்து மகள் வீட்டுக்கு வந்து ஜெபித்து வேதம் வாசிக்க செல்லத்தாய் அம்மா தினமும் சென்றார்கள். இப்படி எந்த சூழ்நிலையிலும் தன் ஆத்துமாவை போஷிக்க செல்லத்தாய் அம்மா மறந்ததே இல்லை. தன் கணவன் சிறிது சுகமானதும் சிவகாசி போனார்கள்.


செல்லத்தாய் கணவன் புன்னவன்னன் தனிமையில் படுத்திருக்கும்போது “இதை எடுத்து வாசி” என்று புன்னவன்னன் அவர்களுக்கு சத்தம் கேட்டது. உடனே பகவத் கீதையை எடுத்து வாசிக்கிறார், கண் தெரியவில்லை. மறுபடியும் ஒரு சத்தம். “அலமாரியில் இரண்டாவது தட்டில் மேலிருந்து 3ஆவது, கீழிருந்து 5ஆவது” என்று சத்தம் கேட்டது. அதை எடுத்துப் பார்த்தால் “க்ஷஐக்ஷடுநு”. திறந்து வாசிக்கிறார், ஒரு தேவதூதன் இவர்களுக்கு விளக்கிக் கற்றுக்கொடுக்கிறார். ஆகிலும் கீழ்ப்படிய மனம் வரவில்லை.


1954ல் புன்னவன்னன் அவர்கள் மனைவி சுகமில்லாமல் வீட்டில் படுத்திருந்தார்கள். வீட்டுக்கு ராஜம்மா சன்னியாசினி அம்மா வீட்டுக்கு வந்து ஜெபித்தார்கள். புன்னவன்னனை அவர்கள் பார்த்து, நீங்கள் இயேசுவை விசுவாசித்தால் உங்கள் மனைவி செல்லத்தாய் சுகமாவார்கள் என்று சொன்னபோது கொஞ்சம் விசுவாசித்தார்கள்.


ஒருநாள் இரவில் தன் மனைவி செல்லத்தாய் படுக்கையைச் சுற்றிலும் 3 தேவ தூதர்கள் சுற்றி வருவதாக தரிசனம் கண்டார். மெய்யாகவே இயேசுவே உம்மை நம்புகிறேன் என்று முழங்கால் படியிட்டார்கள். தன் வீட்டிலிருந்து அனைத்து தெய்வங்களின் படங்களையும் இறக்கி வீட்டிலிருந்து அப்புறப்படுத்தினார்கள். ஞானஸ்நானம் எடுத்து (ராக்லாண்ட் ஆலயத்தில்) தேவ சகாயம் என்று பெயரிட்டார்கள். தேவ சகாயம் அய்யா அன்று முதல் தேவனுக்குச் சாட்சியாய் வாழ்ந்து வந்தார்கள். ஆலயத்தில் தன்னால் முடிந்த அனைத்து ஊழியங்களையும் முன்னின்று செய்தார்கள். தினமும் காலையில் எழுந்தவுடன் தன் வீட்டு வெராண்டா திண்ணையில் பாட்டுப்பாடி தேவனை சாட்சியாய் மகிமைப்படுத்தி வந்தார்கள். மேரி செல்லத்தாய் அம்மா, தேவ சகாயம் இவர்கள் இருவரும் கர்த்தருக்கு ஊழியம் செய்வதிலும், சிவகாசி ஊரில் நற்கிரியைகளில் ஐசுவரியமுள்ளவர்களாயும் இருந்து வந்தனர் என்று சொன்னால் மிகையாகாது.


செல்லத்தாய் அம்மாவும், தேவ சகாயம் அய்யாவும் தன் நாட்களில் ஆக்கில்லா, பிரிஸ்கில்லாவைப் போல ஊழியத்தில் மிகவும் உற்சாகமாய் இருந்தார்கள், கிராம ஊழியங்களுக்கு கிரமமாய் சென்று அனேகருக்கு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை சொல்வார்கள். அநேக ஏழை எளியவர்களுக்கு தங்கள் ஆஸ்தியால் ஊழியம் செய்தார்கள். ஊழியர்களை, போதகர்களை கனம் பண்ண முந்திக் கொண்டார்கள். தேவாலயம் கட்ட பணம் வசூலிப்பதில் செல்லத்தாய் அம்மாவை முந்திவிட யாராலும் முடியாது. இப்படி பலவிதங்களில் கிறிஸ்துவுக்கு சாட்சியாய் சபைக்கு தூண்களாய் வாழ்ந்தார்கள்.


தேவ சகாயம் அய்யா 1983ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதியம் 2 மணிக்கு கர்த்தருக்குள் மரித்தார்கள். அன்று காலையில் தன் மனைவி செல்லத்தாயிடம் “பரிசுத்தப்படுத்திவிட்டேன், பக்குவப்படுத்திவிட்டேன்” என்கிறார் என்று சொன்னார்கள். மதியம் சாப்பிட்டு விட்டு படுக்கையில் படுத்து அமைதியான மரணம் அவர்களுக்கு ஏற்பட்டது.


1983ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி செல்லத்தாய் அம்மாவும் ஆண்டவர் இராஜ்ஜியத்திற்கு சென்றார்கள்.

பாடல்:
வாழ்ந்தால் இயேசுவுக்கு இயேசுவுக்கு
மரித்தால் கிறிஸ்துவுக்கு கிறிஸ்துவுக்கு
உழைத்தால் இயேசுவுக்கு இயேசுவுக்கு
மரித்தால் நம் ஜீவன் கிறிஸ்துவுக்கே.






Author

You May Also Like…

விஞ்ஞானி லூயிஸ் பாஸ்டர் (Scientist Louis Pasteur)(எளிமையும், தாழ்மையுமான ஆவிக்குரிய மனிதன்)

லூயி பாஸ்டர் என்ற விஞ்ஞானி பிரான்சு தேசத்தில் உள்ள பிரபலமானவர்.  அவர் அநேக கண்டுபிடிப்புகளை மருத்துவத்துறையிலும்,...

Share This