வெகு ஜனங்களை இலகுவாய் உயர்த்தும் ஜெபம்

1998ஆம் ஆண்டு, நான் அமெரிக்காவிற்கு, தரக்கட்டுப்பாடு தொடர்பான பயிற்சிக்காக சென்றிருந்தேன். அச்சமயம், டுபாண்ட் செயற்கை நூலிழை மூலம், பெயிண்டிங் பிரஷ் செய்யும் முறையைப் பற்றிக் கேள்விப்பட்டேன். வளர்ந்த நாடுகளில்கூட இவ்வகை பிரஷ்கள் கையினால் தான் செய்யப்பட்டு வந்தன. எனவே அவைகள் மிக அதிகமான விலையில் விற்கப்பட்டும் வந்தன.


அந்நாட்களில், மதுரையில் செல்லூர் பகுதியில் “கைத்தறி தொழில்” நலிவடைந்து கொண்டிருந்தது. வறுமையால் அநேகர் தற்கொலை செய்வதும் வாடிக்கையாகிக் கொண்டிருந்தது. என்னுடைய தகப்பனாரின் சபைக்கு, இவ்வகை குடும்பங்கள் அநேகம் வருவதும், என்னுடையத் தாயார், இவர்களுக்கு உதவி செய்வதற்காக இவர்களுடைய இல்லங்களைத் தேடிச் செல்வதும் வழக்கம். சில சமயங்களில், நானும் என்னுடைய பெற்றோருடன் இவர்கள் வீடுகளைச் சந்தித்தும் இருக்கின்றேன். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் சபையில், “மதுரையில் தொழில்கள்” ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என “என் பெற்றோர்” மன்றாடிய விண்ணப்பங்களையும் கேட்டிருக்கிறேன்.
2002ஆம் ஆண்டிலே நான் “பல் துலக்கும் தூரிகை” (Tooth brush) பற்றிய பயிற்சிக்காக மீண்டும் அமெரிக்கா செல்லவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. அந்த தருணத்தைப் பயன்படுத்தி, நான் துரிதமாக, இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில், எவ்வகை “வர்ண தூரிகைகள்” (Paint Brush) தயாரிக்கப்படுகின்றன? மேலும் எந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன? என்ற தகவல்களைத் திரட்டினேன். என்னுடையப் பணிக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இருப்பினும் “பெயிண்ட் பிரஷ் தயாரிப்பு” தொழில், மதுரைக்கு வந்துவிட்டால், “பல்லாயிரம் குடும்பங்கள்” பிழைக்க முடியும் என்ற எண்ணம் மட்டும் என்னுள் வளர்ந்து வந்தது. இதற்கு என்னுடையப் பெற்றோரும் ஊக்கமளித்து வந்தனர். ஜெபித்து உற்சாகப்படுத்தியும் வந்தனர்.
அந்நாட்களில் பெயிண்ட் பிரஷ் பற்றிய தயாரிப்பு நுணுக்கங்கள் சிக்காகோவில் ஒரு தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமே தெரியும் என்ற சூழ்நிலை. அவர் எனக்கு பயிற்சியளிக்கும் 1 மணி நேரத்துக்கு ரூ.25000 வீதம் ($ 500/hour) 100 மணி நேரங்களுக்கு ரூ.25 லட்சம் தரும்படி கேட்டிருந்தார். என்னுடைய கம்பெனியும் அதற்கு ஒப்புதல் கொடுத்து என்னை அமெரிக்காவிற்கு அனுப்பியிருந்தார்கள்.


நான் அமெரிக்கா சென்றிருந்த சமயம், அந்த நபர் அவர் வாக்களித்தபடி எனக்கு பயிற்சியளிக்க மறுத்துவிட்டார். மேலும் அவர் நான் எனக்கு ஒரு போட்டியாளரை உலகில் உருவாக்க விரும்பவில்லை. இன்று ஒருவருக்கு பயிற்சி கொடுத்துவிட்டால், பின்னாட்களில் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து, பெயிண்ட் பிரஷ்கள் உலகமெங்கும் செல்ல ஆரம்பித்து விடும். “எனக்கும் மதிப்பு” குறைந்துவிடும் என்று கூறி, திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.


நான் கவலைப்படவில்லை. தேவன் நினைத்ததை எவரும் தடைசெய்ய முடியாது என்பதில் உறுதியாய் இருந்தேன். நான் அமெரிக்காவிலுள்ள எங்கள் கம்பெனிக்குச் சென்று, பெயிண்ட் பிரஷ் தயாரிக்கப் பயன்படும் நூலிழைகளைப் பற்றி ஆய்வு செய்தேன். அங்கு அந்த நூலிழைகளின் தன்மைகளைப் பற்றி விவரிக்க பேரறிஞர்கள் இருந்தனர். அவர்களிடம் கற்றுக்கொண்ட அடிப்படையில், புதிய முறையில் “பெயிண்ட் பிரஷ்” தயாரிக்கும் முறைமையைக் கண்டுபிடிக்க தேவன் உதவிசெய்தார். மேலும் பல தொழில் முனைவோரின் தொடர்பினையும் கிருபையாய் கொடுத்தார்.
இன்றைக்கு மதுரை “பெயிண்ட் பிரஷ்” உற்பத்தியில் இந்தியாவிலேயே முதலிடம் வகிக்கிறது. இங்கு செய்யப்படும் பிரஷ்கள், அயல்நாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. 30க்கும் மேற்பட்ட பிரஷ் கம்பெனிகள் உருவாகி, 3000க்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்நிலை நீடித்தால், 2020ஆம் ஆண்டிற்குள் பல்லாயிரம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
மதுரையிலுள்ள “பிரஷ் கம்பெனிகளில்” கண் பார்வையை இழந்தோர், விதவைகள், திக்கற்றவர்கள், திருமணத்திற்காக பணம் சேர்க்க வேண்டிய நிலையிலுள்ள வாலிபப் பெண்கள் என பலதரப்பட்ட எளியவர்கள் பயனடைய கர்த்தர் கிருபை கொடுத்து வருகிறார். இப்படிப்பட்ட மேன்மைகளைக் காண, “என்னுடைய பெற்றோர்” உயிருடன் இல்லாதிருந்தாலும் பரிசுத்தவான்களின் ஜெபங்கள் ஒருநாளும் வீணாய்ப் போகாது என்ற உண்மை மட்டும் புலனாகிறது.
இதைப் போன்ற சாட்சிகளை ஒவ்வொரு பரிசுத்தவான்களின் வாழ்விலும் காண முடியும். தேவன் தேசத்தை அழிக்காதபடி, திறப்பில் நிற்க ஒரு மனிதனைத் தேடுகிறார். ஒருவன் அர்ப்பணித்து முன் வரும்போது, அவனைக் கொண்டு தேவன் பலத்தக் காரியங்களை நடப்பிக்கிறார். தேவன் நம்மைக்கொண்டு செயல்பட, நம்மை ஒப்புக்கொடுப்போம். தேவன் பெரியவர், சர்வ வல்லவர், அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தர். “வெகு ஜனங்களை உயிரோடே காத்திட உங்களை” ஆசீர்வதித்து உயர்த்துவார்.



Author

You May Also Like…

Share This