கர்த்தருக்குள் பிரியமானவர்களே!
தேவன் ஜெபத்தை கேட்கிறவர். உண்மையாய் தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் பலனளிக்கிறார். நம் வாழ்வில் சில காரியங்கள் தடைபட்டுக் கொண்டே போகின்றன. சில காரியங்கள் நமது கைக்கு எட்டினாலும், வாய்க்கு எட்டாமல் நழுவிக்கொண்டே செல்லுகின்றன. நீண்ட நாட்களாய் சுதந்தரிக்க விரும்பிய ஆசீர்வாதங்கள் காலதாமதமாகிக் கொண்டே போகிறது. நாம் எவ்வளவு முயற்சித்தாலும் தேவனின் கரம் நமக்காக செயல்படுவதை நாம் காணவேண்டும். கர்த்தர் நமக்காக காரியத்தை வாய்க்கப் பண்ண வேண்டும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயேசுவின் ஜெப மாதிரியை நாம் பின்பற்றி ஜெபித்தால், நம் ஜெபங்கள் கேட்கப்படுவது உறுதி. எபி.5:7ஆம் வசனத்தில், “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு…”
பலமுறை ஜெபித்தும் பலனில்லாமல் போகலாம். ஆனால் கண்ணீர்விட்டு ஜெபித்தபின்பு பலன் உண்டு. கண்ணீர் சிந்தி ஜெபிக்கும் பழக்கம் இருக்க வேண்டும்.
அழிந்துபோகிற ஆத்துமாக்களுக்காக கண்ணீர் சிந்தும் பழக்கம் இருக்கவேண்டும். மனந்திரும்பாத மகனுக்காக ஜெபிக்க வேண்டும், பரிசுத்த ஆவியைப் பெற வேண்டுமே என ஜெபிக்க வேண்டும். இயேசு நமக்கு முன்மாதிரி. பிதாவின் சித்தப்படி ஜெபித்தார். பிதா உடனே ஜெபத்தைக் கேட்க காரணம் இயேசு பலத்த சத்தத்தோடு, கண்ணீருடன் ஜெபித்தார். கண்ணீர் ஜெபத்தின் உண்மையைக் காட்டுகிறது. தாவீது தன் படுக்கையை கண்ணீரால் நனைத்தார். என் கண்ணீரை துருத்தியில் வையும் என்றார்.
இயேசு சிலுவையை சுமந்தவராய் எருசலேமின் தெருக்களில் சென்றபோது ஸ்திரீகள் அழுது புலம்பினார்கள். அவர் எனக்காக நீங்கள் அழாமல், உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள் என்றார். நாம் செடியை தண்ணீரால் வளர்ப்பதுபோல, நம் பிள்ளைகளை கண்ணீரால் வளர்த்துவிட வேண்டும்.
எதற்கு கண்ணீரின் ஜெபம் தேவை?
1) சுவிசேஷ ஊழியத்திற்கு கண்ணீர் ஜெபம் தேவை:
“கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். அள்ளித் தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான். ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பி வருவான்” விதை சுமப்பவன் சுவிசேஷத்தை அறிவிக்கிறவன் கண்ணீரோடு போக வேண்டும். கண்ணீர் ஜெபம் தேவை. பிறகு ஊழியத்துக்குப் போ. பாரம், வாஞ்சை, தாகம் வேண்டும். இத்துடன் கண்ணீராக மாற வேண்டும். மேகம் மழையாக மாற வேண்டுமானால் காற்று மேகத்தில் வீசியவுடன் மழை பெய்கிறது. அதுபோல தேவ அன்பினால் நிரப்பப்படும்போது கண்ணீர் வரும். நதியளவில் கண்ணீர் வழியும். அப்பொழுது ஜனங்கள் மனந்திரும்புவார்கள்.
2) ஜனங்கள் பாழாய் போனதற்காக கண்ணீர் ஜெபம் தேவை:
ஏசாயா 22:4ஆம் வசனத்தில், “ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன்” சீயோன் குமாரத்தி ரட்சிக்கப்பட கண்ணீர் விட்டு ஜெபிக்க வேண்டும். பின்மாற்றமான பிள்ளைகளுக்காக ஜெபிக்க வேண்டும். சிறையிருப்பில் உள்ளவர்களுக்காக ஜெபிக்க வேண்டும், ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேல் ஜனங்கள் சிறைப்படும் என தரிசித்து, தீர்க்கதரிசனமாக சொன்னார். ஆனால் எரேமியா இஸ்ரவேல் சிறைப்பட்ட பின்பு புலம்பி கண்ணீர் வடித்தார். புலம்பல் புத்தகத்தையே எழுதியுள்ளார்.
ஏசாயா 13:6,7ஆம் வசனத்தில், “அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும். ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம்” எரே.13:17ஆம் வசனத்தில், “நீங்கள் இதைக் கேளாமற் போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்”
எரே.14:17ஆம் வசனத்தில், “என் கண்களிலிருந்து இரவும், பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள்”
3) எருசலேமுக்கு வரப்போகும் அழிவுக்காக கண்ணீர் ஜெபம் தேவை:
லூக்கா 19:41 – 44ஆம் வசனங்களில், “அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார்”
இயேசு எருசலேமுக்காக கண்ணீர் விட்டார். நாம் நம் பட்டணத்துக்காக ஜெபித்து, நகரத்தில் கிரியைச் செய்யும் பிசாசுகளைக் கட்டி கிறிஸ்தவ ஆலயங்கள் எழும்ப ஜெபிக்க வேண்டும். நம் பட்டணங்களிலும் பல சபைகள் ஆரம்ப காலத்தில் வந்த மிஷனரிகளால் கட்டப்பட்டது. ஒவ்வொரு பட்டணங்களிலும் ஜனங்கள் அதிலிருந்து தப்ப வேண்டும். கண்ணீர் ஜெபம் தேவை.
4) சபைகளுக்காக கண்ணீரோடு ஜெபிக்க வேண்டும்:
அப்.20:19,31ஆம் வசனங்களில், “வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்தி சொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள்” என்கிறார் பவுல்.
5) அலங்கம் கட்டப்பட கண்ணீர் ஜெபம்:
நெகே.1:4ஆம் வசனத்தில், “இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி:” ஜெபிக்கிறார். பின்னர் அலங்கம் இடிக்கப்பட்டுள்ளது, வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டுள்ளது என்று பாரத்தோடு வாருங்கள் எழுந்து கட்டுவோம் என்று மக்களிடம் கூறி 52 நாட்களில் அலங்கத்தைக் கட்டி முடித்தார் (நெகே.6:16).
அலங்கம் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் இடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் கட்டப்பட வேண்டும். குடும்ப ஜெபம், தனி ஜெபம், தியானம், பாதுகாப்பு தகர்க்கப்பட்டுள்ளது. அதற்காக அழ வேண்டும், ஜெபிக்க வேண்டும், தகர்க்கப்பட்ட இடங்களை சரிசெய்ய வேண்டும்.
6) உலக ஆசைகள், அருவருப்புகள் விலக ஜெபம்:
எஸ்றா 9:14,15ஆம் வசனங்களில், “நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ?” எஸ்றா 10:1ல் “எஸ்றா இப்படி விண்ணப்பம் பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்து கிடந்தான்….”
எஸ்றா 9:1-3ஆம் வசனங்களில், இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும்…. இந்தத் தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. புறஜாதிகளுக்குள் சம்பந்தம் கலந்ததால் எஸ்றா தன் வஸ்திரங்களையும், தன் சால்வையையும் அவன் கிழித்து தன் தலையிலும், தன் தாடியிலுமுள்ள மயிரைப்பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தான்.
7) உத்தமமும், உண்மையுமுமாய் நடக்க கண்ணீர் ஜெபம்:
2 இராஜா.20:3ஆம் வசனத்தில், “ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான் எசேக்கியா மிகவும் அழுதான்.” தேவன் எசேக்கியாவின் கண்ணீரைக் கண்டேன். இதோ நான் உன்னை குணமாக்குவேன் என்று கூறி பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன் என்று கூறி தாவீதின் நிமித்தம் இந்த நகரத்திற்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொன்னார்.
அன்பு நண்பரே! தேவன் நம்முடைய வேண்டுதல்களையும், விண்ணப்பங்களையும் கேட்டு நமக்கு இரங்கும்படி அவர் சமூகத்தில் கண்ணீரோடு மன்றாடுவோம்! கண்ணீரால் அவர் பாதத்தை நனைப்போம்! ஜனத்தின் மீட்புக்காகவும், சிறைப்பட்டு போனவர்களுக்காகவும், சபைகளின் உயிர்மீட்சிக்காகவும் தேசத்தின் எழுப்புதலுக்காகவும், சபை மக்கள் பரிசுத்தமடைந்து உலக ஆடம்பரங்கள் மாயையிலிருந்து விடுபட கண்ணீரோடும், பெருமூச்சோடும் ஜெபிப்போம்! தேவன் மகிமையாய் வெற்றி சிறப்பார். சாத்தானின் சேனை முறியடிக்கப்படும். அல்லேலூயா!